இந்திய சந்தையில் இருந்து போலோ ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் இருந்து விலகிக்கொள்ளப்படவுள்ளதை அடுத்து, புதிய எடிசனை அறிமுகம் செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்தது. அதற்கு அடுத்தாண்டில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த கார் தான் ஃபோக்ஸ்வேகன். பல்வேறு ப்ரீமியம் தர அம்சங்கள், பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் இந்த கார் விற்பனைக்கு வந்தது.
மொத்தம் 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இது இந்திய சந்தையில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் போலோ காரின் லெஜெண்ட் எடிசனை (Legend Edition) தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் உள்ளது. இது 109 பிஎச்பி பவர் மற்றும் 175 என்.எம் டார்க் திறனை வழங்கும். 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்த காருக்கு பாடி கட்டமைப்பில் கிராஃபிக்ஸ் டிசைன் உள்ளது. இதனால் ஃபோக்ஸ்வேகன் போலோ லெஜெண்ட் ஸ்போர்டியான தோற்றத்தில் உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ வேரியண்ட் ரூ. 10.25 லட்சம் ஆரம்ப விலையில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு வந்துள்ளது.