சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் 2019 ஜனவரி 10 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது பேட்ட திரைப்படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சசிக்குமார், விஜய்சேதுபதி, நஸ்ருதீன்,சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்த படம். இதற்கு போட்டியாக அதே நாளில் வெளியான படம் விஸ்வாஸம். அஜித்குமார், நயன்தாரா, விவேக், ஜெகபதிபாபு, யோகிபாபு, ரோபோ சங்கர் என நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், அவருக்கு பக்க பலமாக சன் தொலைக்காட்சி, பிரம்மாண்ட விளம்பரங்கள் இருந்தும் தமிழகத்தில் பேட்ட சுமார் 50 கோடி ரூபாய்க்கு குறைவாகவே வசூல் செய்தது. இதனை முறியடித்து விஸ்வாசம் வசூல் சாதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்தே ரஜினிகாந்தின் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் சிறுத்தை சிவா பெற்றார்.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அண்ணாத்த திரையிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள ரஜினிகாந்த் சம்பளம் 108 கோடி ரூபாய், இயக்குநர் சிறுத்தை சிவாவிற்கு 18 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டே 220 கோடி என்கின்றனர் கோடம்பாக்கத்தில்.
இதில் கதாநாயகன், இயக்குநர் சம்பளமே 126 கோடி ரூபாய் போக படத்தின் தயாரிப்பு செலவு 94 கோடி ரூபாய். படத்தை தமிழகத்தில் சன் பிக்சர்ஸ் நேரடியாக வெளியிடுகிறது. படம் திரையரங்குகளில் வெளியான மூன்றாவது வார முடிவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.