வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆவினில் விற்பனை அதிகரிப்பு : அமைச்சர் நாசர் மகிழ்ச்சி
ஆவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு விற்பனை நடந்துள்ளதாகப் பால்வளத் துறை அமைச்சர் நாசர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று (நவம்பர் 3) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஏறக்குறைய 900டன் ஆவின் நெய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 600 டன் தான் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று ஆவின் ஸ்வீட் கடந்த முறை 270 டன் தான் விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 400 டன் விற்பனை செய்துள்ளோம். இதன் மதிப்பு 83 கோடி ரூபாய். கடந்த ஆண்டு வெறும் 55 கோடி ரூபாய்க்குத் தான் விற்பனையானது எனக் குறிப்பிட்டார். ரசகுல்லா, குலாப் ஜாமுன், அல்வா, மைசூர்பாக்கு ஆகியவை தயாரித்து வந்தோம்.
ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும் என ராஜஸ்தானிலிருந்து இனிப்பு தயாரிப்பவர்களை அழைத்து வந்து, சுவை குறையாத அளவுக்கு இனிப்பு செய்து வினியோகித்திருக்கிறோம். கடந்த முறை தீபாவளி முடிந்து 8 டன் அளவிளான ஸ்வீட் வீணானது. ஆனால் இந்த முறை தேவை அதிகரித்துள்ளது. விவசாயிகள் 4.30 லட்சம் பேர் பால் கொடுக்கிறார்கள்.
அவர்களுக்கு வழங்கக்கூடிய நிலுவையில் இருந்த தொகை 330 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறோம். அரசுத் துறை சார்ந்த அனைவரும் ஆவினில் தான் ஸ்வீட் வாங்கியுள்ளனர். எங்களால் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது. மற்ற இடங்களில் ஸ்வீட் வாங்கும் போது, சுவையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பலவிதமான கெமிக்கலை கலப்பார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பால், நெய், சர்க்கரை, கடலை மாவு என ஸ்வீட் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களைக் கூட்டுறவுத் துறையிலிருந்து பெற்றுத் தயாரித்தோம்.
லாபநோக்கு இல்லாமல் ஒரு சேவையாக இந்த முறை ஸ்வீட் விற்பனை செய்யப்பட்டது. நான் கூட காசு கொடுத்துத்தான் ஸ்வீட் வாங்கினேன். கடந்த ஆட்சியில் தவறுகள் நடந்து முறைகேடாக டன் கணக்கில் ஸ்வீட் வெளியில் போனது. அந்த தவறு இந்த முறை நடந்துவிடக் கூடாது நான், ஆவின் எம்.டி.உட்பட அனைவரும் உரிய பணத்தை கொடுத்துத்தான் வாங்கினோம்.
ஆவின் பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக அந்நாட்டின் தரச்சான்றிதழ் வாங்க வேண்டும். இந்நடவடிக்கை முடிக்கப்பட்டு அடுத்த வாரம் சிங்கப்பூரில் ஆவின் பொருட்கள் விற்பனையாகவுள்ளது. துபாய்க்கும் கொடுத்திருக்கிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.