மீண்டும் ஒரு முந்தானை முடிச்சு

ஏ. வி. எம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் முந்தானை முடிச்சு 1983 ஆம் ஆண்டு வெளி வந்து 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வெற்றிக்கண்டது.

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் உதவி இயக்குனராக இருந்து பின்பு பல படங்களை இயக்கியும், நடித்தும், தமிழ் சினிமா உலகின் உச்சிக்கு சென்றவர் நம் பாக்யராஜ். அவர் இயக்கிய, இயக்கி நடித்த அத்தனை படங்களுமே அருமையான படைப்புகள்.

சுவர் இல்லாத சித்திரங்கள், பாமா ருக்மணி, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு என்ற பாக்யராஜின் தங்க அணிகலனில் வைரம் பதித்தது போல் வந்த படம் தான் முந்தானை முடிச்சு.

கோலிவுட் காட்டில் இது அடைமழை தான் போலும், சில மாதங்களுக்கு முன்பு தான் தேவர் மகன் ரீமேக் செய்தி வெளிவந்து திரை ரசிகர்களை குதூகலப்படுத்தியது, அதை தொடர்ந்து சற்றும் எதிர்பாராத செய்தி முந்தானை முடிச்சு ரீமேக்.

தற்போதைய தகவல்களின் படி இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் பாக்யராஜ் கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஊர்வசி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். திரைக்கதை உலகின் முடிசூடா மன்னன் கே பாக்யராஜ் திரைக்கதை மற்றும் வசனம் எழுத புதுமுக இயக்குனர் பாலாஜி பாலராஜ் இயக்குகிறார்.

ஒரு சின்ன கிராமத்தில் நான்கு சிறுவர்களுடன் சுற்றித்திரியும் துடுக்குத்தனமான பெண், அந்த கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராக மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் வரும் வாத்தியார், அவர் மீது காதல் வயப்படும் பெண் தைரியமாக அவர் மீது குற்றம் சுமத்தி அவரை மணந்து கொள்ளும் விதம், வகுப்பறையில் தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்து கொண்டே பாடம் எடுக்கும் வாத்தியார், அவர் பாடம் எடுப்பதை வேடிக்கை பார்க்க வரும் கிராமத்து பெண்கள், இது எல்லாவற்றிற்கும் மேலாக முருங்கைக்காய் ஸ்பெஷல் என அத்தனை கைதட்டல்கள் வாங்கிய திரைப்படம். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்டால் திரைக்கதை எப்படி இருக்கும் என இப்பொழுதே ரசிகர்களின் ஆவல்களை அதிகமாக்குகிறது.

Exit mobile version