பிக்பாஸும் பில்டப்ஸும்!

நம்ம ஊரில் பிக்பாஸ் வெற்றிக்கொடி கட்டி பறப்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சிக்கு கொடுக்கப்படும் பில்டப்புகளும் ரொம்ப அதிகம் என்பதும் உண்மை தான்.

பிக்பாஸ் ஆரம்பிக்க போகிறது என்பதில் இருந்தே இந்த பில்டப்ஸ்சுகள் தொடங்கி விடும். இந்த முறை தொகுத்து வழங்க போவது கமல் இல்லை என்று தான் முதலில் இது ஆரம்பிக்கும். பிறகு கமலின் தரிசனத்துடன் பிக்பாஸ் உறுதி நம்மவரும் உறுதி என ப்ரோமோ வரும். ப்ரோமோ வந்த பிறகு கேட்கவா வேண்டும், அவரவர் விருப்பத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது விஷயம் என அள்ளித் தெளிக்கப்படும்.

சேனலின் அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வரும் வரை யூகங்களின் அடிப்படையில் தினம் ஒரு போட்டியாளர் பட்டியல் வெளிவந்து கொண்டிருக்கும். அதிகாரபூர்வ பட்டியல் வந்த பிறகு போட்டியாளர்களின் வாழ்க்கை குறிப்பு என பல சமூகவலைத்தளங்கள் கிளம்பிவிடும்.

பிக்பாஸ் எபிசோடுகளை விட ப்ரோமோக்களுக்கு அதிக மவுசு. தினமும் காலை ஒன்பது மணியிலிருந்து அன்றைய ப்ரோமோக்காக காத்திருப்பது ப்ரோமோ வந்த பிறகு அதை பற்றி விவாதிப்பது என காலையிலேயே அன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக காத்திருக்கும் படி செய்வது விஜய் டிவிக்கு கை வந்த கலை.

விஜய் டிவிக்கு போட்டியாக அந்த சேனலுக்கு கூட தெரியாத பல ப்ரோமோக்கள் யூட்யூப்பில் வெளி வரும். பல நேரங்களில் ப்ரோமோக்களில் வெளிவரும் காட்சிகளுக்கும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் காட்சிகளுக்கும் துளியும் சம்மந்தம் இருக்காது. காலையிலிருந்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றங்களே மிஞ்சும். இதுவும் ஒரு வகையான பில்டப் சாகசம் தான்!

இதுவரை நடந்த மூன்று சீசன்களில் மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பபட்ட எபிசொட் என்றால் சீசன் இரண்டில் ஐஸ்வர்யாக்கு கொடுக்கப்பட்ட ராணி மகா ராணி டாஸ்க்குக்கு பிறகு வந்த கமலஹாசனின் எபிசொட் தான். விஜய் சேனலும் அதற்க்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் ப்ரோமோ வெளியிட்டது. ஆண்டவர் கோபத்துடன் சட்டைக்கையை மடித்து விடுவதும், பின்னணியில் விருமாண்டி பட பாடல் இசையும் என அன்றைய காலை அதகளப்பட்டது. இதுவரை பிக்பாஸ் பார்க்காதவர்கள் கூட அந்த ப்ரோமோவை நம்பி நிகழ்ச்சியை பார்த்தார்கள். அந்த வாரம் ஐஸ்வர்யா ரெட் கார்டு வாங்கி வெளியேற போகிறார் என தீ பிடித்தது ஆனால் எபிசொட் தொடங்கிய பிறகு நடந்தது எல்லாம் , இந்த மாதிரி எபிசோடுக்கு இப்படியும் பில்டப் கொடுக்கலாம் போல என புருவம் தூக்க வைத்தது.

மூன்றாவது சீசன் வனிதா விஜயகுமார் என்னும் சிங்கிள் பட்டாசை வைத்தே பல பில்டப்புகளுடன் ஓடியது. ஐஸ்வர்யாவை போல் வனிதாவை பிக்பாஸ் காப்பாற்றி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த போது அவரை வெளியேற்றி அவர் இல்லை என்றால் நிகழ்ச்சியை ஓட்ட முடியாது என தெரிந்து அவரை விருந்தினர் போல உள்ளே கொண்டு வந்து பின்பு அவரை வைத்தே முழு நிகழ்ச்சியையும் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி கொண்டு போனார்கள்.

ஜூலியை வீர மங்கையாக களம் இறக்கியது, ஐஸ்வர்யா துத்தாவை கடைசி வரை வெளியேற்றாமல் வைத்து இரண்டாம் பரிசையும் வழங்கியது, தர்ஷன் தான் வெற்றியாளர் என கடைசி எபிசோடுக்கு முந்தைய எபிசொட் வரையும் நம்பிக்கை அளித்தது என அத்தனையும் பல பில்டப்புகளுடன் பிக்பாஸில் அரங்கேறியது.

இன்னும் சில நாட்களில் மீண்டும் பிக்பாஸ் ஆரம்பமாகிறது. உண்மையோ பில்டப்போ நமக்கு ஒரு மூன்று மாதத்திற்கு பேசவும் பகிரவும் ஒரு களம் அமைய போகிறது. பொழுதுபோக்கை நேரத்தை கழிக்க மட்டும் வைத்துக் கொண்டு நமக்கு, நம் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் சிந்தையை வைப்போம்.

Exit mobile version