இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்சமயம், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ்7 மற்றும் மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல் கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.
மேலும், பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்6, இசட்4, எம்2 காம்படீஷன், எம்4 கூப், எம்5 காம்படீஷன் மற்றும் எம்8 கூப் போன்ற மாடல்கள் சிபியு முறையில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு பிஎம்டபிள்யூ விற்பனையகங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இதனிடையே, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த சூழலில், பிஎம்டபிள்யூ இந்தியா தனது கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கான பிஎம்டபிள்யூ குழுமம் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார் மாடல்களின் விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலாக இருக்கிறது.