தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல்.. 8 மாதங்கள் கழித்து தியேட்டரில் வெளியாகின்றன தமிழ் திரைப்படங்கள்

விபிஎப் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரங்களுக்கு மட்டும் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் என, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்கள் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. டிஜிட்டல் புரஜக்சன் நிறுவனங்களான VPF கட்டணம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் வெளியீடு இல்லை என தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள்.

இந்நிலையில் யூ.எஃப்.ஓ மற்றும் க்யூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில் இரண்டு நிறுவனங்களுமே நவம்பர் மாதம் மட்டும் VPF கட்டணம் தேவையில்லை என்று அறிவித்துள்ளன. இதனைதொடர்ந்து, அந்த சமயத்தில் மட்டும் புதிய படங்கள் வெளியிடப்படும் என நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், VPF  கட்டணம் செலுத்தி படங்களை வெளியிடுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். VPF சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்திருக்கிறது.

தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF கட்டணத்தை விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்குப் பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளோம், என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்த தீபாவளிக்கு சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பிஸ்கோத் மற்றும் ட்ரெய்லர் மூலம் பல சர்ச்சைகளை கிளப்பிய இரண்டாம் குத்து ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version