நடிகர்கள் விஜய்-சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ள நடிகை விஜயலட்சுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான் வசிக்கும் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்பில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். பின்னர் அங்கிருந்து அவர், போரூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர், திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தன்னை மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர் என்றும்,மாஜிஸ்திரேட்டிடம் தற்கொலைக்கு காரணம் சீமானும், ஹரி நாடாரும் தான் என்று கூறியதாகவும், ஆனாலும் சீமான் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் தனக்கு இன்னும் மூச்சித்திணறல் இருப்பதாகவும் முற்றிலும் சரியாகாத நிலையில் யாரோ அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி என்னை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்ப செய்துவிட்டார்கள் என்றும்.அதோடு தான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்றும் தொடர்ந்து சாப்பிடாமல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.