தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘மாநாடு’… சூப்பர் ஸ்டாருடன் மோத பயமா? தயாரிப்பாளர் விளக்கம்!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறேன். ‘மாநாடு’ முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம், அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக மாநாடு திரைப்படத்தைக் கொண்டுவர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல. நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன்மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது.

அதேபோல் வினியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நஷ்டமடையக்கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும், அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவிருக்கிறது.

நவம்பர் 25-ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. வெளியாகும் மற்ற திரைப்படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version