நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு ஆளுநர் மற்றும் திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிவராத்திரி தரிசனத்தை முடித்து விட்டு திரும்பும் வழியில் அதிகாலை 3.30 மணிக்கு நடிகர் மயில்சாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் அவருடைய உயிர் பிரிந்துள்ளது. தூள், பெண்ணின் மனதை தொட்டு, வேதாளம், காஞ்சனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மயில்சாமி. அவரது மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார். சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் இருந்து மயில்சாமி அண்ணனை தெரியும். ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. நிறைய பேருக்கு அண்ணன் உதவி செஞ்சிருக்காரு. மிகப்பெரிய இழப்பு என நடிகர் யோகி பாபு உருக்கமாக தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
திரைத்துறைக்கு மட்டுமல்லாது அவரோடு நெருங்கி பழகிய எங்களுக்கும் இது மிகப்பெரிய இழப்பு; ரொம்ப வெள்ளை மனுசுக்காரர். தீவிரமான எம்.ஜி.ஆர். பக்தன். என்ன சொல்றதுனு தெரில. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மழை, புயல் வந்தபோதெல்லாம் படகு எடுத்துட்டு உதவி பண்ண கிளம்பிடுவாரு. பணம் செலவாகுதுனு சொன்னா, ‘என்னத்த கொண்டு வந்தோம், என்ன கொண்டு போறோம்’னு கேப்பாரு. திரைத்துறையில் நடிகர்கள் தொடர்ந்து இறந்துட்டே இருக்காங்க. வேதனையா இருக்கு என நடிகர் மனோ பாலா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகர்கள் அருண் விஜய், நடிகர் சூரி உள்ளிட்டோ பலரும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.