திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்துசெய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார், போனிபாஸ் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் ஆகியோர் வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பில், “மறு உத்தரவு வரும்வரை 50% இருக்கை வசதிகளுடனேயே திரையரங்குகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.


தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில்,” 10%, 30%, 50% என திரையரங்கம் எப்படி இயங்கினாலும் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான செலவீனங்களை கையாள வேண்டும். ஆகவே, கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நொய்டா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆகவே, டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

Read more – விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் என் ஸ்டைலில் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ்!!


நீதிபதிகள், ‘’ஏற்கெனவே 100% இருக்கைகளும் புக் செய்யப்பட்ட திரையரங்குகளிலும், 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; மீதியுள்ள 50% இருக்கைகளுக்கு பதிலாக காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மீதமுள்ள 50 சதவீதத்தினரை அடுத்த காட்சிகளுக்கு அனுமதிக்கலாம் என்று கூறியிருக்கிறது. காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டும் இழப்பை சரிசெய்யாது. நொய்டா, டெல்லி போன்ற மாநிலங்களைப் போல சினிமா கட்டணத்தை உயர்த்த வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Exit mobile version