எது பிழை? -எல்ஷா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 160 எது பிழை? -எல்ஷா

                                           நாளையோட காலேஜ்ல செமஸ்டர் எக்ஸாம் முடியுது ஆபீஸ்ல பயோடேட்டா (bio-data) ஃபார்ம் நிரப்பி கொடுக்க சொன்னாங்க. எல்லா வேலையும் மதியம் முடிஞ்சிருச்சுனா எங்காவது வெளிய போலாமா ?என்றாள் ஹரிதாவின் தோழி. 

             ம்ம்ம்ம்….பார்ப்போம் என்றாள் ஹரிதா.

      தஞ்சாவூர் பெரிய கோவில் சிற்பங்களைப் பார்க்க ரொம்ப ஆசை, புதுசா ஒரு இடத்துக்கு போக ஆசை, ஊஞ்சல் விளையாட விருப்பமுனு சொல்லுவ, எங்காவது வா போவோம்னு கூப்பிட்டா வர மாட்ட நீ.

     ” இதுவரைக்கும் நாம எல்லாரும் சேர்ந்து எங்கேயும் போனது இல்லை. முடியாதுன்னு மட்டும் சொல்லாத” ஹரிதா.

    ” நாளைக்கு பார்ப்போம் .நல்லா எக்ஸாமுக்கு படிச்சுட்டு வா “என்று கூறி விட்டு கிளம்பினார்கள் ஹரிதாவின் தோழிகள். 

    வீட்டுக்கு வந்து விட்டாள் ஹரிதா.இரவு 12 மணி வரை படித்தாள். காலையில்,                                  

           “அம்மா! நாளைக்கு எக்ஸாம் முடிந்தபின் ,ஃபார்ம் நிரப்பி ஆபீஸில் ஒப்படைத்து விட்டு வர லேட்டாகும்”என்று கூறினாள் ஹரிதா. 

       ‘ வேலை முடிந்ததும் போன் பண்ணு. சரி சாப்பிடு .ஆல் த பெஸ்ட். ஹால் டிக்கெட் எல்லாம் பத்திரமா எடுத்து வை .சீக்கிரம் கிளம்பி பஸ்ச பிடி ‘

என்று அவசரப் படுத்தினாள் ஹரிதாவின் அம்மா. 

       தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் ஹரிதா. எக்ஸாம் எழுதி முடித்தாகிவிட்டது. கட்டி வந்த சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டனர்.

   ஃபார்மையும் நிரப்பி வரிசையில் நின்று கொடுத்து முடித்தனர். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர் ஹரிதாவும்,அவளது தோழிகளும். 

கோவிலுக்கு போகலாமா? பார்க்குக்கு போலாமா?

        மத்தியானம்( மதியம்)இரண்டுமே திறந்து இருக்குமான்னு வேற தெரியலை .

   இல்ல ..நான்கு மணிக்குத்தான் திறப்பார்கள் .

    ஹோட்டலுக்கு ………சாப்பிட்டாச்சே… 

       தஞ்சாவூர் போவோமா ?

ம்ஹூம் ….நா வரமாட்டேன். நான் வீட்டுக்கு சீக்கிரம் போகணும் .வாய்ப்பே இல்ல.ஆனா..வெளிய போகணும்னு ஆசை தான் என்று இழுத்தாள் ஹரிதா . 

       அப்ப வா…தியேட்டருக்கு போவோம் .மதிய ஷோவுக்கு .

      ம்ம்ம்…வேற இடம் இல்லையா? 

      இல்லடீ,பஸ் ஸ்டாப் பக்கத்துல தான் இருக்கு தியேட்டர் .நீ சீக்கிரம் வீட்டுக்கு போயிரலாம் என்றாள் தோழி. 

    ஆசை, பயம், உற்சாகம் ஒரே நேரத்தில் தோன்றியது ஹரிதாவுக்கு. வேகமாக நடந்தனர் ஹரிதாவும் அவளது தோழிகளும்.

      மதிய ஷோவுக்கு குறைந்த கட்டணத்தில் டிக்கெட்டை பெற்றுக்கொண்டனர். தியேட்டருக்கு உள்ளே சென்றதும் ஏதோ மாய உலகிற்குள் சென்றதைப் போல ஒரு உணர்வு. ஜில்லென்று இருந்த ஏசி, ஒரு நொடி மெய் மறக்கச் செய்த உயரமான மேற்கூரை,வரிசை வரிசையாய் அமைந்த பஞ்சு நாற்காலிகளானது ஆயிரம் மயில் தோகைகள் ஒன்றாக இணைந்த மென்மையைப் பெற்றிருந்தன .

       குஷியாக சென்று அமர்ந்தனர் .மதிய ஷோ ஆரம்பிக்க இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. அதனால் எழுந்து சென்று பாப்கார்ன் வாங்கினர். 

     கடைகளில் ஐந்து ரூபாய்க்கு விற்கும் பாப்கானை தியேட்டரில் 30 ரூபாய்க்கு வாங்க நேர்ந்தது. பாவம்! ஹரிதாவும் அவளது தோழிகளும் அனுபவம் பெற்றவர்களா என்ன ?ஆனால் அனுபவத்தை பெற விரும்புபவர்கள். தியேட்டருக்குள் வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கினர் .

       படம் ஆரம்பித்தது .சிறிய ஆரவாரம் இருந்தது அவர்களுக்குள். கொஞ்ச நேரம் சென்றதும் ஹரிதாவுக்கு உள்ளூர பயம் தோன்ற ஆரம்பித்திருந்தது. 

       “பெற்றோருக்கு தெரிந்தவர்கள் யாராவது ,தியேட்டருக்குள் நுழையும் போது தன்னைத் பார்த்து இருந்தால் என்ன செய்வது? அம்மா போன் செய்து விட்டால் என்ன செய்வது ?

    தியேட்டருக்கு வந்தது தெரிந்து விட்டால் இனிமேல் கல்லூரிக்கு அனுப்புவார்களா? 

     ஒரு மணி நேரம் மனப் போராட்டத்துடன் கடந்தது. பஞ்சு நாற்காலி இப்பொழுது அனல் பறக்கும் பாறை போல ஆனது. 

      ” ப்ளீஸ்..டி..கதவைத் திறக்கச் சொல்லுடி ,நான் செல்கிறேன். “

             2 மணி தான் ஆகுது ஹரிதா டிக்கெட் காசு வீணாப் போயிரும்டி… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் போகாதடி ப்ளீஸ் ….

        அனைவரிடமும் இருந்த உற்சாகம் ஊதிய பலூனில் மெல்லிய ஓட்டை போல ஆனது. ஹரிதாவிற்கு பயத்தால் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. 

         இப்ப எழுந்தா எல்லாருக்கும் தொந்தரவாக இருக்கும். நம்மளையே பாப்பாங்க ஹரிதா .கொஞ்ச நேரம் ப்ளீஸ்…. 

     சுடு தண்ணீரில் விழுந்த தவளை போல வெளியேற முயன்றாள் ஹரிதா. இடைவேளை வந்ததும் ஒரு தோழி அழைத்து வந்து வெளியேவிட்டுச் சென்றாள் ஹரிதாவை .

   தோழிகள் எதுவும் கூற முடியாமல் வெறுமை மனதுடன் அமர்ந்து இருந்தனர். 

    மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் என்று தார்ச்சாலையிடம் மௌனமாகக் கேட்டுக் கொண்டே பேருந்து நிலையம் வந்தாள் ஹரிதா.

        பெற்றோர்,தோழிகள்,அவளது ஆசை இவை மூன்றும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்தது போல அவள் மனம் ஆகியிருந்தது. 

      தன் ஊர் செல்லும் பேருந்து தன்னை கடந்து செல்வதைக் கூட கவனிக்கவில்லை. ஹாரன் சத்தம் கேட்டதும் சுய நினைவுக்கு வந்தாள் ஹரிதா. ஓடிச்சென்று நிறுத்தி ஏறிக்கொண்டாள்.டிக்கெட் எடுத்தாள். இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி சாய்ந்து கொண்டாள். பழைய நினைவுகள் மனதில் ஊற்றாக ஓடிக் கொண்டிருந்தது .

      பேருந்து வசதிகள் இல்லாத, அழகான, அமைதியான,இயற்கை அழகு கொஞ்சும் ஓர் ஒற்றை ஆற்றைக் கொண்ட சிறிய ஊரில் பிறந்தவள்.அந்த ஊரில் மொத்தம் ஏழு வீடுகளே இருக்கும். ஹரிதாவின் வயதை ஒட்டிய குழந்தைகள் 4 பேர் மட்டுமே. அவர்களுடன் அவள் அண்ணனும் மாடு மேய்க்கச் சென்று விடுவான். ஹரிதாவுக்குக் வீடு தான் கதி. 

       வீட்டிற்கு அருகில் இயற்கை தன் கைகளால் அமைத்துக் கொடுத்த கொடிகளால் ஆன ஊஞ்சல் மிகப் பிரியமான ஒன்று ஹரிதாவுக்கு.

குளிர்ந்த காற்று, மரத்தின் நிழல், குயிலின் பாடல்!!ஆற்றின் அருகிலேயே வீடு அமைந்திருந்தது .

  இயற்கையின் அரவணைப்பினால் , தனியாக இருந்தாலும் தனிமையை உணரவில்லை ஹரிதா.5 கிலோமீட்டர் சைக்கிளில் அண்ணனுடனும் தோழியுடனும் பள்ளிக்குச் செல்வாள். 

       பள்ளியில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள் ஹரிதா. பள்ளியிலேயே அனைத்து வீட்டுப் பாடங்களையும் முடித்துவிடுவாள்.படுசுட்டி.பரிட்சை வந்தால் மட்டுமே வீட்டில் புத்தகத்தை திறப்பாள் .பள்ளியில் முதல் மதிப்பெண்ணும் பெறுவாள்.அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது அவள் அந்த ஊரை விட்டு வரும் வரை .

          பெற்றோரின் பணி ,உயர்கல்வி, கல்லூரி ஆகியவற்றுக்காக ஹரிதாவின் குடும்பம் ஓரளவுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட கிராமத்திற்கு இடம் பெயர்ந்தது .

          புதிய இடம்,புதிய மனிதர்கள் ஹரிதாவின் பாதுகாப்பில் கவலையுடன் இருந்தார்கள் வேலைக்குச் செல்லும் அவளதுபெற்றோர்கள் .

      ஹரிதாவை பக்கத்து வீட்டுக்கு பத்து நிமிடம் கூட அனுப்புவது இல்லை. 

     ஹரிதாவுக்கு பிடித்தமான ஒன்று கூட புது வீட்டில் இல்லை. “வசதிகள் கொண்ட சிறை” என்றே தன் வீட்டை குறிப்பிடுவாள். மிகவும் போரடித்தது ஹரிதாவுக்கு. மரங்களோ, செடிகளோ வளர்க்கும் அளவுக்கு வீட்டை சுற்றி இடமில்லை. 

          பள்ளி முடிந்ததும் டியூசன் போகிறேன் என்று அடம் பிடித்து கிளம்பினாள் ஹரிதா .

        ஒருமுறை டீயூசனில் சரஸ்வதி பூஜை கொண்டாடினார்கள். ஹரிதாவும் தோழிகளும் இணைந்து வண்ணக் கோலமிட்டனர்.கடலை, பொரி, வாழைப்பழம் வைத்து பூஜை செய்த பின் உண்டு மகிழ்ந்தனர். 

           வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்தது டியூஷன் 6 மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்பது ஹரிதாவுக்கு பெற்றோரால் இடப்பட்ட கட்டளை .சிறிது தாமதமாகி விட்டால் தனியாக சாலையில் வராதே மற்றவர்களுடன் இணைந்து வா என்பது அம்மாவின் அறிவுரை.

        கொண்டாட்டங்களினால் அரை மணி நேரம் தாமதமாகி இருந்தது. சிறிது இருட்டியும் விட்டது .இதனால் தன்னுடன் டியூசன் படிக்கும் அனு உடன் இணைந்து வருவதாக முடிவெடுத்தாள் ஹரிதா.

      அனு கோலமிட தண்ணீர் வாளியை அவர்களது கடையில் இருந்து எடுத்து வந்திருந்தாள். அதை ஒப்படைத்து விட்டுச் செல்ல இன்னும் தாமதம் ஆகிப் போனது .மணி ஏழு ஆகி இருந்தது. இருவரும் வேகமாக வீட்டுக்கு விரைந்தனர் .அனு வீடும் ஹரிதாவின் வீடு அமைந்த தெருவிலேயே அமைந்திருந்தது. நடந்து வர 15 நிமிடங்கள் ஆகிப் போனது. 

ஹரிதாவின் அம்மா கடுமையான குரலுடன் , “இவ்வளவு நேரம் என்ன செய்தாய் டியூசனில்? 

  அம்மா….

  என்ன சொல்லி இருக்கேன் உனட்ட ..ஏன் லேட்டு?

மணி எத்தனை ஆச்சு பாரு? 

பொம்பள புள்ள வீடு வர்ற நேரமா இது? என்ன பண்ண? 

   அம்மா…கோலம் போட்டோம். சாமி கும்பிட்டாங்க மா. சேர்ந்து வர்றோனு நின்னதால இன்னும் லேட்டாச்சுமா. .

        சும்மா எப்ப வருவன்னு பார்த்துட்டே இருக்க முடியுமா ?எங்களால… 

 ஹரிதாவின் அப்பா அவர் பங்குக்கு 

    “டியூசன் படிக்கறதுக்கு தானே அனுப்பினோம். படிக்கிற வேலையை மட்டும் தானே பாக்கணும். “

      ” ஆம்பளப் புள்ளையினா கொஞ்ச நேரம் அந்த ரோட்டுல உள்ள கடையில உட்கார்ந்துட்டு மெதுவாக வீட்டுக்கு வரலா. பொம்பளப்புள்ள அப்படி வரமுடியுமா?

மிக கோபமாகி விட்டாள் ஹரிதாவின் அம்மா. 

    வார்த்தை அர்ச்சனை நடந்தது ஹரிதாவிற்கு .கூடவே விளக்கமாறு ஆராதனையும் பூஜையும் கிடைத்தது. என்ன ஹரிதாவின் உடலெங்கும் ஆங்காங்கே கொழுக்கட்டை சுடப்பட்டது.

         “ஒரு மணி நேர தாமதத்தினால் புயல் வந்து குடியா முழுகப்போவுது” என்று கோபத்துடன் தனக்குள் முனகிக் கொண்டாள் ஹரிதா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே. 

      புயல் வரவில்லை பெற்றோரின் மனதில் தான் சிந்தனைச்சூறாவளி சுழன்று கொண்டிருந்தது.ஹரிதாவின் அப்பா டியூசனுக்கு அருகில் இருக்கும் கடைக்கு ஆறு முப்பது மணிக்கு வந்திருந்தார். டியூசன் வாசல் வரை வந்தவர் ஹரிதாவை வீட்டுக்கு அழைத்து வராமல் வந்துவிட்டார் .”

உன்னை யாரு கூட்டிக்கிட்டு திரியுரது. போனா ஒழுங்கா வீட்டுக்கு வர வேண்டியதுதானே ” 

இதைக் கேட்டவுடன் அழுகை முட்டிக்கொண்டு வந்தது ஹரிதாவுக்கு.           

       “நாய் தன் உரிமையாளரின் கட்டளையை அல்லவா ஏற்க வேண்டும். சங்கிலியால் பிணைக்கப் படவில்லை என்றாலும் கூட.அதன் விருப்பமெல்லாம் யாரறிவார்”.

      ஹரிதாவுக்குக் கொழுக்கட்டையினால் ஏற்பட்ட காயம் கொஞ்ச நாளில் ஆறிப்போனது.வார்த்தைகளின் கணம் மனதில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது இன்றும் கூட , ஒவ்வொரு நாளிலும் சிறிது சிறிதாக. அந்த வருடத்தோடு அவள் சென்ற டியூசன் நடைபெறாமல் நின்றிருந்தது.

     நாட்கள் நகர்ந்தன. ஹரிதா பத்தாம் வகுப்பு வந்துவிட்டாள்.ஆர்வமுடன் படித்தாள்.ஆங்கில வார்த்தைகளின் பொருளை அறிய ஆவலுடன் இருப்பாள். டிக்சனரி(Dictionary)பார்த்து பொருள் எழுதிக் கொள்வாள் .சில வார்த்தைகள் அவள் வைத்திருந்த டிக்சனரி புத்தகத்தில் இல்லை.தேடவும் அதிக நேரம் பிடித்தது. ஹரிதாவின் அண்ணன் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தது. அண்ணன் வரும்போதெல்லாம் தன் பாட புத்தகத்தில் உள்ள தனக்கு தெரியாத வார்த்தைகளுக்கு எல்லாம் டிஸ்சனரி ஆப்(dictionary app) பார்த்து பொருள் எழுதி வைத்துக் கொள்வாள். 

             தான் மட்டும் படித்தால் போதாது. தன் நண்பர்களும்( தோழர்கள், தோழிகள்) படிக்க வேண்டும் என எண்ணி தனக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுப்பாள். நண்பர்களுடனான சிநேகம் இந்த அளவில் மட்டுமே தொடர்ந்தது. சிறப்பு வகுப்புகள் நடந்தன. 

       மீதி நேரங்களிலும், சிலநேரம் விடுமுறை நாட்களிலும் ஹரிதா படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் டியூஷன் போல அமைத்து சொல்லித்தருவார் .கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்ள மாட்டார். விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் படிக்க வருவார்கள் .அவர்கள் அவ்விடத்திற்கு வரும் முன்பே வந்து விடுவார். அனைவரும் சென்ற பின்பே வீட்டிற்கு செல்வார்.ஹரிதாவும் சென்று விட்டு ஆறு முப்பது மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவாள். ஒருமுறை பள்ளியில் கீழே விழுந்த சாக்பீஸ் துண்டை எடுத்து அந்த ஆசிரியரிடம் கொடுத்தாள்.அதை அவர் கைகளில் வாங்காமல் பெஞ்ச் மீது வைக்க சொல்லிவிட்டு பின் எடுத்துக்கொண்டார்.

         முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை அனைத்துப் பாடங்களையும் நன்றாகப் படிக்க பல உதவிகள் செய்தார்.

இறுதித் தேர்வை நன்றாக எழுதி முடித்தாள். ஹரிதாவின் ஆர்வம் குறையவில்லை .நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவுக்கு புலமை பெற வேண்டும் என்று விரும்பினாள் ஹரிதா. பயிற்றுவிக்க ஆசிரியரும் தயாராக இருந்தார். 

   விடுமுறை நாட்களில் ஹரிதாவும், அவள் தோழி சிந்துவும் இன்னும் சில பள்ளித் தோழர்களும் எப்போதும் போல அங்கு சென்றனர்.அவரவர்க்கு பிடித்தமானவற்றை செய்தனர். ஹரிதா ஆங்கில வாக்கியங்களை எழுதினாள். அந்த ஆசிரியர் வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் வழங்கினார். இரண்டு நாட்கள் இவ்வாறு சென்றது .

        மூன்றாவது நாள், ஹரிதாவின் அம்மா, 

” ஹரிதா, புளியம்பழம் உடைக்கவேண்டும். உன்னுடைய டிரெஸ் அம்புட்டும் அழுக்கா கிடக்கு போய் துவை. வீடும் துடைத்து ரொம்ப நாள் ஆச்சு”. 

           ஹரிதாவும் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்து விட்டு டி. வி யில் படங்களும் பார்த்தாள். பகலிலும் தூங்கினாள்.

       ஒரு வாரம் சென்றதும்

      “அம்மா ..நான் சாரை பார்க்கச் செல்கிறேன். இங்கிலீஷ் கத்துக்க போறேன்” என்று சொல்லிவிட்டு தன் பையில் நோட்டையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு அம்மா முன் வந்து நின்றாள்” ஹரிதா.

     பள்ளி தான் முடிந்து விட்டதே. 

எதுக்கு போற நீ? 

இனிமே நீ போகக்கூடாது .

போய் ஒழுங்கா வேலைய பாரு .

பப்ளிக் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு போச்சுல்ல. 

         “உங்க பொண்ணு எங்க பைய தூக்கிகிட்டு போகுதுன்னு என்னைய கேட்குறாங்க? 

        ஊர் வாயெல்லாம் அடைக்க முடியுமா? 

      “படிக்க தானம்மா போகிறேன். வேலையெல்லாம் முடிச்சுட்டு போறேன்மா .ப்ளீஸ்மா.,,. நான் மட்டும் போலம்மா .சிந்து, பிரண்ட்ஸ் எல்லாம் தான்மா போறாங்க .

         நீ போகக்கூடாது .அவ்ளோதா.

மறுநாள் தன் அப்பாவிடம் கேட்டாள் ஹரிதா.

          எக்ஸாம் முடிஞ்சிருச்சு .உனக்கென்ன வேலை அங்கே? 

நீ என்ன ஆம்பளப் புள்ளையா?

 சும்மா எல்லா இடத்துக்கும் போறே போறேங்குற. சரிப்பட்டு வராது அதெல்லா.

          இல்லப்பா, இங்கிலீஷ் கத்துக்கதாம்பா போறேங்குற.

       சரிப்பட்டு வராது அதல்லா. 

      ” உனக்குத்தான் கிராமர்( grammar) புத்தகம் ,டிக்சனரி வாங்கி குடுத்துருக்கு இல்ல. அத படி போ. போயி வீட்டிலுள்ள வேலையை பாரு”என்றார் ஹரிதாவின் அப்பா .

“”””நான் ஏன் போறேன்னு கேள்வி கேட்கிற ஊர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் செய்வது சரியென்றால், நான் ஏன் மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்”””””

       என்ற எண்ணம் ஹரிதாவின் மனதில் சுட்டெரித்துக் கொண்டே இருந்தது.        

               தொடர்ந்து கிட்டத்தட்ட 15 நாட்களாக ஓரிரு வார்த்தைகள் கூறி தான் செல்வதாக கேட்டுக்கொண்டே இருந்தாள் .அவளை வாய் திறந்து பேச விடுவதில்லை .இல்லையென்றால் ஹரிதாவின் பேச்சை கண்டு கொள்வதில்லை பெற்றோர் .

        “வெடித்துச் சிதற காத்திருக்கும் எரிமலையின் மேற்பரப்பு போல ஹரிதா மௌனமாக இருந்தாள். 

      புதிதாக ஹரிதாவுக்கு ரெடிமேட் டிரஸ் எடுத்தனர் பெற்றோர் .கை மட்டும் தைக்காமல் இருந்தது. 

ஹரிதாவின் அம்மா மாவு அரைத்துக் கொண்டிருந்தாள் .

      அம்மா கடைக்கு சென்று நான் தைத்து வாங்கி வரவா?

            ம்..போய்ட்டு வா…என்றாள். ஒரு மாதத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியே சென்றாள் ஹரிதா .

        “தைக்க சிறிது நேரம் ஆகும் உட்கார்” என்றாள் தைக்கும் அக்கா. 

      சரிக்கா,நீங்க தைத்து வையுங்கள் .நான் சிறிது நேரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன்”

 என்று கூறிவிட்டு, மனம் கூறுவதைக் கேட்டாள் ஹரிதா.

         பெற்ற உதவிக்கு என்ன கைமாறு செய்யப் போகின்றேன். நான் உதவியைப் பெறாமலே இருந்திருக்கலாம் என்று எண்ணியவாறே நடக்கத் தொடங்கினாள். அவளது ஆசிரியரின் டியூசனை நோக்கி .அங்கே அவர் அவருடைய இரண்டு மாணவர்களுடன் அமர்ந்து இருந்தார். ஹரிதா சென்று சிறிது நேரம் ஆசிரியரிடம் நலம் விசாரித்து உரையாடிவிட்டு இதுவரை தனக்குச் செய்த உதவிக்கு நன்றி கூறிவிட்டு வந்தாள் ஹரிதா.

         “பயிரை நட்டு பாதி வளர்த்த பின் பிடுங்கினால் நிலம் அளித்த அத்தனை சத்துக்களும் வீண் அல்லவா? 

       டிரஸ் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள் ஹரிதா. 

     “வீட்டுக்குள் நுழைந்ததும் ஏன் இவ்வளவு நேரம்?” என்றாள் ஹரிதாவின் அம்மா. 

    ஏன் இவ்வளவு நேரம்?தைக்க இவ்வளவு நேரம் ஆகாதே?

      வரும் வழியில் சாரைப் பார்த்தேன் அம்மா. பேசிவிட்டு வந்தேன்மா.

        சாலையில் நின்று இவ்வளவு நேரம் பேசினாயா? 

        புதிதாக பொய் கூறத் தொடங்கியவளுக்கு நடிக்கத் தெரியவில்லை .அவள் வார்த்தையின் நடுக்கமும் முகமுமே காட்டிக் கொடுத்தது. பின் ஹரிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

      “டிரெஸ் தைக்க போறேன்னு தானே சொன்ன. 

 சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணு. 

நான் சாகும் வரை உன் வார்த்தைகளை கேட்க வேண்டும் .

நீ கூறுவதை இனிமேல் எவ்வாறு நம்புவது? 

       அன்று முதல் பெற்றோர் செய்ய சொல்வதை மட்டுமே செய்வாள். பெரும்பாலும் தனக்குள் தோன்றும் ஆசைகளை வெளிப்படுத்துவதே இல்லை. 

         கிராமர்(grammar) புத்தகத்தில் வாக்கியங்களை எடுத்து வாசித்துப் பார்த்தாள் ஹரிதா .

      “காடு குறித்த அனைத்து நுட்பங்களை அறிந்த வன அதிகாரிக்கே புதிய காட்டுப் பகுதிக்குள் செல்ல உள்ளூர்வாசியின் ஆலோசனை தேவைப்படுகிறது. “

         “இதில் கத்துக்குட்டி ஹரிதா எவ்வாறு வழியறிவாள். காட்டுப் பகுதியின் நுழைவாயிலை அறிய இயலாமல் திரும்பிவிட்டாள் தோல்வியுடன்.”

         ஆசிரியர் அளித்த புத்தகங்களையும் வாசிக்காமல் தன் ஆசைகளை தனக்குள் மறைத்ததைப் போலவே,புத்தகங்களையும் தன் கண்களில் படாதவாறு பையில் வைத்து மூலையில் வைத்தாள். முடங்கியும் போனாள். பின் தோழியிடம் புத்தகங்களை கொடுத்து ஆசிரியரிடம் கொடுக்கச் செய்தாள். 

     “சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மை போல மாறிப் போயிருந்தாள் நான்கு வருடங்களில் ஹரிதா. படிப்பும் குறைந்து போய் இருந்தது. 

      கொரானா வந்தது.ஆன்லைன் கிளாஸும் வந்தது. ஹரிதாவுக்கு ஆண்ட்ராய்டு மொபைலும் கிடைத்தது. மீண்டும் புத்தகங்கள் பி.டி.எஃப் (pdf)வடிவில் ஹரிதாவின் கண்களில் பட்டது. மனம் மாறியது. வாசிக்கத் தொடங்கினாள் .

    தன் சுயத்தை இழந்து இருப்பதை அப்பொழுதே உணர்ந்தாள் ஹரிதா.

       அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எங்கே வந்து கொண்டு இருக்கிறாய்?  

பஸ் ஏறிவிட்டேன். 

   . ம்ம்ம் ..சரி வா ….. 

எது சரி ? எது பிழை ?என்பதை ஆராய்ந்து கொண்டே தான் யார்? என்பதை கண்டறியும் பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றாள் ஹரிதா.

🐣🧚‍♀️ ஆசைகள் பிழையா? பயம் பிழையா ? செயல்எதிர்மறை சிந்தனை பிழையா? பிழையா?

🌱 இயற்கையின் அழகு பிழையா? 🚌🚌கிராமத்தின் வசதியின்மை பிழையா?

🏣 நகர்ப்புற சூழல் பிழையா?

🎇 கொண்டாட்டங்கள் பிழையா? 

🤔எதிர்மறை சிந்தனை பிழையா?

🧤👼🥢 பாதுகாப்பது பிழையா ? பெண்ணாய் பிறந்தது பிழையா? கண்டிப்பு பிழையா?

📖👀ஆர்வம் பிழையா?கண்ணோட்டம் பிழையா? 

🧚‍♂️ உதவிகள் செய்வது பிழையா? 

✨ உதவிகள் பெறுவது பிழையா? 

😑🐾பொய் பிழையா?காரணம் பிழையா?  

🌹🥀சிந்தனை பிழையா? சிந்திக்க மறந்தது பிழையா?

🌚🌝மறைத்தல் பிழையா? தேடல் 

பிழையா? 

⚡எது பிழை? 

⚡எது பிழை? 

 ……. சிந்தியுங்கள்……. 🐚🐚🍂🍂🌱🌱🌱🌱

❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄

  பேனா முனை தனது மையினை சிந்திவிட்டு காத்திருக்கின்றது விடைக்காக…

              ✍️✍️✍️

Exit mobile version