
ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்த தயாரிபில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைபடம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன்.
மே.1-2020 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
சூரரைப் போற்று படம் போல ஜகமே தந்திரமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செய்திகள் வெளியாகின. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் அப்போது மறுத்தார். இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது: திரையரங்குகள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்பவேண்டாம். ஒட்டுமொத்தக் குழுவும் ரகிடரகிட என தனுஷ் பாடுவதைத் திரையரங்கில் காணக் காத்திருக்கிறது என்றார்.
எனினும் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. ஜகமே தந்திரம் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன.
ஜகமே தந்திரம் படத்தை முதலில் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்பது தனுஷின் விருப்பமாக உள்ளது. மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானபோது அதற்கு தனுஷ் ஆதரவு தெரிவித்தார். எனினும் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிடுவது சரியான முடிவாக இருக்கும் எனத் தயாரிப்பாளர் கருதுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பட வெளியீட்டில் குழப்பம் நிலவுகிறது.
மாஸ்டர் படத்துக்குப் பிறகு திரையரங்குகள் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படம் என்பதால் தயாரிப்பாளரின் அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.