நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் சிறப்பு செய்தி: சூப்பர்ஸ்டார் முதல் தளபதி வரை செவாலியர் சிவாஜியுடன் திரையில் கைக்கோர்த்த நட்சத்திரங்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் இன்று.

தன்னுடைய முதல் திரைப்படத்தில் சிவாஜி அவர்கள் முதலில் பேசிய வார்த்தை சக்ஸஸ். அன்று தொடங்கிய அவரது சக்ஸஸ் அவர் வாழ்க்கை முழுவதும் அத்தனையும் சக்ஸஸ் தான். பேரறிஞர் அண்ணாவால் கண்டறியப்பட்ட சிவாஜி பிரான்ஸ் தேசத்தின் செவாலியர் விருதை வென்றவர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னையா மண்ராயர் – ராஜாமணி அம்மையாருக்கு நான்காவது மகனாக பிறந்த கணேசன், அவர் ஏற்று நடித்த சத்திரபதி சிவாஜி கேரக்டர் மூலமாக சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்.

சிவாஜி கணேசன் நடிக்கும் போது அவரது கண்கள், புருவம், நெற்றி, மூக்கு, உதடு, கன்னங்கள் என அத்தனையும் தனித்தனியாக நடிக்கும். சிவாஜி சிரித்தால் நமக்கும் சிரிப்பு வரும், சிவாஜி அழுதால் நமக்கும் அழுகை வரும். திரைப்படம் பார்ப்பவர்களின் அத்தனை கவனத்தையும் தன் பக்கம் கட்டிப் போட்டு விடுவார்.

இன்று உடலை வருத்தி நடிக்கும் கமல், சூர்யா, விக்ரம் போன்றோருக்கு முன்னோடியே சிவாஜி தான். ஒவ்வொரு படத்திலும் அத்தனை வித்தியாசங்களை காட்டியிருப்பார். உலகநாயகனின் தசாவதாரத்திற்கு முன்னதாக தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே நவராத்திரி என்னும் திரைப்படத்தில் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இன்று வரை நமக்கு கடவுள் பரமசிவம், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் என நாம் பார்க்காதவர்களின் முகங்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தானே!

எகிப்து அதிபர் கமால் அப்தேல் நாசர் இந்தியா வந்திருந்த போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஆங்கிலேயரை விரட்டி அடிக்கும் ஆவேசமான காட்சியில் நடித்த சிவாஜிகணேசனை காண வேண்டும் என்பதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அனுமதிக்கப்பட்ட சிறப்புக்குரிய நடிகர் சிவாஜிகணேசன் 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து சென்ற முதல் நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.

இத்தனை பெருமைக்குரிய நம் சிவாஜி கணேசன் அவர்கள் அன்றைய காலத்தில் வளர்ந்து வந்த கதாநாயர்களுடன் எந்த வித ஈகோவும் இன்றி அவர்களுடன் இணைந்து திரைக்காட்சிகளை பகிர்ந்து கொண்டார். எடுத்துக்காட்டாக இந்த கட்டுரையில் ஐந்து கதாநாயகர்களை பற்றி காண்போம்.

ரஜினிகாந்துடன் சிவாஜி கணேசன்

சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிகர் திலகமும் இணைந்து ஐந்து படங்கள் நடித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கவை என்றால் படிக்காதவன் மற்றும் படையப்பா. படிக்காதவனில் ரஜினிக்கு அண்ணனாகவும், படையப்பாவில் ரஜினிக்கு அப்பாவாகவும் நடித்திருப்பார். ரஜினி தனக்கானஅத்தனை ஸ்டைல்களையும் பஞ்ச் டயலாக்களையும் சுதந்திரமாக பயன்படுத்தியிருப்பார். படையப்பா திரைப்படத்தில் ரஜினியை அவர் ஸ்டைலை செய்ய சொல்லி சிவாஜி ரசிப்பது போன்ற காட்சி திரைப்படமாக இருந்தாலும் உண்மையாகவே சிவாஜி ரசித்திருப்பார்.

கமல்ஹாசனுடன் சிவாஜி

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படம் தேவர் மகன். கமல் குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் நடித்திருந்தாலும் தேவர்மகன் சிவாஜி – கமல் கெமிஸ்ட்ரி தான் பக்காவாக இருந்த ஒன்று. குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் திரைப்படம் என்றாலும் இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சிவாஜியின் மறைவிற்கு பிறகு கமல் சிவாஜியின் கெட்டப்பில் வந்து நாற்காலியில் அமரும் காட்சி இன்று பார்த்தாலும் புல்லரிக்கும்.

சத்யராஜுடன் சிவாஜி

தனது ஆரம்பக் காலங்களிலேயே பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சத்யராஜ் சிவாஜியுடன் ஒன்பது படங்களில் நடித்துள்ளார். சத்யராஜ் வசன உச்சரிப்பில் எப்போதும் சிறு நக்கலும் நையாண்டியும் இருக்கும், அதற்கும் ஈடுக்கொடுத்து அதற்க்கு மேலாகவே நடித்திருப்பார் நடிகர் திலகம்.

முரளியுடன் சிவாஜி

மறைந்த நடிகர் முரளி சிவாஜியுடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க திரைப்படம் என் ஆச ராசாவே. இதில் முரளிக்கு தந்தையாகவும் நடிகை ராதிகாவுக்கு கணவராகவும் நடித்திருப்பார். இதில் சிவாஜியும் முரளியும் தெருக்கூத்து கலைஞர்களாக நடித்திருப்பார்கள். கிளைமாக்ஸில் வரும் பாடல் காட்சி தந்தையை இழந்து வாடும் ஒவ்வொரு பிள்ளைகளையும் கண்கலங்க வைத்து விடும்.

தளபதி விஜய்யுடன் சிவாஜி

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் திலகமும் கன்னடத்து பைங்கிளி என அறியப்படும் சரோஜாதேவியும் இணைந்து நடித்தது விஜய் கதாநாயகனாக நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் தான். அந்த படத்தில் அவர் விஜயை விஜி என்று அழைப்பது அவ்வளவு அழகாக இருக்கும்.

இந்த திரைப்படங்கள் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் தாவணிக்கனவுகள் திரைப்படத்தின் மேஜர் கேரக்டர், நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்த பூ பறிக்க வருகிறோம் திரைப்படத்தின் தாத்தா கேரக்டர் என அவர் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் அழகாக வாழ்ந்து காட்டி இன்றும் சினிமா கனவுடன் கோலிவுடை நோக்கி வரும் அனைவருக்கும் ஒரு என்சைக்ளோபீடியாவாக இருக்கிறார் நம் நடிகர் திலகம் சிவாஜி.

Exit mobile version