மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரது மகன் சரண் வீடியோ மூலமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

சிறந்த பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தயாரிப்பாளர் என்று பல திறமைகளைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் பணியாற்றியுள்ள எஸ்பிபி கிட்டத்தட்ட 40 பாடல்கள் வரை பாடியுள்ளார்.
அதிக பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார். கன்னடம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது 6 முறை பெற்றுள்ளார்.
மத்திய அரசால் கௌரவிக்கப்படும் மிக உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 12 ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். மேலும், மருத்துவமனையில், எஸ்பிபி பாடிய பாடல்கள் ஒலிக்கப்பட்டது.
இதையடுத்து, எஸ்பிபியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் அப்டேட் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது எஸ்பிபிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், அவருக்கு நெகட்டிவ் என்று தெரியவந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இது குறித்து எஸ்பிபியின் மகன் சரண் கூறுகையில், தொடர்ந்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே அப்பாவின் உடல்நிலை குறித்து நான் அப்டேட் கொடுத்து வருகிறேன். அப்படியிருக்கும் போது இன்று அப்பாவிற்கு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக வதந்தி பரவியது.
பாசிட்டிவ், நெகட்டிவ் என்பது முக்கியமில்லை. தொடர்ந்து அப்பாவின் உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது. இன்னும் மோசமான நிலையில்தான் அதாவது லைஃப் சப்போர்ட்டில் தான் இருக்கிறார். ஆகையால், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் தொடர்ந்து மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகு அப்டேட் வெளியிட்டு வருகிறேன். விரைவில் அப்பா குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
