Happy Birthday Surya: சூர்யாவிற்கு மறக்க முடியாத ட்ரீட்…

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் இன்று. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை (சூரரைப்போற்று) அவர் பெற்றுள்ள நிலையில் இதைவிட சிறந்த பிறந்த நாள்  பரிசு  வேறு இருக்க முடியாது என ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமான சூர்யா, தனது கடின உழைப்பின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.  ‘அகரம்’ பவுண்டேசன் மூலம் கிராம மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் கல்விக்கு ஒளி தீபமாய் உதவி செய்து வருகிறார். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை குறித்து திரையில் மட்டுமல்லாது, பொதுவெளியிலும் தனது கருத்துகளை துணிச்சலோடு கூறக்கூடியவர். சமூக நலப்பணியில் மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும் போது இவர் ஒருபடி மேல் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா குறித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “ஆரம்பத்தில், சூர்யா நடிக்க வந்தபோது, இந்த பையனுக்கு நடிப்பே வரலையே, இவர் எப்படி இந்த சினி உலகத்தில் நிலைத்து நிற்க போகிறார் என்று எண்ணினேன். என்னுடைய அனைத்து நினைப்புகளையும் தூள், தூளாக்கி இன்று நாம் அனைவரும் அன்னாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார். இது ஒருபுறம் இருக்க, 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த  ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றது.

இதுதொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அன்பான வார்த்தைகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் சுதா கொங்காராவின் படைப்புத்திறனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசிய விருது பெறுகிற சுதா கொங்காரா, ஷாலினி உஷாநாயர், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரப்பாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். அன்பும் வழிகாட்டுதலும் தந்து எப்போதும் துணை நிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும்  ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா,தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத்தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி,தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்.இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்ற ஊக்கம் அளிக்கிறது. தேர்வு குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்நிலையில் மம்முட்டி, சிரஞ்சீவி, மாதவன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயிச்சிட்டோம் மாறா! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Exit mobile version