என் மீதான தனி நீதிபதியின் கருத்துகள் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது- நடிகர் விஜய்

இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க கோரி நடிகர் விஜய தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதை எதிர்த்து விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு,
நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, வரி பாக்கியை செலுத்தும்படி நிபந்தனை விதித்து, அபராத உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண, வரிபாக்கியான 32 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி செலுத்தியாதாகவும், அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய்க்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார். வழக்கு ஆவணங்களில் நடிகர் விஜய், தனது தொழிலை குறிப்பிடவில்லை என உத்தரவில் தனி நீதிபதி கூறியிருப்பதாகவும், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றது என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார்.

வரி ஏய்ப்பு செய்யும் எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல வழக்கு தொடர்ந்த நிலையில், தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு என்றும், நுழைவு வரி சம்பந்தமான வேறு எந்த வழக்கிலும் இதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துபவர், தவறான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கலாம் எனவும், இந்த வழக்கில் இந்த கருத்துக்கள் தேவையில்லை எனவும் வாதிடப்பட்டது.

நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று,
நடிகர்கள் என பொதுப்படையாக க்ருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளதுடன், குற்றவாளி போல காட்டியுள்ளதாகவும் விஜய் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எந்த பிரச்னையுமில்லை என்றும், 2 கோடி செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்மறை கருத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Exit mobile version