பழம்பெரும் நடிகர் நெடுமுடி வேணு காலமானார்!!

மலையாளம், தமிழ் என தென்னிந்திய சினிமாக்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.

பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக நடித்து அசத்தியிருப்பார். அதைத்தொடர்ந்து அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட பல தமிழ் திரைப்படங்களில் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்.

இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வரும் நெடுமுடி வேணு, 20 வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் இந்தியன் -2 படத்திலும் நடித்து வருகிறார். 1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கேசவன் வேணுகோபால். 1990ல் வெளியான His Highness Abdullah என்ற மலையாள திரைப்படத்தில் குணச்சித்திர நடிகருக்கான பிரிவில் தேசிய விருதை வென்றார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்று சாதித்தவர்.

73 வயதாகும் நெடுமுடி வேணு, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று பின் குணமாகினார். இந்த நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலையை கண்காணித்து வந்த மருத்துவர்கள் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது. அன்னாரது மறைவுக்கு மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினர் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version