தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். 1200 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில்,வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி, மறைந்த தயாரிப்பாளர் ராமநாராயணின் மகன், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் நலன் காக்கும் அணி, மற்றும் சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணி அதோடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்பு வகிக்கும் விஷால் தலைமையிலான அணியும் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
1,200 உறுப்பினர்கள் கொண்ட இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது 200 பேர் மட்டுமே படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்,, இதனால், தற்போது தொடர்ச்சியாக படம் எடுத்துவரும் தயாரிப்பாளர்களின் நலனுக்காக புதிய சங்கமொன்றை உருவாக்க இருப்பதாக செய்திகள் வெளியானது..
இந்தச் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராகவும், டி சிவா செயலாளராகவும், சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் செயல்படவுள்ளதாகவும், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது..
இந்தச் செய்தி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. தற்போது இது தொடர்பாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அதில்,
“நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை, அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்..