மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி உள்ள படம் மரைக்கார் அரபிக்கட லிண்டே சிம்ஹம். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது அங்கே அருகில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வந்தார் தல அஜித்குமார். மரைக்கார் பட செட்டுக்கு திடீர் என்று அஜித் வருகை தந்தார் என அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் சமீபத்தில் மரைக்கார் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், அஜித் தங்களது படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்ததையும் மோகன்லால், பிரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர் கலந்துரையாடியதையும் ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அஜித் எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து எங்களுக்கு பெருமை சேர்த்து விட்டார் என்றும் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஆண்டனி பெரும்பாவூர்.
இந்த சந்திப்பு நிகழ்ந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இது விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள மரைக்கார் படத்தை விளம்பரப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.