கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளியன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் கண்கள் பெங்களுருவில் உள்ள நாராயண நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்ததற்கு பின்னரும் கொடையாளியாகவே மறைந்தார். தானமாக பெறப்பட்ட புனித்தின் கண்களில் கருவிழிகளும், விழித்திரைகளும் 4 பேருக்கு பொருத்தப்பட்டன. நவீன மருத்துவ முறைகள் மூலமாக கருவிழிகள் இரண்டாக பிளக்கப்பட்டு முதல்பாதி ஒருவருக்கும், அடுத்த பாதி மற்றொருவருக்கும் என தலா 4 பேருக்கு அளிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த அறுவை சிகிச்சையில், புனித்தின் கண்கள் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புனித்தின் கண்களை பெற்ற 4 பேரும் பார்வையற்ற கன்னட இளைஞர்கள் என்றும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த 4 அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
புனித் ராஜ்குமாருக்கு முன்னதாக, அவரின் தந்தை ராஜ்குமார் மற்றும் தாய் பர்வதம்மாளும் கண்தானம் செய்துள்ளனர். புனித் ராஜ்குமாரின் கண்கள் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட 4 பேரும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், 4 பேரின் கண்பார்வையும் தற்போது முன்னேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.