1999 ஆம் ஆண்டு வெளிவந்த சுயம்வரம் திரைப்படம் 23 மணி நேரம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற முதல் திரைப்படமாகும்.
நடிகர் நடிகைகளின் கால்ஷீட் தொடங்கி டெக்னீசியல் வேலைகள் முடிந்து மூன்று மாதத்திலோ ஆறு மாதத்திலோ ஏன் ஒரு வருடம் கழித்து கூட ரிலீஸ் ஆன திரைப்படங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் 1999 ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம் திரைப்படம் ஒரே நாளில் திரைப்படமாக்கப்பட்டது. உலக சினிமாவில் இதுவரை படைத்திடாத சாதனையை இந்த திரைப்படம் சாதித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
கிரிதர்லால் நாக்பால் என்பவரது பெரிய கனவாக இந்த திரைப்படம் இருந்தது இந்த திரைப்படத்தை நம்பி யாரும் முன் வராததால் அவரே இந்த திரைப்படத்தை தயாரித்தார்.
கார்த்திக், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், அர்ஜுன், பாண்டியராஜன், பார்த்திபன், பிரபுதேவா, வினித், விக்னேஷ், நெப்போலியன், மன்சூரலிகான், விஜயகுமார், மஞ்சுளா, குஷ்பூ, ரோஜா, ரம்பா, ஹீரா, கஸ்தூரி, ஐஸ்வர்யா, சுவலக்ஷ்மி, ப்ரிதா என 14 ஹீரோ, 12 ஹீரோயின் வில்லன் நடிகர்கள் காமெடி நடிகர்கள் என்ற பெரிய திரை நட்சத்திரங்களோடு, சுந்தர். சி, கே. எஸ். ரவிக்குமார், ஆர். சுந்தர்ராஜன், அர்ஜுன், பி. வாசு, குரு தனபால், கே. சுபாஷ் , லியாகத் அலிகான், இ. ராமதாஸ், கே. ஆர், ஏ .ஆர். ரமேஷ், ஜே .பன்னீர் செல்வா மற்றும் சிராஜ் என மொத்தம் பதினான்கு இயக்குனர்கள் சேர்ந்து இந்த திரைப்படத்தை இயக்கினார்கள்.
இவர்களோடு சேர்ந்து 19 அஸோஸியேட் இயக்குனர்கள், 45 உதவி இயக்குனர்கள், 19 கேமராமேன்கள், 36 உதவி கேமெராமேன்கள் , 5 டான்ஸ் மாஸ்டர்கள், 140 கோரஸ் டான்சர்கள் என 1453 பேர் இணைந்து இந்த திரைப்படத்தில் வேலை செய்தார்கள்.
தொழில்நுட்பங்கள் அந்த அளவுக்கு வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில் இந்த முயற்சி எப்படி சாத்தியமாயிற்று என இந்த செய்தியில் காண்போம்.
மொத்த படக்குழுவும் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ம் தேதி காலை 6 மணிக்கு ஏ வி எம் ஸ்டூடியோ வந்தது. தமிழ் சினிமா உலகின் ஜாம்பவான்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் படப்பூஜை நடைபெற்றது. படத்தின் மொத்த காட்சிகள் பகுதிகளாக பிரிக்கப்பட்டு இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காட்சிகள் அனைத்தும் முந்தைய நாளில் ஒரே ஒரு தடவை மட்டும் ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தது. கின்னஸ் உலக சாதனை குழுவிலிருந்து இரண்டு பேர்கள் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்தார்கள். சரியாக 7 மணிக்கு அந்த அந்த இயக்குனர்கள் தங்களுடைய குழுவோடு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட படப்பிடிப்பு தளத்திற்கு சென்றடைந்தனர்.
காலை 7 மணிக்கு சுந்தர். சி இயக்கிய பகுதிகள் ஏ வி எம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. 9.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் ரோஜா- பிரபுதேவா காட்சிகள் எடுக்கப்பட்டன. 11 மணிக்கு ஜிப்ஸி டென்ட் கேம்பில் சத்யராஜ்- குஷ்பூ காட்சிகள் எடுக்கப்பட்டன.
1 மணிக்கு அப்பாஸ்- ஹீராவை வைத்து கிண்டியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்த அதே நேரத்தில், பாண்டியராஜ் மற்றும் கஸ்தூரிக்கான காட்சிகள் இயக்குனர் ராமதாஸால் எடுக்கப்பட்டது.
இயக்குனர் பாக்யராஜ் மற்றும் ஊர்வசிக்கான காட்சிகள் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரால் இயக்கப்பட்டது. இந்த காட்சிகளில் மட்டும் அனைத்து நடிகர்களும் பங்கேற்கும்படி வரும் எனவே ஒரு ஒரு நடிகர்களும் தங்களுக்கான காட்சியை முடித்து விட்டு இங்கும் வந்து நடிக்க வேண்டி இருந்தது.
சில நேரங்களில் ஒரு நடிகர் வரும் பொழுது பாக்யராஜ் மற்றும் ஊர்வசிக்கு வேறு ஒருவருடன் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் இது போன்ற நேரங்களில் அவரவர் பகுதிகள் தனித்தனியாக எடுக்கப்பட்டு எடிட்டிங் மூலம் சேர்க்கப்பட்டது.
மதியம் 2.45 மணிக்கு இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில் பிரபு மற்றும் ஐஸ்வர்யாவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்கு வினித் மற்றும் ஹீராவுக்கான பாடல் காட்சிகள் அபு பேலஸில் படமாக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு மொத்த படக்குழுவும் விஜய வாஹினி ஸ்டுடியோவுக்கு வந்தடைந்தார்கள்.
கதைப்படி ஒன்பது ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் என்பதால் அனைவரும் அதற்கான மேக்கப்களுடன் தயாரானார்கள். அதே நேரத்தில் டப்பிங் மற்றும் ரீ ரெகார்டிங் வேலைகளும் நடைபெற்றது. நடிகர்கள் தங்கள் காட்சிகள் முடிய முடிய ஸ்டுடியோவுக்கு சென்று டப்பிங் பேசினார்கள். டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பிரியா ஆனந்த் ஹீரோவுக்கு டப்பிங் பேசினார், அனுராதா ரோஜா, ரம்பா, குஷ்பூ என 3 பேருக்கு டப்பிங் பேசினார்.
நள்ளிரவு 1.30 மணிக்கு கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியது. மொத்த திருமண காட்சிகளும் அதிகாலை 5.30 மணிக்கு படமாக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு சில விஷயங்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு காலை 6.58 மணிக்கு படம் முழுவதும் முடிக்கப்பட்டது.
உலகிலேயே மிக வேகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் மற்றும் அதிக நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என இரண்டு விஷயங்களுக்காக கின்னஸ் புத்தகத்தில் சுயம்வரம் இடம்பெற்றது. இதற்கு முன்போ அல்லது பிறகு இது போன்ற முயற்சி உலக சினிமாவில் எடுக்கப்படவில்லை.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்றைய தொழில் நுட்பங்கள் இல்லாத காரணத்தால் அந்நாளில் இந்த திரைப்படத்தில் எடுக்கப்பட்ட புது முயற்சி மற்றும் சாதனை மக்களை சென்றடையவில்லை.
ஒருவேளை இந்த காலக்கட்டத்தில் இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டால் எந்த கதாநாயகர்கள் நாயகிகள் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.