இலங்கையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது எனவும், அந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் தான் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பாக விஜய்சேதுபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழ் அமைப்புகள், பெரியார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
முத்தையா முரளிதரன் முழுக்க முழுக்க ராஜபக்சேவுக்கு ஆதரவாளராக இருந்தவர். தமிழர்களுக்கு எந்த ஆதரவும் கொடுக்காமல் சிங்கள மக்களுக்கு ஆதரவாக இருந்தவர். தமிழகத்தில் இப்படம் வெளியானால் மறைமுகமாக ராஜபக்சேவிற்கு ஆதரவாக அமையும். சினிமா ஊடகத்தின் மூலம் வெளிவரும் தகவல்கள், விடுதலை உணர்வில் பின்னடைவை ஏற்படுத்தும். ஆகவே விஜய் சேதுபதி இவ்வேடத்தில் நடிக்க கூடாது. அதையும் தாண்டி நடித்தால் அந்த படத்தை வெளியிட திரையிட விட மாட்டோம் எனவும் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறினார்.