கொரோனா குறித்த அச்சம் வேண்டாம் என நடிகர் அமிதாப் பச்சன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். 77 வயதான அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா என குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா உறுதியானது. லேசான கொரோனா அறிகுறியுடன், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அபிஷேக் மற்றும் அமிதாப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமிதாப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. நெருக்கடியான இந்த இக்கட்டான சூழ்நிலைகளில், வெள்ளை கோட்டில் உள்ள மருத்துவர்கள் கடவுளின் உருவம். அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நமது உயிர்களை காப்பாற்றுகிறார்கள்.
நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொடிய வைரசிலிருந்து அனைவரும் கண்டிப்பாக மீண்டு வருவோம் என கூறியுள்ளார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.