கடன் திட்டத்தில் கார்களை வாங்கி மோசடி செய்யும் சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் புதிய கண்காணிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், குறைந்த அளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே ரொக்க தொகையை செலுத்தி கார்களை வாங்குகின்றனர். பெரும்பாலான கார்கள் விற்பனை கடன் திட்டத்தில்தான் வாங்கப்படுகின்றன.
இந்நிலையில், கார்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களில் முறைகேடுகளும், மோசடிகளும் அதிகரித்து வருகிறது. ஒரு சில வாடிக்கையாளர்கள் கடனுக்கான மாதத் தவணைகளை சரிவர செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுகின்றனர். அவற்றில் அரசியல், ஆயுத பலம் கொண்டவர்களிடம் இருந்து காரையும் மீட்க முடியாமல், கடன் தொகையையும் திரும்ப வசூலிக்க முடியாமல் வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் நஷ்டத்திற்கு தள்ளப்படுகின்றன.
இதனை கருத்தில்கொண்டு, தான் கடன் வழங்கும் அனைத்து கார்களிலும் விசேஷ தொழில்நுட்பம் கொண்ட ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதற்கு டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கார்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், அதனை இந்திய சப்ளையர்களிடம் இருந்து மிக சரியான விலையில் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பரிசீலனை செய்து வருவதாகவும் டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதன் மூலமாக, கார் திருடுபோனால் எளிதாக கண்காணிக்க முடியும். மேலும், திருடு போகும் வாய்ப்பு இருப்பதை வைத்து காப்பீட்டு கட்டணமும் கூடுதலாக நிர்ணயிக்கப்படுகிறது. ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு விற்பனை செய்தால், காப்பீட்டு கட்டணம் குறைக்க வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, காரை கடனில் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை கண்டறிவதற்கும், கார் எங்குள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்வதற்கும் கடன் வழங்கும் எங்களது நிறுவனத்திற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பலர் காரை கடனில் வாங்கி மாதத் தவணைகளை செலுத்தாமல் காரை மறைத்து வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கபடுகிறது. சிலர் விற்பனை செய்தாலும், அந்த கார் எங்கு இருக்கிறது என்பதையும் கண்டறிய இந்த சாதனம் உதவும் என்று டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் கருதுகிறது.
இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு டொயோட்டா கார்களுக்கு, டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் மூலமாகவே கடன் வசதி செய்து தரப்படுவது குறிப்பிடத்தக்கது.