இன்று உலக மகள்கள் தினம் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. தந்தை – மகள் என்ற உறவின் புரிதல் ஒரு அழகான காவியம். ‘டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ என்ற வாக்கியம் சமூக வலைத்தளங்களில் இன்றைய அளவில் மிகப்பெரிய ட்ரெண்ட்! ஆம் மகள்கள் என்றுமே அப்பாக்களுக்கு இளவரசிகள் தான்.
மகள்களுக்கு மட்டும் என்ன எத்தனை வயதானாலும் ஏன் கணவனே வந்தாலும் அப்பா தான் அவர்களின் நிஜ ஹீரோ. நம் தமிழ் சினிமா அப்பா மகளுக்கான உறவை போதும் போதும் என்ற அளவுக்கு கொண்டாடி தீர்த்து நம்மை கலங்கடித்து கொண்டு தான் இருக்கின்றது. தந்தை மகள் உறவின் மூலம் நம்மை நெகிழ வைத்த சில காட்சிகளை பார்ப்போம்.
மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்
அன்புள்ள அப்பா……
‘மரகத வள்ளிக்கு மணக்கோலம்’ பாடல் ஒலிபரப்பப்படாத திருமண வீடுகள் இன்று வரை இல்லை. நடிகர் திலகம் சிவாஜி, நதியா, ரகுமான் நடித்த திரைப்படம் அன்புள்ள அப்பா. தாய் இல்லாமல் அப்பாவின் அரவணைப்பில் வளரும் மகள், அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே அளவிட முடியாத அன்பு, மகளின் திருமணம் திருமணத்திற்கு பிறகான பிரிவு, பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் மகள் இந்த காட்சிகளை பார்க்கும் போது மனம் விட்டு கண்ணீர் சிந்தாத தந்தை மகள் எப்போதும் இல்லை.
இரு கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி
மகாநதி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வந்த திரைப்படம் மகாநதி. விதி வசத்தால் பிள்ளைகளை விட்டு பிரியும் தந்தை, சிறையிலிருந்து வெளிவந்ததும் மகளை தேடி மும்பைக்கு செல்லும் காட்சி, மகளை விபச்சார விடுதியில் தேட வேண்டிய நிலைமை, மகள் அங்கே இருந்து விட கூடாதான பதை பதைக்கும் காட்சி, விடுதியின் ஒரு அறையில் தன் முகம் வரையப்பட்ட ஓவியத்தை பார்த்து கமல் உள்ளே செல்வார். தன் தந்தையை பல வருடம் கழித்து பார்க்கும் மகள் ஆனால் அவள் இருக்கும் இடம் அவளை நிலைகுலைய செய்துவிடும். தந்தை தன்னை மீட்டு கூட்டி செல்லும் போது தந்தையின் மார்பில் சாய்ந்து கொள்ளும் மகள், தந்தையை விட ஒரு பெண்ணுக்கு எந்த ஆணால் இத்தனை பாதுகாப்பான உணர்வை தந்துவிட முடியும்.
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு காச்சடிச்சா சூரியனை கைது செய்ய பாப்பாரு!!!!!
அபியும் நானும்
உலகிலேயே மிகவும் கொடுமையான பிரிவு பெண்பிள்ளையை திருமணம் செய்து அனுப்புவது. இதை அபியும் நானும் திரைப்படம் மிகவும் அழகாக எடுத்து சொல்லி இருக்கும். மகளுக்காக தெருவில் திரிந்த பிச்சைக்காரனை வீட்டில் ஏற்றி அவன் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு தந்தைக்கு மகள் மீது அன்பு. சிரித்து கொண்டே பள்ளிக்கு செல்லும் மகளை அழுது அனுப்பி வைக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ், தந்தையிடம் தைரியமாக சொல்லும் மகளாக திரிஷா. மகளுக்கும் தனக்கும் இடையில் வந்த உறவை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் தவிக்கும் காட்சிகள், இறுதியாக நிதர்சனமான உண்மையை புரிந்து கொண்டு மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார். தன் மகளின் பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் கண்ணீர் விடும் போது இப்படித்தானே தன் மனைவியின் தந்தையின் உணர்வும் இருக்கும் என புரிந்து கொள்ளும் போது அத்தனை நெகிழ்வுகள்.
தாயாக தந்தை மாறும் புது காவியம்
தெய்வமகள்
பெரும்பாலான குழந்தைகள் முதலில் பேசும் வார்த்தை அம்மா தான். ஒரு சில குழந்தைகளே அப்பா என்று முதலில் சொல்லும். தெய்வமகள் திரைப்படத்தில் தன் குழந்தை முதன் முதலில் அப்பா என்று சொல்லும் போது விக்ரமின் நடிப்பு அசாத்தியமானது. ஐந்தறிவு உயிருக்கும் அன்பு பொதுவானது, மனவளர்ச்சி குன்றியவராக இருந்தாலும் தன் மகள் மீதான அன்பில் மிஞ்சிவிடும் கேரக்டர். இவரால் குழந்தையை பார்த்து கொள்ள முடியாது என கோர்ட்டில் விவாதம் நடந்துக் கொண்டிருக்கும் போது பேபி சாராவும் விக்ரமும் சைகையில் பேசிக்கொள்வது கண்களை ஈரமாக்கிய காட்சிகளில் முக்கியமான ஒன்று.
கண்ணான கண்ணே
விஸ்வாசம்
தந்தை முகம் பார்த்து வளர்ந்திடாத மகள் தாயிடம் “உங்களிடம் இருக்கும் போது அன்பாக உணர்கிறேன் அவருடன் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறேன்” என்று சொல்லும் தருணம் உலகிலுள்ள அத்தனை பெண்களாலும் உணர்ந்து கொள்ள முடிந்த ஒன்று. தந்தைக் கொடுக்கும் பாதுகாப்பு உணர்வுக்கு என்றும் முதலிடம் உண்டு.
இன்றைய இளம் பெண்களின் மனதை பெரிதும் கவர்ந்த தந்தை கேரக்டர் என்றால் அது ராஜா ராணி திரைப்படத்தின் சத்யராஜ் கேரக்டர் தான். மகள் தன் காதலை தைரியமாக சொல்லும் அளவிற்கான தந்தை மக்களுக்குள் உள்ள நட்பு அபரிமிதம். மகள் கதறி அழுவதை பார்க்க முடியாமல் சத்யராஜ் அழுவது இன்றும் பார்க்கும் பொழுது கண்கள் கலங்கும். “இனிமேல் இது தான் உன் வீடு, ஜான் தான் உன் கணவன்” என மகளிடம் கண்டிப்புடன் சொல்லும் காட்சி தந்தைக்கே உரிய கண்டிப்பை வெளிப்படுத்தி இருக்கும்.
வலிகளில் மிகப் பெரியது எதுவென்றால் நம் அன்பானவர்களின் இழப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவோம் என தெரிந்து கொள்ளும் நிவேதா தாமஸ், மயக்கத்தில் இருக்கும் தந்தை ரஜினியிடம் பேச முடியாமல் அவர் அருகில் படுத்துக் கொண்டு அழும் காட்சி விவரிக்க முடியாத வலி. மயக்கம் தெளிந்து மகள் இல்லை என தெரிந்து கொள்ளும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தன் ஸ்டைலில் உலக மக்களை கட்டிப் போட்டாலும் ஒரு தந்தையாக தன் முகத்தில் அந்த இழப்பின் வலியை கண் முன் கொண்டு வந்து இரு பெண் பிள்ளைகளின் தந்தையாக ஜெயித்து விட்டார்.
பெண் பிள்ளைகள் வேண்டாம் என்று நினைக்கும் மக்களின் மன எண்ணத்தை மாற்றவே பல நாடுகளில் மகள்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. பெண் பிள்ளைகள் நிஜமாகவே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான், ஆனால் வெறும் ஸ்டேட்டஸ், டிபி, மீம்சாக இல்லை. பெண்பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய பரிசு சிறந்த கணவன் என்பதை தாண்டி சிறந்த கல்வி. பெண் பிள்ளைகளின் கல்வியை போற்றி வளருங்கள், யாரையும் சாராமல் வாழக் கற்றுக் கொடுங்கள், பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறைய உங்களால் முடிந்த சிறு முயற்சியை எடுங்கள். இதுவே உங்கள் பெண்பிள்ளைகளுக்காக மகள்கள் தினத்தில் செய்ய வேண்டியது. ஒரு பெண் படித்து முன்னேறினால் கண்டிப்பாக ஒரு தலைமுறையே மாறும். அப்பாக்களின் தோள்களில் இன்றும் குழந்தையாக சாய்ந்துக் கொண்டிருக்கும் மகள்களுக்கு செய்திலையின் மகள்கள் தின வாழ்த்துக்கள்.