தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சசிகுமார். இவர் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மதம் மற்றும் மத நல்லிணக்கத்தை பற்றி பேசிய அயோத்தி திரைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அயோத்தி திரைப்படத்தை பார்த்துள்ளார்.
அயோத்தி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”அயோத்தி, நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு அமைந்த அருமையான கருத்துள்ள திரைப்படம். முதல் படத்தின் மூலமாகவே தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்” என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டுக்கு நடிகர் சசிகுமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.