ஒரு காலத்தில் சினிமா உலகத்தின் வளர்ச்சியை முடக்கி போட்டது திருட்டு விசிடி, அதனை தொடர்ந்து நவீன காலத்தின் வளர்ச்சியாக வந்தது தமிழ் ராக்கர்ஸ் என்னும் இணையதளம். இது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிற்கே சிம்ம சொப்பனமாக இருந்தது. திரைப்படம் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸில் திரைப்படம் ஏற்றப்பட்டது. எப்படி முடக்கினாலும் வேறொரு டிஎல்டி மூலமாக வெளி வந்தது பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கே நேரடியாக சவால் விட்டது. யாராலும் இந்த இணையதளத்தை முடக்க முடியாமல் விழி பிதுங்கியே நின்றனர்.
ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் தளத்திலும் தனது கைவரிசையை காட்டி கொண்டு வந்தது.
இப்படி மொத்த திரையுலகத்தையும் மிரட்டி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தற்போது முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்பட்டது எப்படி?
Digital Millennium Copyright Act (DMCA) எனப்படும் காப்புரிமையை காக்கும் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான டிஜிட்டல் புகார்களை அள்ளி கொட்டியுள்ளது அமேசான். இது தமிழ்ராக்கர்சின் அனைத்து TLD-களையும் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN)-ல் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்துள்ளது அமேசான்.
ஆனால் தமிழ் ராக்கர்ஸ் முற்றிலும் முடக்கப்பட்டதா என்பது இனி வரும் காலங்களிலேயே தெரியும். ஏனெனில் இதற்கு முன் பலமுறை தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்பட்டது என தகவல் வெளியாகும் ஆனால் ஒரு சில தினங்களிலேயே வேறொரு வெப்சைட்டின் , மூலம் இந்த கும்பல் திரும்பி வரும்.
எனவே தமிழ் ராக்கர்ஸின் முடக்கம் என்பது முடிவா இல்ல வேறொரு இணையத்தளத்திற்கான தொடக்கமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.