ஆறு அடி மூன்று அங்குல உயரத்தில் தனக்கென தனி வாய்ஸ் மாடுலேஷனில் ,யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் சினிமாவில் சாதித்த தனி ஒருவன் நடிகர் ரகுவரன்
திரைப்படக் கல்லூரிக்கு வருகை தரும் பேராசிரியராக இருந்த கே. ஹரிஹரன் தான் இயக்கபோகும் படத்திற்கு கதாநாயகனை தேடி கொண்டிருக்கிறார். அப்போது அவர் கண்ணில் படுகிறார் நெட்டையான உருவமும் ஒல்லியான தேகமும் கொண்ட ஒருவர். அவரை பார்த்தவுடன் தன் படத்தின் கதாநாயகன் இவர்தான் என முடிவெடுத்து அவர் இயக்கிய படம் தான் ’ஏழாவது மனிதன்’ . அந்த ஒல்லியான தேகத்துக்கு சொந்தகாரர் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து பின்னாளில் வில்லதனமான நடிப்பில் புது இலக்கணம் வகுத்தவரும், ரசிக்கும் காட்சிகளில் சிக்சர் அடித்தவருமான ரகுவரன்.
ஆறு அடி மூன்று அங்குல உயரத்தில் தனக்கென தனி வாய்ஸ் மாடுலேஷனில் ,யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் சினிமாவில் சாதித்த தனி ஒருவன் நடிகர் ரகுவரன். ரகுவரன் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது, அவருடைய அலட்டல் இல்லாத நடிப்பும், வித்தியாசமான வசன உச்சரிப்பும் தான். வில்லன் என்றால் இரும்பை போல உடல்வாகும் முரட்டு தனமான பார்வையும்தான் என்பதை உடைத்தெரிந்து உடல் மொழியால் அட்டகாசம் செய்து வசீகர வில்லனாக வலம் வந்தவர் ரகுவரன். ஆம் இவரை வசீகர வில்லன் என்று சொல்லலாம். வில்லன் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கிறது என்றால் அது ரகுவரன் செய்த மாயாஜாலம்.
1986 ஆம் ஆண்டு குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. எஸ் பி முத்துராமன் இயக்கி ஏவிஎம். தயாரித்த இந்த தொடரில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில், சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தி இருப்பார் ரகுவரன். ரகுவரனை அடையாளங்காட்டிய முதற்படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. அம்மையப்ப முதலியாரும் அவருடைய மூத்த மகன் சிதம்பரமும் வீட்டுக்குள் மோதிக்கொள்ளும் காட்சியை தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதில் மறந்து விட முடியாது. வசனம் பேசுவதில் வல்லவரான விசுவோடு போட்டி போட்டு நடித்திருப்பார் ரகுவரன். உறவுகளின் முக்கியத்துவம் அறியாமல் காசுக் கணக்கு பார்க்கும் பலரும் ரகுவரனின் உருவில் தம்மை உணர்ந்தனர். ரகுவரனின் பெயர் பரவத் தொடங்கியதும் அப்போதுதான்,
1987 ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலே படத்தில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கம் படத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது.
பிறகு சிறிய படங்களில் நாயகனாகும் வாய்ப்பும் ரகுவரனைத் தேடி வந்தது. ஆர்.சி. சக்தி இயக்கத்தில் ரகுவரன் நடித்த “கூட்டுப் புழுக்கள்” என்ற திரைப்படம் வெற்றியும் பெற்றது. வேலையில்லாக் கொடுமையால் நிறைவேறாக் காதலோடு தளர்ந்து நிற்கும் வேடத்திற்கு ரகுவரன் பிசிறின்றிப் பொருந்தினார். அதன் பின் வி.சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இந்த படங்கள் அவரை நாயகனாகத் தூக்கி நிறுத்தத் தவறின. இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார்.
பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தையைத் தேடி வரும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கெஞ்சாமல் கதறாமல் தன் மகளை வேண்டித் திரியும் தந்தையாக அப்படத்தில் வேறு உயரத்தைத் தொட்டிருப்பார் ரகுவரன்.
1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிர் திரைப்படத்தில் ”ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ” என ஒரு காட்சியில் இதை மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை சொல்லி ஒரு சைக்கோ கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கண்முன் நிறுத்தினார் ரகுவரன்.. அதற்கு முன் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அவன் மேல் சிவப்பு கலர் லைட் லோ ஆங்கிளில் இருந்து அடிக்க அவர் கண்களை உருட்டி பார்ப்பார். ஆனால் இங்கே கதையே வேறு… கோட் சூட் எல்லாம் போட்டு சைக்கோவாக கலக்கி இருப்பார்.. அது மட்டுமல்ல… ஆனந்தபாபுவை ரேகா பார்த்துவிட்டு வந்தவுடன் அவர் அடிக்கும் ரகளையைப் பார்த்து ஆண்கள் கைதட்டியும்… பெண்கள் தங்களுடைய கணவனோடு ஒப்பீடு செய்தும் கொண்டார்கள்.. அந்த அளவுக்கு சைக்கோ கேரக்டரில் ரகளை செய்திருப்பார் ரகுவரன்..
அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டினார்.
ராம்கோபால் வர்மாவின் முதல் படமான சிவா, ‘உதயம்’ என்ற பெயரில் தமிழுக்கு வந்தது. அப்படத்தில் ‘பவானி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரனின் நடிப்பு ஆங்கில படங்களுக்கு இணையானது.
நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த ‘லவ் டுடே’ என்னும் திரைப்படம் ரகுவரன் நடிப்பின் மூன்றாம் பாகம் என சொல்லலாம். பாசத்திற்குரிய தந்தையாக அவர் நடித்தது பார்த்தோரின் கண்களில் நீர்துளிர்க்க வைத்தது.
தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். ரகுவரன் நடித்து அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. தனது கடைசி படத்திலும் நடிப்பில் தனி முத்திரையை பதித்து சென்றார் ரகுவரன்.
அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார்.
குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு. இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார்.
ஹோம் வொர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்துவிட்டு வருவதாகவும் அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது எனவும் சொல்லி இருக்கிறார் ரகுவரன்.
ரகுவரன் நடித்த பல திரைப்படங்களில் ரகுவரனுக்கு பதிலாக வேறுயார் நடித்திருந்தால் அந்த பாத்திரம் பொருந்தியிருக்குமென்று கற்பனை செய்து பார்த்தால் மீண்டும் மீண்டும் ரகுவரன் முகம்தான் வந்துநிற்கும்; ஒரு வில்லனாக, குணச்சித்திர நடிகராக ரகுவரனின் வெற்றி இதுதான். இதற்கு உதாரணமாக வில்லன் நடிகராக பாட்ஷா, முதல்வன், ராஜா சின்ன ரோஜா போன்ற திரைப்படங்களையும் குணச்சித்திர நடிகராக புரியாத புதிர், அஞ்சலி, என் பொம்மைக் குட்டி அம்மாவுக்கு, தொட்டா சிணுங்கி, லவ் டுடே, அமர்க்களம், சிவப்பதிகாரம், யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களையும் குறிப்பிடலாம்.
ரகுவரன் குணச்சித்திர நடிகர்களிலேயே ஒரு ‘மாஸ்’ அந்தஸ்துள்ள நடிகர். உதாரணமாக சிவாஜி திரைப்படத்தில் ரஜினியை உயிர்ப்பிக்கும் டாக்டராக முக்கிய பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார். அந்தக் காட்சியில் முதலில் அமிதாப் நடிப்பதாக ஷங்கர் கூறியிருந்தார், பின்னர் ஏதோ காரணங்களுக்காக அமிதாப் நடிக்க முடியாமல் போகவே ரகுவரன் அதில் நடித்தார். அந்த டாக்டர் வேடத்தை அமிதாப், மம்முட்டி, மோகன்லால் போன்ற சிறந்த நடிகர்கள் நடித்தால் தான் பொருத்தமாக இருக்குமென்பது ஷங்கருக்கு நன்கு தெரியும், இருந்தும் அமிதாப்பிற்கு நிகரான ஷங்கரின் தெரிவு ரகுவரன் என்பதிலிருந்து ரகுவரனின் நடிப்பு மீது ஷங்கர் வைத்திருந்த நம்பிக்கை எத்தனை பெரியது என்பதை தெரிந்து கொள்ளலாம். இப்படி ரஜினியுடனும் ஏனைய கதா நாயகர்களுடனும் நடித்த ரகுவரன் கடைசி வரை கமலஹாசனுடன் நடித்ததில்லை என்பது அதிசயமே.
தனக்கென்றொரு உடல்மொழி, வசன உச்சரிப்பு, மானரிசம் என தனித்துவமாக தன்னை வெளிப்படுத்தும் ரகுவரன் தனது வசன உச்சரிப்பை ஒரே திரைப்படத்தில் ஒரே பாத்திரத்திற்கு காட்சியின் தேவைக்கேற்றாற்போல் ஏற்ற இறக்கமாக மாற்றிமாற்றி பேசுவதில் கில்லாடி. இன்றைக்கு மிமிக்கிரியில் குறிப்பிட்ட சில குரல்களை மிமிக் செய்யும்போது ரசிகர்கள் ஆர்ப்பரிப்பது வழக்கம், அப்படியான குரல்களில் ரகுவரனது குரல் முக்கியமானது, இதிலிருந்து மக்கள் மனதில் ரகுவரனுக்கிருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம். அவரது வசன உச்சரிப்பைபோலவே அவரது சிரிப்பும் தேவைக்கேற்றாற்போல இருக்கும், உதாரணமாக ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னதாக “அப்பன் புள்ள ரெண்டுபேரும் என்னை நீதிபதியாக்கீட்டீங்களேடா” என்ற வசனத்தை ஒரு சிரிப்போடு ரகுவரன் சொல்வார்.
ரகுவரனது திறமைக்கு தமிழ் சினிமா தீனியிட்டுள்ளதா என்றால் அதற்கு 25 வீதம்தான் ஆமென்று பதில் கூறலாம், அற்புதமான நடிகரான ரகுவரனை 75 வீதம் படங்களில் வீணடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனாலும் அந்த 25 வீதமான திரைப்படங்களிலும் ரகுவரன் தன் முத்திரையை பதித்திருப்பார், அவை என்றும் நிலைத்து ரகுவரனது பெயரை தமிழ்சினிமா வராற்றில் காலத்தால் அழியாதவாறு பார்த்துக்கொள்ளும்.
ரகுவரனது நடிப்பு மட்டுமல்ல அவரது உருவம், குரல், மூக்கு கண்ணாடியினூடாக அவரது காந்த கண்கள், அந்த காந்த சிரிப்பு என்றுமே மக்கள் மனதைவிட்டு நீங்காது.
ஒரு முறை ஒரு பத்திரிக்கை பேட்டியில் இப்படி சொல்லியிருப்பார் ரகுவரன்…‘எதுவோ என்னைப் பிடிச்சுக் கட்டி வைக்குது. அப்புறம் அதுவே என்னை அவிழ்த்தும் விடுது. ஒவ்வொருத்தனுக்கும் அவன்தான் பெரிய ரகசியம். காலையில கழுவி விட்ட மாதிரி இருக்குற மனசு சாயங்காலமே சாக்கடை மாதிரி ஆயிடுது. நிரந்தரம்னு எதை நினைக்கிறீங்க நீங்க? மனசு சொல்றதை புத்தி கேட்கும் போதெல்லாம் நான் தொலைஞ்சு போயிருக்கேன். புத்தி சொல்றதை மனசு கேட்கும் போதெல்லாம் திரும்பி வந்திருக்கேன். இங்கே புத்திக்கும் மனசுக்கும் தான் போட்டி. மத்தபடி ரகுவரன் ஜெயிக்கிறதும் இல்லை… தோக்குறதும் இல்லை!’’ என ஒரு ஞானி போல விளக்கமளித்திருந்தார் ரகுவரன்.
வெறும் இருபத்தைந்தாண்டுகளில் முந்நூறு படங்கள் நடித்த ரகுவரன், கூடுதலாக முப்பதாண்டுகள் வாழ்ந்திருந்தால் மேலும் முந்நூறு படங்கள் நடித்திருக்கக் கூடும். அவற்றால் அவர் பன்மடங்கு உயரத்திற்குச் சென்றிருக்கலாம். ஒருவர் என்னவாக வேண்டுமோ அவ்வாறு ஆகாதபடி வீழ்த்துகிறது போதைப் பழக்கம். பெருங்கலைஞர்கள் பலரும் வீழ்ந்த அந்தப் படுகுழியில் ரகுவரனும் வீழ்ந்தார். அவருடைய நடிப்பு மட்டுமில்லை, வாழ்க்கையும் ஒரு படிப்பனை தான்.