பிரபல பின்னணிப் பாடகர் கே.கே மறைவு- அறைக்கு சென்றபோது நேர்ந்த விபரீதம்..!!

Singer KK
Krishnakumar Kunnath

இசைக் கச்சேரியை முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார். அவருக்கு வயது 53.

டெல்லியில் வசித்து வந்த மலையாளக் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே 3500-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் பாடியுள்ளார். அப்போது கிடைத்த அறிமுகத்தை அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் அவரை காதல் தேசம் படத்தில் பாடவைத்தார்.

அதை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பாடியுள்ள அவர், இந்தி மற்றும் தமிழ் சினிமாக்களில் முன்னணிப் பாடகராக இருந்தார். காக்க காக்க படத்தில் இவர் பாடிய ‘உயிரின் உயிரே’ மற்றும் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் ‘நினைத்து நினைத்து’ ஆகிய பாடல்கள் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மெல்லிசை, மார்டன் மியூசிக், துள்ளல் இசை என பல்வேறு இசைகளில் பாடியுள்ள கே.கே, நேற்று இரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அதை தொடர்ந்து அறைக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். என் “உயிரின் உயிரே” பிரிந்து விட்டதாக ஹாரிஸ் ஜெயராஜ் தனது இரங்கலை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் பாடகர் கே.கே மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version