வெப் சீரிஸ்களுக்கு எங்க அனுமதியும் அவசியம் – பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை

ராணுவத்தை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்கள், இணைய தொடர்களுக்கு இனி, தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படத்திற்கும், இணைய தொடருக்கும் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதனால் மதம் சார்ந்த மற்றும் ஆபாசம் மிகுந்த காட்சிகள் அதிகளவில் இடம்பெறுவதாகவும், அவற்றிற்கு தணிக்கை அவசியம் எனவும் பல அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில், எக்தா கபூர் தயாரித்துள்ள ‛டிரிபிள் எக்ஸ் அன்சென்சார்டு – சீசன் 2′ என்ற பெயரில் ஒரு இணைய தொடர் வெளியானது. இதில் நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரர் எல்லையில் உள்ள போது அவர் மனைவி வேறொரு ஆணுடன் பழக்கம் வைத்திருப்பது போல் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு காட்சியில் அசோக சக்கர முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ சீருடையைக் கிழிப்பது போல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதையொட்டி தயாரிப்பாளர் மீது முன்னாள் ராணுவ வீரர் டிசி ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு, இனி இவற்றை வெளியிடுவதற்கு முன், தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.ராணுவம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மனதைக் காயப்படுத்தாமல் தவிர்க்கவே இதை வலியுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version