பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் தேவராக நடிக்கும் பஷீரை, இளையராஜா பாராட்டினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணன் இந்தப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உள்ளார்.
இதுகுறித்து தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியபோது,, என்னை பார்த்ததும் நீங்கள் தேவர் போலவே இருக்கிறீர்கள் என்று பாராட்டினார். தேவர் பற்றிய உண்மையான நிகழ்வுகளை படமாக்குவீர்களா என்று கேட்டார். அவரிடம் நாங்கள் உறுதி அளித்தோம். மேலும் தனது முதல் படமாக நினைத்து இதற்கு அற்புதமாக இசையமைத்து தருவதாகவும் இசைஞானி இளையராஜா வாக்களித்தார்” என்றார்.