இயக்குனர் சேரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் தங்கர் பச்சானின் ஒளிப்பதிவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வந்தது. நேற்றோடு இந்த திரைப்படம் வெளிவந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்து விட்டது. பல திரைப்படங்கள் நாம் பார்ப்பதோடு முடிந்து விடும். ஒரு சில திரைப்படங்கள் தான் ஆண்டுகள் பல கடந்தாலும் நம் மனதோடு நீங்கா இடத்தை பிடித்துவிடும். இயக்குனர் சேரனின் திரைப்படங்கள் எப்பொழுதுமே நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் செல்லாது, அந்த வரிசையில் வந்தது தான் பாண்டவர் பூமி.
பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, திரைப்படங்களின் வரிசையில் வந்தது தான் பாண்டவர் பூமி. சேரனின் ஐந்தாவது திரைப்படம் என்பதாலோ என்னவோ படத்தின் பெயரும் ஐந்தைக் குறிக்கும் பாண்டவர் பெயரிலேயே வந்துவிட்டது.
கிராமத்தில் இருந்து பட்டணத்திற்கு செல்லும் விவசாயக் குடும்பம் பல ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் பூர்வீக வீட்டை புதுப்பிப்பதற்காக தங்களுடைய கிராமத்திற்கு குடும்பத்துடன் வருகிறார்கள் என்ற சின்ன புள்ளியில் ஆரம்பிக்கும் கதை, ஆனால் அவர்கள் மனதில் இருக்கும் நினைவுகள், எதிர்கால திட்டம் என்பதெல்லாம் ஒரு ஆலமரத்தின் வேரூன்றிய பலம்.
கிராமத்து விவசாயக் குடும்பத்தை சேர்ந்த ராஜ்கிரண், சந்திரசேகர், கவிதா, ரஞ்சித், ஷமிதா தான் அந்த பாண்டவர்கள். இவர்களின் அம்மாவாக ஆச்சி மனோரமா. அந்த கிராமத்தில் வில்லன் குடும்பமாக வினுச்சக்கரவர்த்தி மற்றும் அவரின் மகன்களாக முகேஷ் திவாரி மற்றும் ஆகாஷ்.
குடும்பத்தின் மூத்த பிள்ளைகளுக்கே உரிய பொறுப்பு, அமைதி, பாசம் என அத்தனை உணர்வுகளையும் தாங்கி நடித்திருக்கிறார் ராஜ்கிரண், அண்ணன் பேச்சை தட்டாத தம்பி தங்கைகள், கடைசி பிள்ளைக்குரிய துடுக்குத்தனத்துடன் ஷமிதா, கோவத்தை நுனி மூக்கில் வைத்து கொண்டு சுத்தும் தம்பி ரஞ்சித் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை நடிக்காமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
வீட்டின் செல்லப்பிள்ளையாக வளரும் ஷமிதா எதிரி குடும்பத்தின் ஆகாஷை விரும்புகிறார், கிராமத்து மக்களுக்கு உரிய முனைப்புடன் அவர்களது காதல் எதிர்க்கப்படுகிறது, சிறிதும் யோசிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஷமிதா அந்த துக்கம் தாங்காமல் உயிர் விடுகிறார் தாய் மனோரமா.
ஷமிதா வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்ததும் ஒரு இரவு முழுவதும் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் காட்சியாகட்டும், மாலையும் கழுத்துமாக வரும் ஷமிதா ஆகாஷை வெட்டிவிட்டு ரஞ்சித் நிற்கும் காட்சியாகட்டும், அந்த கணத்தில் என்ன நடந்தது என உணரக்கூட நேரமில்லாமல் ராஜ்கிரண் திகைத்து நிற்கும் காட்சியாகட்டும் பார்ப்பவர்களின் நெஞ்சம் முற்றிலும் கணத்து தான் போகிறது.
வீடு காட்டும் என்ஜினீயராக வரும் அருண் விஜய், ஆரம்பத்தில் கட்டிடக்கலையின் அவர் காட்டும் ஆர்வம், பின்பு ஷமிதா உடனான நட்பு, ஷமிதா திருமணத்தை பற்றி பாண்டவர் குடும்பத்தாரின் முடிவு தெரிந்து அதிலிருந்து அவரை வெளி கொண்டு வர முயற்சி செய்வது, ஷமிதா உடனான காதல் உணர்வு பின்பு ராஜ்கிரண் கூறும் அவரின் குடும்ப பின்னணி கதையை கேட்ட பிறகு தன் காதலை தியாகம் செய்வது என நடிப்பில் மிளிர்கிறார். இவரா நாம் பார்த்த அஜித்தின் வில்லன் விக்டர் என ஆச்சர்யப்பட வைக்கிறார்.
பாண்டவர்களின் கடைசி தங்கையாகவும் சகோதரி கவிதாவின் மகளாகவும் இரட்டை வேடம் ஷமிதாவிற்கு. கிராமத்து பெண்ணாக அண்ணன்களின் செல்ல தங்கையாகவும், தன் குடும்பத்துக்காக கொலைப்பழி ஏற்று சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் தான் சிறு வயதில் பார்த்த முகம் தெரியாத மாமாவை குடும்பத்திற்காக திருமணம் செய்ய காத்து கொண்டிருக்கும் நகரத்து பெண்ணாகவும் வந்து, அருண் விஜய்யின் நட்பிற்கு பிறகு தன்னுடைய மனக்கலக்கத்தை கண்களிலேயே வைத்துக்கொண்டு நடிப்பில் அசத்தி இருந்தார்.
பாண்டவர்களில் ஒருவராக வரும் கவிதா, பொறுப்பான சகோதரி, தன் குடும்பத்திற்காக சிறையில் இருக்கும் தன் தம்பிக்கு மகளை கட்டி வைக்க வேண்டும் என்ற அளவுக்கு சகோதரர்கள் மீது பாசம். “மாமா எப்படிம்மா இருப்பார், மாமாவுக்கு என்னை பிடிக்குமா” என தன் மகள் முதன் முதலாக கேட்கும் போது ஒரு தாயாக தன் மகளின் மனதில் ஏற்பட்டு இருக்கும் கலக்கத்தையும் அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு பதில் சொல்லும் போது மகள் தாய்க்கான உறவின் புரிதலை அழுத்தமாக காட்டி இருக்கிறார்.
குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம், தங்கையின் துரோகம், தாயின் மரணம், எதிரியுடன் தங்கையின் மணக்கோலம் என அத்தனையும் சேர்ந்து ஒரு நொடியில் சுயத்தை இழந்து தங்கையையும் தங்கையின் கணவனையும் வெட்டி வீசும் ரஞ்சித், பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து தன் குடும்பத்தை பார்க்க வரும் போது அவர் கண்களில் அன்பு, ஏக்கம், கவலை, ஆசை, பெருமை என அத்தனையும் ஒரு சேர நிழலாடுகிறது. ரஞ்சித்தை திருமணம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் நிச்சயித்து வைத்திருக்கும் ஷமிதாவை “நம்ம தங்கச்சி மாதிரி இருக்கானு” அவர் சொல்லி அழும் பொழுது ரோமங்கள் சிலிர்க்கிறது.
நடிகர் விஜயகுமாருக்கு மரியாதைக்குரிய வேடம், சார்லியின் தலைமையில் காமெடி தொகுப்புகள், தங்கர் பச்சானின் ஒளிப்பதிவில் காட்சிகள் இன்றும் மனதில் நிற்கின்றன.
பரத்வாஜின் இசை மற்றும் குரலில் சினேகனின் பாடல் வரியில் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் பாடல் இன்றும் கேட்கும் பொழுது கண்களை கலங்க வைக்கிறது.
2001 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் விருது பாண்டவர் பூமிக்காக இயக்குனர் சேரனுக்கு வழங்கப்பட்டது.
இயக்குனர் சேரன்
சினிமாவில் வியாபார வெற்றிக்காக தன்னுடைய பார்வையை, பாதையை மாற்றாத இயக்குனர்கள் ஒரு சிலர், அதில் தலை சிறந்தவர் நம் இயக்கனர் சேரன்.
சாதி என்னும் கொடிய நோயினை மையமாக வைத்து வந்த ‘பாரதி கண்ணம்மா’, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை முறையை கண் முன் கொண்டு வந்த ‘பொற்காலம்’, சாமானியர்களின் நிலையை அரசியலுடன் பேசிய ‘தேசியகீதம்’ என இவரது படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவின் சொத்து.
சொல்ல மறந்த கதை சிவதாணு, ஆட்டோகிராப் செந்தில், தவமாய் தவமிருந்து ராமலிங்கம், மாயக்கண்ணாடி குமார், சென்னையில் ஒரு நாள் சத்யமூர்த்தி நம்மால் மறக்க முடியாத கேரக்டர்கள்.
சினிமாவை பணத்திற்காக மட்டும் செய்யாமல் மக்களுக்கு ஒரு வாழ்க்கை பாடமாக கொடுத்து கொண்டிருக்கும் இயக்குனர் சேரனின் படைப்புகள் தொடர் செய்தி அலையின் வாழ்த்துக்கள்.