இன்று டெல்லியில் நடைபெற்று வரும் 67வது தேசிய திரைப்பட விருது விழாவில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் விருது பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் கடந்தாண்டு ஒத்தி வைக்கப்பட்ட இந்த விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட இருக்கிறது.
சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது அசுரன் படத்துக்கும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து கலக்கிய விஜய் சேதுபதி, கே.டி கருப்பு திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால், விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக இசை அமைப்பாளர் டி. இமான், சிறப்பு ஜூரி விருது ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபன் ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக இவர்கள் டெல்லி சென்றுள்ளனர். விழா அரங்கில் தனது மனைவி, மகள், மருமகன் தனுஷுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.