“இது நீங்கள் போட்ட விதை”- ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய உலக நாயகனுக்கு சூர்யா நன்றி

‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள். உண்மைக்களம் என்பதால் பார்ப்பவர்கள் மனசாட்சியை உலுக்கியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள படத்தை படக்குழுவினருடன் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன், ” ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு சூர்யா தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version