நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

மும்பை: வணிக வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததன் பின்னணியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.2,138 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,021 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்திருந்த நிறுவனம், தற்போது லாபத்துக்குத் திரும்பியுள்ளது.

சரக்குப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளில் நிலவிய வலுவான செயல்பாடுகள், வணிக வாகனங்களின் தேவையை உயர்த்தியுள்ளன. இது நிறுவனத்தின் காலாண்டு நிதி முடிவுகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

வாகன விற்பனை 42.7 சதவீதம் உயர்வு

நிறுவனம் முன்னதாக வெளியிட்ட விற்பனை அறிக்கையின்படி, 2026–27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் மொத்தம் 1,35,114 வணிக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் விற்பனை 94,681 வாகனங்களாக இருந்தது. இதன்மூலம் விற்பனை 42.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விற்பனை 30.9 சதவீதம் உயர்ந்து 1,13,982 வாகனங்களாகவும், சர்வதேச விற்பனை 177.3 சதவீதம் உயர்ந்து 21,132 வாகனங்களாகவும் பதிவாகியுள்ளது.

உள்கட்டமைப்பு, இணையவழி வர்த்தகம் கைகொடுத்தன

கட்டுமானம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளின் செயல்பாடுகள் கனரக வாகனங்களின் தேவைக்கு ஆதரவாக இருந்துள்ளன. இணையவழி வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் விநியோகம் சார்ந்த போக்குவரத்து தேவைகளும் நடுத்தர, இலகுரக வணிக வாகன விற்பனைக்கு உதவியுள்ளன.

Exit mobile version