தந்தைக்கு எச்சரிக்கை விடுத்த தளபதி… என்ன தான் நடக்கிறது நடிகர் விஜய் வீட்டில்?

தளபதி விஜய் ஒரே ஒரு விரலை சொடுக்கினால் போதும் அந்த கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கிறது ஒரு பெரும் ரசிகர் கூட்டம்.அதோடு மட்டும் இல்லாமல் தளபதி விஜய் தனது ரசிகர்களை ஒன்றாக இணைத்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களுக்கும்,பொது மக்களுக்கும் பல நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கவிருப்பதாக ஒரு பரபரப்பான செய்தி வந்தது. செய்தி அந்த சில மணி நேரங்களிலேயே நடிகர் விஜய் அதை மறுத்தார். மேலும் தன்னுடைய ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் அந்த கட்சிக்காக தன்னுடைய பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்தது வேறு யாரோ ஒருவருக்கு அல்ல, தன் சொந்த தந்தைக்கு தான்.

இயக்குனர் SA சந்திரசேகரின் மகன் விஜய்:

சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் இயக்குனர் சந்திரசேகர். சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் திரைப்படங்களையே இவர் அதிகமாக இயக்கியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். கர்நாடக இசை பாடகியான ஷோபாவை மணந்தார். 1992 ஆம் ஆண்டு தன்னுடைய ஒரே மகன் விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு என்னும் திரைப்படத்தை இயக்கினார். அடுத்த ஆண்டில் நடிகர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மகனை வைத்து செந்தூரபாண்டி என்னும் திரைப்படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ரசிகன், போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

விஜய் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கென ஒரு அடையாளம் கிடைத்தது இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படம் தான். அதை தொடர்ந்து இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் , பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதையை திரைப்படங்களில் நடித்தார். காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. 1999 ஆம் ஆண்டு துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்களிடையே காதல் நாயகனாக உருவெடுத்தார் நடிகர் விஜய். இதற்கடுத்து இவர் நடித்த குஷி, பிரியமானவளே, பிரண்ட்ஸ் , பத்ரி, ஷாஜஹான் , யூத், பகவதி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து வெற்றியடைந்தன.

ஆக்சன் ஹீரோவாக விஜய்:

காதல் நாயகனாகவும் சாக்லேட் பாயாகவும் அறியப்பட்ட நடிகர் விஜய் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு திருமலை என்னும் திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கினார். அதன்பிறகு அவர் நடித்த கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி,வேட்டைக்காரன், அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா போன்று அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் ஆக்சன் திரைப்படங்கள் தான். இதில் அழகிய தமிழ்மகன் விஜய் நடித்த முதல் இரட்டை வேட திரைப்படம் ஆகும்.

விஜய்யின் அப்பா SAC:

SAC யின் மகன் விஜய் என்னும் காலம் போய் விஜய்யின் அப்பா SAC என்னும் காலம் வந்தது. விஜய் பொதுவாகவே மிகவும் அமைதியான குணம் கொண்டவர். விழா மேடைகளில் கூட வார்த்தைகள் எண்ணி வைத்தார் போல் பேசி முடித்து விடுவார். அப்படி இருந்த விஜய் தற்போது மேடையில் ஏறினால் அனல் பறக்கிறது. அவருடைய ஓரிரு திரைப்படங்கள் சில அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டதே இதற்க்கு காரணமாக இருக்கலாம். காவலன், நண்பன், துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தார். இதன் பிறகு விஜய் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே அரசியல் பேசியது, அரசியல் கட்சிகளால் விஜய் உற்று நோக்கி பார்க்கப்பட்டார். மெர்சல், சர்க்கார், போன்ற திரைப்படங்கள் திரையில் வர திணறடிக்கப்பட்டன,அரசியல் கட்சிகளால் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன, மதச்சாயம் பூச தயாராக இருந்தன. அரசியல் கட்சிகளால் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரசிகர்கள் தங்கள் தலைவனை தலை மீது தூக்கி வைத்து உச்சிக்கு கொண்டு சென்றனர்.

SAC யின் அரசியல் ஆசை:

விஜய்யின் கவனத்திற்கு செல்லாமலே அவரது தந்தை சந்திரசேகர் கட்சி அறிவிப்பை வெளியிட்டது, அதை சில மணி நேரங்களிலேயே அதை விஜய் மறுத்து மேலும் தந்தைக்கு எச்சரிக்கை விடுத்தது, தன்னிடம் சொல்லாமலே கணவர் தன்னிடம் கையெழுத்து வாங்கினார் என விஜயின் தாயார் அறிவித்தது என கடந்த சில தினங்களாக விஜய்யின் குடும்ப பிரச்சனை ரசிகர்களை தலை சுற்ற வைத்து கொண்டு இருக்கிறது.

விஜய்க்கு தெரியாமல், அவருடைய சம்மதம் இல்லாமல் அவரின் பெயரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தம் SAC க்கு எதனால் வந்தது. தன்னால் வளர்த்து விடப்பட்ட மகனாக இருந்தாலும் சரி, கதாநாயகனாக இருந்தாலும் சரி, தன்னுடைய ஆசைக்கு அவர்களது புகழை உபயோகிக்க நினைப்பது முற்றிலும் தவறான ஒன்று.

விஜய்யின் சம்மதம் இல்லாமல் ஆரம்பிக்கும் கட்சிக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்களா?

சந்திரசேகர் ஆரம்பிக்கும் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொன்ன விஜய், தான் அரசியலுக்கே வர மாட்டேன் என்று இன்னும் சொல்லவில்லையே ஏன்?

Exit mobile version