டிக் டாக் செயலியில் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ‘டிக் டாக் இலக்கியா’ என்று பட்டமிடப்பட்டு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
தற்போது இவரை கதாநாயகியாக வைத்து ‘நீ சுடத்தான் வந்தியா’ என்று ஒரு படத்தை தயாரித்துள்ளனர். ஆல்பின் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் துரைராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதையும் தணிக்கை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பவே, அங்கும் ஒரு முடிவு எட்டப்படாமல் எட்டு பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இறுதியில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் நடிகர் அருண்குமார்.
அவர் தனது அனுபவம் பற்றி கூறும்போது, “படப்பிடிப்பில் இருந்தபோதுகூட என்னால் நம்ப முடியவில்லை. நாம்தான் படம் எடுக்கிறோமா… நாம்தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இந்த திரைப்படம் மூலம்தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நான் தயாரிப்பாளர் என்பதால் நடிக்க விரும்பவில்லை. பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை. எனவே வேறு வழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்த பின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு, முன் கூத்துப் பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். பிறகுதான் நடிக்க வந்தேன். எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம்தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டார். இயக்குநர் சொன்னபடி நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தார்” என பாராட்டினார்.
கதாநாயகியான இலக்கியா பற்றி ஆயிரம் விமர்சனங்கள் பேசப்பட்டாலும், சமூக ஊடகங்களில் பலவாறாகச் சீண்டப்பட்டாலும், படக் குழுவினருக்கு அவர் தந்த ஒத்துழைப்பைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகையாக அவர் தனது கடமையை முறையாக சரி வரச் செய்தார் என்கிறது படக் குழு.
கதாநாயகியாக நடித்திருக்கும்’ டிக் டாக்’ புகழ் இலக்கியா படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா என்பது எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையும் எனக்குள் இருக்கிறது .
உண்மையில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்பதை புரிந்து கொண்டேன் ” என்றார்.