தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது காதல் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். வரும் அக்டோபர் 6ம் தேதி அவர்களுக்கு 5ம் ஆண்டு திருமண தினம் கொண்டாடவிருந்தனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன.
திருமணத்துக்கு பிறகு சமந்தா தனது பெயருக்கு பின்னால் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்து இருந்தார். சமூக வலைத்தளத்திலும் சமந்தா அக்கினேனி என்றே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் வலைத்தள பக்கத்தில் அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு எஸ் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் குறிப்பிட்டார். இதை வைத்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்று பேசப்பட்டது.
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மிக நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு நானும் நாக சைதன்யாவும் எங்களது கணவன் மனைவி என்ற பந்தத்தை விட்டு தனித்தனியே பிரிந்து செல்வதாக முடிவு செய்துள்ளோம்.
பத்து வருடங்களுக்கும் மேலாக எங்களுக்குள் ஒரு மிகச்சிறந்த நட்பு நீடித்து வருகிறது. எங்கள் இருவருக்கும் இடையில் மிக ஸ்பெஷலான ஒரு பிணைப்பு இருந்ததை நாங்கள் கண்டோம். அதுவே ஒரு பந்தத்தில் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் இருவரும் உணர்கிறோம்.
இந்நிலையில் எங்களது ரசிகர்கள் நலம் விரும்பிகள் மற்றும் மீடியாக்கள் எங்களது இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு பிரைவசியைக் கொடுக்கவும் நாங்கள் இதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்காகவும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று சமந்தா தெரிவித்துள்ளார். இதே போன்றதொரு அறிக்கையை நடிகர் நாக சைதன்யாவும் வெளியிட்டுள்ளார்.
