வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகை வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜா இசையமைத்த பாடலை நீக்க கோரி தாக்கல் செய்த மனு குறித்து வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள மிசஸ் & மிஸ்டர் (MRS & MR) திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மைக்கேல் மதன காமராஜன் படத்திற்காக இசையமைத்த சிவ ராத்திரி என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளையராஜா தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது காப்புரிமை மீறிய செயல் என்றும் உடனடியாக அந்த பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் இளையராஜா மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதோடு அவரின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஶ்ரீதர் மூர்த்தி, எக்கோ நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் அந்த பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காப்புரிமை மீறல் இல்லை என குறிப்பிட்டார். மேலும், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, மனு குறித்து தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version