“ஏய் பிள்ளைகளா நெக்ஸ்ட் வீக் எக்ஸாம் இருக்குல்ல விளையாடிட்டு இருக்காம ஏதாவது படிக்கலாம்ல?” என்று கேட்டுக் கொண்டே அந்தப் பெரிய அறைக்குள் நுழைந்தாள் யுவனிகா.
“கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு படிக்கலாம்னு இருக்கோம் ஆண்ட்டி. நீங்களும் வாங்க எங்க கூட கொஞ்ச டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க” என்றாள் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு மாணவி.
கல்லூரிப் பெண்களுக்கான விடுதி அது.
பிள்ளைகள் வெளிநாட்டை நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொள்ள நான்கு மகன்மாரும் கூட்டுக் குடும்பமாக வசிக்கவெனக் கட்டப்பட்ட வீடு பராமரிக்க ஆள் இல்லாமல் போக, முதுமையைத் தனிமையில் கழிக்க விரும்பாத அந்த வயோதிகத் தம்பதியர் பக்கத்தில் இருந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு விடுதியாக்கி விட்டனர்.
தன் தோழியின் உறவினர்கள் எனும் வகையில் பெரியவர்களின் அறிமுகம் கிடைக்க அவர்களுக்கு உதவியாக பதினைந்து வருடங்களுக்கு முன்பு விடுதி ஆரம்பிக்கும் போதே இங்கு வந்து சேர்ந்து கொண்டாள் யுவனிகா.
இங்கு வரும் மாணவிகளும் தாத்தா, பாட்டி, ஆண்ட்டி என்றே அவர்களை அழைக்க உறவுகள் இருந்தும் தனிமையைத் தத்தெடுத்துக் கொண்ட அம்மூவருக்கும் அதுவே வரம் என்றானது.
கரிசனையும், பாசமும் எப்போதாவது தேவையான நேரங்களில் கண்டிப்பும் காட்டும் அவளை மாணவிகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
அவர்கள் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தானும் அமர்ந்து கொண்டாள்.
ஊர்க்கதைகள் அடுத்த மாதம் வரும் பண்டிகை என அவர்களில் பேச்சு எங்கெல்லாமோ சுற்றி வர இவளும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
மாணவிகள் படிக்கவென கலைந்து தத்தம் அறைகளுக்கு செல்ல ஆரம்பிக்க எழுந்து வந்து சமையலறையை அடைந்தாள்.
இரவுணவுக்காக ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.
வீட்டுப் பெரியவர்கள், யுவனிகா, உதவியாளர், மாணவியர், வேலையாட்கள், காவலாளி என கிட்டத்தட்ட நாற்பது பேருக்கு மூன்று வேளைகளும் சமையல் செய்யும் இடம் எப்போதும் பரபரப்புக் குறையாமல் தான் இருக்கும்.
இவளால் முடியுமான உதவிகளை செய்து கொடுத்து விட்டு தன் அறையில் வந்து தஞ்சமடைந்தாள்.
ஓய்வு நேரங்களில் கதைகள் வாசிப்பது வழமை.
கைபேசியை உயிர்ப்பித்து வழமையாக அவள் வாசிக்கும் தளத்திற்கான பிரத்யேக முகநூல் பக்கத்தை பார்வையிட்டுக் கொண்டு வர,
‘காதல்கள் எல்லாம் காதலாகவே
முற்றுப் பெறுவதில்லை..
நினைவுகளாக
நம்மோடு
தொடர்பவைகளும் உண்டு!
என்ற கவிதை கண்ணில் பட்டது.
எத்தனை உண்மையான வரிகள்!
வியக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
தானாக அவள் நினைவுகள் பின்னோக்கிப் பயணப்பட்டன.
“ஏய் நீ இன்னும் சின்ன பாப்பான்னு நினைப்பா? இருபத்திரண்டு வயசாகுது உனக்கு மறந்துடாத.
வயசுப் பொண்ண வெச்சிட்டு இருக்கோமே கல்யாணத்த பண்ணி வைப்போம்னு நினைச்சா ரொம்ப தான் குதிக்குற?
இங்க இருக்குறத கல்யாணம் பண்ணிட்டு போய் புருஷன் வீட்டுல இருக்க வேண்டியது தானே?”
அவளது பெரியம்மாவின் குரல் ஓங்கி ஒலிக்க அத்தனை பேரும் அந்த இடத்தில் குழுமிவிட,
ஆளாளுக்கு ஏதேதோ பேச்சுக்கள். அத்தனையிலும் ஒன்று கூட இவள் மனதுக்கு உவப்பானதாக இல்லை.
மௌனமாக நின்று கொண்டாள். இவளை வைத்து தான் அத்தனை பேச்சுக்களும் எனும் போது அங்கிருந்து விலகிச் செல்லவும் முடியாத நிலை.
பெருமழை ஓய்ந்தும் விடாத தூரல் போல ஆக்ரோஷமான குரல்கள் குறைந்து சலசலப்பு மீதமிருந்து அதுவும் அடங்கி விட அந்தப் பெரிய வீட்டின் மொட்டை மாடியில் போய் அமர்ந்து கொண்டாள்.
சற்றே பலமாக அடித்துச் சென்ற காற்றுக்குக் கூட அசராமல் பார்த்தது பார்த்தபடி கைகளைக மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அப்படியே நின்றிருந்தாள்.
ஒரு மணி நேரம் கடந்து சென்ற போது
“யுவனிகா..” என்ற அழைப்பு காதில் வந்து மோதியது.
அதற்கு அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாது போனதும் குரலுக்குச் சொந்தக்காரன் அருகில் வந்து நின்றான்.
“யுவனிகா.. என்ன பிரச்சினை உனக்கு?”
‘இதே என்னோட பழைய கார்த்திக்கா இருந்தா எனக்கு என்ன பிரச்சினைன்னு நான் சொல்லாமலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
இப்போ நீங்க கார்த்திக் அத்தான் அதான் மத்தவங்கள போல நீங்களும் என்னை புரிஞ்சிக்காம கேள்வி கேட்குறீங்க’ என்று மனதோடு பேசியவள் மௌனமாகவே இருந்தாள்.
“அவங்க எல்லாம் சொல்றது சரி தான். உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. அம்மா, அப்பா இல்லாம இருக்கோமே, பெரியவங்க சொல்றதக் கேட்டு கல்யாணம் பண்ணிப்போம்னு இல்லாம மாமா பார்த்த மாப்பிள்ளைய வேணாம்னு சொல்லிட்டு இருக்க பாரு” என்றான்.
”நீங்களுமா அத்தான்?” என்றவள் அவனை அடிபட்ட பார்வை பார்க்க,
“என்ன நானுமா? மாப்பிள்ளைக்கு வீடு, சொந்த கடை எல்லாம் இருக்கு” என்றவனை இடைமறித்து,
“அதோட படுத்த படுக்கையா அவங்க அப்பா, அம்மா இருக்காங்க. அதோட மூத்த தாரம் இறந்து ரெண்டு பசங்களும் இருக்காங்க” என்றாள் அத்தனை நேர மௌனத்தை கலைத்து.
“அதனால என்ன யுவனிகா? இங்க கூட யாருக்கும் உடம்பு சரியில்லைன்னா நீ தானே பார்த்துக்குவ? இங்க இருக்குற குட்டீஸ கூட பார்த்துக்குவ தானே? அது போல நினைச்சுக்க.
உன் அப்பா இறந்துல இருந்து நம்ம குடும்பம் தான் உன்னையும் உன் அம்மாவையும் பார்த்துக்கிட்டாங்க.
உன்ன படிக்கவும் வெச்சாங்க. இப்போ உன் அம்மாவும் இறந்து இந்த அஞ்சு வருஷமா உன்னை பார்த்துக்குறாங்க. இனிமேலும் நீ அவங்களுக்கு பாரமா இருக்கணுமா? பேசாம அந்த மாப்பிள்ளைய கட்டிட்டு சந்தோஷமா இருக்கப் பாரு” என்றான்.
‘நீங்களா? நீங்களா இப்படி சொல்றது? நீங்க இந்த விஷயத்திலயாவது எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க. இந்த கல்யாணத்த விரும்ப மாட்டீங்க, தடுப்பீங்கன்னு நம்பி இருந்தேன். கடைசில நீங்களும் அதையே தான் சொல்றீங்கல்ல?’ என்று நினைத்தவள் மீண்டும் இருட்டை வெறிக்க ஆரம்பித்தாள்.
“சொல்றத சொல்லிட்டேன். யோசிச்சி நல்ல முடிவா எடு” என்றவன் அவ்விடம் விட்டு விலகிச் சென்றான்.
‘நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல்லை. அதுக்காக நீங்க பார்த்த நாற்பத்தைந்து வயசு மாப்பிள்ளைக்கு ரெண்டாந்தாரமா இருக்கவும் விருப்பம் இல்லை. என்னை படிக்க வெச்சி இத்தனை வருஷம் பார்த்துக்கிட்டதுக்கு உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி!
நான் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன். பாரமா இருந்த என்னை தேடி வர மாட்டீங்க தான் ஆனாலும் சொல்றேன் தேடி அலைந்து கஷ்டப்பட வேணாம். நானே ஒரு நாள் வருவேன்’ என்று எழுதி பூஜையறையில் வைத்து விட்டு,
தன் துணிகளை அள்ளிப் போட்டெடுத்த பையுடன் விடியலின் ஆரம்பித்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
பேரூந்து நிலையம் வந்து சேர்ந்தவளுக்கு அப்போது தான் வெளியூர் செல்ல கையில் பணம் இல்லை என்ற விடயம் புத்தியில் உறைத்தது.
சுற்றிலும் பார்த்தவள் அங்கிருந்த ஒரு கடைக்குச் சென்று அங்கிருந்தவரிடம் தன் நிலையைக் கூற அவளுக்கு பயணத்திற்கான பணத்துடன் காலை உணவையும் கொடுத்து விட்டார்.
“நான் உழைச்சு பணம் சம்பாதிச்சாலும் இந்த பணத்தை திருப்பி கொடுக்க மாட்டேன். இந்த நேரம் நீங்க பண்ற உதவி லட்சம் ரூபாவா திரும்ப கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதது. நீங்க நல்லா இருக்கணும் ஒன்னுக்கு நூறா கடவுள் உங்களுக்கு கொடுப்பார்” என்று அவரிடம் கூறி விட்டு புறப்பட்டாள்.
தோழியின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
யுவனிகா சென்ற அடுத்த நாளே தோழியின் அன்னை இந்த வீட்டினர் பற்றியும் இதை விடுதியாக்க இருப்பது பற்றியும் கூற அவர்களிடம் விசாரித்து இங்கே வந்து பெரியவர்களிடம் உண்மைகளைக் கூறி அவர்களிடம் தஞ்சமடைந்தாள்.
இன்று வரை இதுவே அவளின் சரணாலயம்.
அத்தனையும் நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது.
‘சிரிக்கும் போது சேர்ந்த சிரிக்கவும்,
கொண்டாடும் போது சேர்ந்து கொண்டாடவும்,
பாடல் வரிகள், படங்கள், கிரிக்கெட், நான் வாசிக்கும் கதைகள்னு எதையும் ரசிச்சு பார்த்து விவாதம் செய்யவும்,
சோர்வாக இருக்கும் போது சாய்ந்து கொள்ள மடி கொடுக்கவும்,
கவலையில் கண்ணீர் விட்டா துடைத்து விட்டு ஆருதல் சொல்லவும்னு ஒவ்வொன்னுக்கும் என் கூடவே இருக்க இங்க நிறைய பேர் இருக்காங்க.
ஆனா.. ஆனா.. சின்ன வயசுல இருந்தே இது எல்லாமுமா மொத்தமா இருந்த உங்கள தான் மனம் சில நேரம் தேடுது கார்த்திக்.
தப்பு தான் நான் அப்படி எல்லாம் நினைக்கிறது தப்பு தான். நீங்க உங்களுக்கான வாழ்க்கைய வாழ்றீங்க ஆனா நான் எந்த இடத்துல தப்பாகிப் போனேன்னு தான் எனக்கு புரியல்லை.
குடும்பத்துல எல்லாரும் நல்ல நிலைல இருக்க எங்க அம்மா மட்டும், தான் விரும்பின கூலித் தொழிலாளிய கல்யாணம் பண்ணின போதா?
ஆக்ஸிடெண்ட்டாகி அப்பா இறக்கவும் என்னையும் கூட்டிட்டு வந்து தாத்தா பாட்டி கிட்ட மன்னிப்பு கேட்டு நம்ம வீட்டுலயே தங்கின போதா?
அம்மா இறந்த பிறகு நான் ஸ்கூல் படிப்போட வீட்டுல இருக்க குடும்பத்துல மத்த பசங்க காலேஜுக்கு போய் படிக்க ஆரம்பிச்சு படிக்காதவன்னு என்னை ஒதுக்கி நிறுத்தின போதா?
தாத்தா பாட்டி இறந்த பிறகு ஒரு அனாதையா எல்லாரும் என்னை பார்த்த போதா?
என் கூடவே இருந்து என் மேல பாசமா, அக்கரையா இருந்து காதலும் இருக்குன்னு பட்டும்படாம உணர்த்தின நீங்க எனக்கும் உங்க மேல அதே காதல் இருக்குன்னு தெரிந்தும் திடீர்னு விட்டு விலக ஆரம்பித்த போதா?
எந்த இடத்துல நான் தப்பாகிப் போனேன் கார்த்திக்?’
தனக்குள்ளே கேட்டுக் கொண்டவளுக்கு பெருமூச்சுடன் ஒரு கசந்த புன்னகையும் சேர்ந்து கொண்டது.
உண்மை தான் காதல்கள் அனைத்தும் காதலாகவே முடிந்து விடுவதில்லை தான்! என்று தனக்குள்ளே கூறிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
நெஞ்சில் நிறைந்த அவன் நினைவுகள் சில நேரங்களில் இப்படித் தான் அவளுக்குள் உலா வரும்.
அவற்றை ஆற்றாமையுடன் நினைத்து நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.
அதைத்தவிர வேறு என்ன செய்வது!
இறுதி வரை தன்னுடன் இருப்பான் என்று ஒரு காலத்தில் நம்பும் விதமாக நடந்து கொண்டவன், குடும்பத்துக்கே நீ பாரம் என்று எட்ட நிறுத்தி குற்றம் சாட்டியதை எண்ணிக் கலங்கும் மனதிற்கு எங்கே போய் ஆறுதல் தேட.
இங்கு வந்த அடுத்த வருடமே அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் வற்புறுத்த ஆரம்பித்த பெரியவர்களிடம் தனக்குள்ளே மூழ்கிப் போன காதலையும் பொய்த்துப் போன தன் மாமன் மகனையும் பற்றிக் கூறி விட்டாள்.
உறவுகள் மீது நம்பிக்கை இல்லாதவளுக்கு திருமணம் என்பதை நினைத்தாலே மனம் சோர்ந்து விடும்.
எத்தனை காலம் இங்கே இருப்பது? இந்த இடத்திற்கு ஒரி முடிவு காலம் வரும் போது என்ன செய்வது? என்று அவளுள் எழும் கேள்விகளுக்கு சத்தியமாக விடை தெரியாது தான்.
ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன் அடைக்கலமாக இந்த இடம் கிடைத்தது போல இன்னும் ஒரு இடம் கிடைக்காமல் போய் விடுமா? இறைவன் எனக்காக ஒரு ஏற்பாட்டை இவ்வுலகில் நிருவாமல் தான் இருப்பாரா? என்று தனக்குத் தானே ஆறுதலாகக் கூறிக் கொள்வாள்.
தன்னுள் எழும் கேள்விகளுக்கு விடை கண்டு தன்னைத் தானே சமாதானம் செய்து
அத்தனையையும் கடந்து விட்டாலும் கூட,
முதிர்க்கன்னி அவளுக்குள் அந்தக் காதல் மட்டும் நெருஞ்சியாய் தைத்துக் கொண்டு தான் இருந்தது இன்று வரை தொட்டுத் தொடரும் நினைவுகளாக!