இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூட்யூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்துவரும் யூட்யூப் சேனல்களுக்கு எதிராக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக 8 யூட்யூப் சேனல்கள், ஒரு பேஸ்புக் ஐடி, இரண்டு பேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021ன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனலும் அடங்கும். அந்த சேனலுக்கு 55 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனுடன் சேர்த்து கடந்த ஓராண்டில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததாக 102 யூட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஜூலை 22ம் தேதி இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூட்யூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.