இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரொக்கப் பரிவர்த்தனையை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.
2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு என்ற பெயர் உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனால் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கம் ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியது. அதேபோல, ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் மத்திய அரசு அதிகமாக ஊக்குவித்தது. இதைத் தொடர்ந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கின.
மொபைல் போன்கள் மூலமாகவே அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவது, கட்டணம் செலுத்துவது போன்ற வசதிகள் இருப்பதாலும், ரொக்கப் பணத்தை கையில் வைத்துக்கொண்டே அலைய வேண்டிய தேவை இல்லை என்பதாலும் மொபைல் வாயிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் கடந்த சில மாதங்களில் ரொக்கப் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறிப்பிடும்படியாக வளர்ச்சி கண்டுள்ளதாக எஸ் & பி குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின்படி, இந்த ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.10.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரம், இக்காலத்தில் ஏடிஎம் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.9.12 லட்சம் கோடியாக இருந்துள்ளது. அதேபோல, ஏப்ரல் – ஜூன் காலாண்டிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.10.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், ஏடிஎம் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.8.66 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கிறது. இது 5 சதவீதம் வீழ்ச்சியாகும்.
கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் இருந்ததால் ஏப்ரல், மே மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதாக எஸ் & பி குளோபல் நிறுவனத்தின் நிதிப் பிரிவு ஆய்வாளரான சம்பத் ஷர்மா கூறியுள்ளார். இதுபோன்ற காலங்களில் கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட மொபைல் பரிவர்த்தனைகள் செயலிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுகிறது.