ஆந்திர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி ரூபாய் அளித்திருக்கிறார் நடிகர் பிரபாஸ்.
சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலை கொண்டதால், திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். திருப்பதி முழுக்க மண் சரிவு ஏற்பட்டது. நூறுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி ரூபாய் அளித்திருக்கிறார். இதற்கு முன்பு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்டோர் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.