சின்ன கலைவாணர் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விவேக் (Vivek) கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீரென காலமானார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிறிந்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்ட அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு வந்ததால், இதற்கு தடுப்பூசி காரணமாக இருக்குமோ என்ற பீதி மக்களை அச்சுறுத்தியது. இதனை முன்னிட்டு பல வதந்திகள் பரப்பப்பட்டன.
எனினும், தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என மருத்துவர்கள் தெளிவு படுத்தினர். மேலும், நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா என கண்டறியக்கோரி பொதுமக்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில், அதற்கும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், ‘நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தம் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.’ என கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் தேசியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
AEFI குழு தடுப்பூசி போட்ட பின் நடக்கும் பின்விளைவுகளை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவ குழுவாகும். அந்த குழு வெளியிட்டுள்ள பட்டியலில் விவேக் மாரடைப்பால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. AEFI குழுவின் அறிக்கை இறுதியானது. ஏனெனில் மரணத்திற்கான காரணம் COVID-19 தடுப்பூசியுடன் தொடர்புடையதா என்பதை கண்டறிய இந்த செயல்முறை பல நிலை ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது.
விவேக்கின் ECMO மற்றும் ECG அறிக்கைகள் மாவட்ட AEFI க்கும் பின்னர் மாநில AEFI க்கும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இந்த இரண்டு குழுக்களும் இணைந்து தான் ஒரே முடிவுக்கு வந்ததாகவும் AEFI அதிகாரி ஒருவர் கூறினார்.