தெலுங்கு சினிமா உலகில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் கடைசியாக ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். சிரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டனர். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 9-ம் தேதி (இன்று) மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.
இந்நிலையில் ஷூட்டிங் செல்வதற்கு முன்னதாக படப்பிடிப்பில் பங்கேற்கும் குழுவினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
சிரஞ்சீவிக்கு கொரோனா வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.