கண் மூடாத இரவு-பரிவை சே.குமார்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 165 கண் மூடாத இரவு-பரிவை சே.குமார்

கார்ல போகலாம்ல்ல… இவ்வளவு தூரத்துக்குப் பஸ்ல போனா உடம்பு வலிதான் வரும்… அது போக இந்த வெயில் காலத்துல எப்படி பஸ்ல உக்காந்து போக முடியும்… சொன்னாக் கேக்க மாட்டீங்க… வீம்புதான் பண்ணுவீங்க… அவ்வளவு தூரம் உங்களால டிரைவ் பண்ண முடியாதுன்னா… நமக்கு எப்பவும் வர்ற டிரைவர் முத்துச்சாமிய வரச்சொல்லிப் போகலாமுல்ல… அவருன்னா பாத்துப் பதவுசா ஓட்டிக்கிட்டுப் போவாரு… எப்பவுமே நீங்க திடீர் திடீர்ன்னுதான் முடிவெடுப்பீங்க… யாரு சொல்றதையும் காதுல வாங்க மாட்டீங்க….” சற்றே கோபமாகப் பேசியபடி ராகவனுக்கு இரண்டு நாட்களுக்குத் தேவையான உடைகளை சூட்கேஸில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அபிராமி.

“பொயிட்டு வர ரெண்டு நாளாகும்… பஸ்ல போனாக் கல்யாண மண்டப வாசல்லயே எறக்கி விடப்போறான்… தர்ஷனுக்கிட்ட ஹோட்டல்ல ரூம் புக் பண்ணச் சொல்லிட்டேன்… கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்துலயே நல்ல ஹோட்டல் இருக்கு அதுல புக் பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டான்… அவனுக்கிட்ட கார் இருக்கு… அதை யூஸ் பண்ணிக்கப் போறேன்…  பின்னயென்ன அபி… எதுக்கு இங்க இருந்து அவ்வளவு தூரம் கார்ல போய்க்கிட்டு… டிரைவரைக் கூட்டிப் போனாலும் ரெண்டு நாள் அங்க தங்கி, அப்புறம் போக வர அது இதுன்னு தேவையில்லாத செலவுதானே… அதெல்லாம் வேண்டாம்ன்னுதான் பஸ்ல போகலாமுன்னு முடிவு செஞ்சேன்… அது போக இப்பத்தான் பஸ்ஸெல்லாம் சொகுசா விட்டுட்டாங்களே… அதுவும் சிலீப்பர் கோச்தானே புக் பண்ணியிருக்கு…. பின்னயென்ன தூங்கிக்கிட்டே போகப்போறேன்… வரும்போது தூங்கிக்கிட்டே வரப்போறேன்… நீ எதுக்கு இப்ப வீணாவுல வொர்ரி பண்ணிக்கிறே…”

“ஆமா சிலிப்பர் கோச் பஸ்ல தூங்கிக்கிட்டே போயிட்டாலும்… பெங்களூருக்கு அப்படித்தானே கூட்டிப் போனீங்க… அவன் போற வேகத்துக்கு வளைவுல திரும்பும் போது எங்க நம்மளக் கொண்டு போயி குப்பறச் சாச்சிருவானோன்னு தோணுச்சு… கீப்பெட்டுல படுத்த எனக்கே இப்படின்னா… மேப்பெட்டுல படுத்திருந்தவங்களுக்கெல்லாம்… தூங்குறாராம்… தூங்குறார்…. கார் இருக்கும் போது இப்படித்தான் வம்படியா பஸ்ல போவோம்ன்னு நிப்பீங்க… என்னமோ செய்யிங்க…”

“அபி… பெங்களூர் போய் இறங்கியதும் சேகர் கார் கொண்டு வந்து கொடுத்தானா இல்லையா…?”

“ம்… கொடுத்தாரு… கொடுத்தாரு… யாரு இல்லைன்னா…”

“பின்னயென்ன… அங்க உன்னையப் பஸ்லயோ ஆட்டோவுலயோ அலைய விடலையில்ல… இங்க இருந்தே கார்ல போவணுமாக்கும்… அதுவும் பெங்களூர் ஹைவேயில…”

“அலைய விட்டீங்கன்னு சொன்னேனா… பஸ்ல போறதுக்குத்தான் சொன்னேன்… கையில கார் இருக்கும் போது பஸ்ல போறேன்னு நிக்கிறதுதான் எரிச்சலா இருக்கு… கார் இல்லாதவங்க கூட கார் புக் பண்ணிப் போறாங்கங்க… நமக்கிட்ட ஒண்ணுக்கு ரெண்டு காரு இருக்கு… ஆமா… சரி எப்படியோ போங்க… சொன்னாக் கேக்கவா போறீங்க… பொயிட்டு வந்து என்னையப் படுத்தாம இருந்தாச் சரி…” என்றபடி சூட்கேசை எடுத்து அவன் முன்னே வைத்தாள்.

“மூணு சட்டை, ரெண்டு வேஷ்டி, ஒரு பேண்ட், ஒரு துண்டு, மூணு ஜட்டி, மூணு பனியன், ஒரு கைலி, ஒரு டவுசர், சோப்பு, பேஸ்ட், பிரஸ், ரேசர் எல்லாம் வச்சிருக்கேன். தேங்காய் எண்ணெய் பாட்டில் மட்டும் சின்னதா ஒண்ணு அங்க போயி வாங்கிக்கங்க… சரியா…”

“ஓகே…”

****

கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் இருந்து அந்தத் தனியார் சூப்பர் டீலக்ஸ் சிலிப்பர் கோச் பேருந்து புறப்பட்டது.

ராகவன் தனது பெட்டில் அமர்ந்தபடி எதிரே இருப்பவளைப் பார்த்தான். முப்பது வயதுக்குள் இருக்கும்… மைய்யமாய்ச் சிரித்து வைத்தாள். ராகவன் பெட்டுக்கு மேல் பெட்டில் ஒரு இளைஞன் ஏறியதும் மொபைலில் படம் பார்க்க ஆரம்பித்து விட்டான். அந்தப் பெண் இருந்தது இரண்டு பேர் படுக்கும் வசதி கொண்ட பெர்த்தில்… அவளருகே ஒரு வயதான அம்மா… கால் நீட்டிப் படுத்து விட்டார். அதன் மேலே இரண்டு இளைஞர்கள்… ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்… அவர்கள் பேச்சில் அந்தப் பெண் கூட இருந்திருக்கக் கூடும்.

ராகவனின் போன் அடித்தது. எடுத்து “என்னம்மா… வீட்டுக்குப் பொயிட்டியா..?” என்றான்.

“ம்… அப்பவே வந்துட்டேன்… காரைப் பார்க் பண்ணிட்டுத்தான் உங்களுக்குப் போன் பண்ணினேன்…”

“ம்… சரி”

“பஸ் சிட்டியைத் தாண்டிருச்சா….?”

“எங்க தாண்டுறது… செம டிராபிக்கா இருக்கு… மெல்ல மெல்லத்தான் நகருது… தாம்பரம் தாண்டிட்டா வேகமாப் போகும்ன்னு தோணுது… அதுவரை இப்படித்தான்… அதுபோக சீக்கிரமே கொண்டு போயி இறக்காம, ஆறுமணிக்கு கொண்டு போய் விட்டான்னா பத்தாதா…”

“ம்… சரி… சரி… அனுபவிங்க… இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க… வெளிய நல்ல குளிரிருக்கு… மப்ளரைக் கட்டிக்கங்க… அப்புறம் போற வழியில ஹோட்டல்ன்னு ஒரு கருமாந்திரத்துல நிப்பாட்டுவானுங்க… டீக்கூட குடிக்காதீங்க… வயித்துக்கு ஒத்துக்காது சரியா..?”

“சரி… அதெல்லாம் எனக்குத் தெரியும்மா… டிரைவர் கண்டக்டருக்கு ஓசியில போடுறான்னு பசிக்குத் திங்கறவனோட பர்ஸைக் காலி பண்ணுறவனுங்கதானே… அங்க எப்பவுமே நிக்க மாட்டேன்… இன்னக்கி எறங்கவே மாட்டேன் போதுமா… அதான் போதும் போதும்ன்னு சொல்லியும் இன்னொன்னு இன்னொன்னு சொல்லி ரெண்டு சப்பாத்திய எக்ஸ்ட்ராவாத் தள்ளிட்டியே… நாளைக்கு காலையில கூட பசிக்குதோ என்னவோ…” சிரித்தான் ராகவன்.

“ஆமா சாப்புட்டது ரெண்டு பட்டுப் போச்சு… அந்தக் கடைகள்ல வாங்கித் தின்னு தொலச்சிடாதியன்னு சொன்னாலும் டேஸ்ட் பாத்தேன் இப்ப வயிறு வலிக்குதுன்னு நிப்பீங்க… அதான் சொன்னேன்…  சரி சரி… காலையில இறங்கியதும் போன் பண்ணுங்க…. மறக்காம எங்க லஷ்மிச் சித்தி வீட்டுக்குப் பொயிட்டு வாங்க… அப்புறம் இம்புட்டுத் தூரம் வந்துட்டு உம்புருஷன் இங்க வரலைன்னு அது வேற சண்டைக்கு வரும்…”

“சரி… பொயிட்டு வாரேன்…”

“அப்புறம் உங்காளுங்க நான் வரலைங்கிறதைப் பெரிசாப் பேசி உங்ககிட்ட வம்பு இழுப்பாங்க… அவங்க கத்துனா கத்திக்கிட்டு இருக்கட்டும்ன்னு நீங்க யார்க்கிட்டயும் எதுவும் பேசிக்காதீங்க… அப்புறம் நாமதான் பொல்லாதவங்களாகணும்… “

“ம்…”

“முடிஞ்சா புவனா வீட்டுக்குப் போயி அந்தக் காசைக் கேட்டுட்டு வாங்க… எத்தன வருசமாச்சு… இந்தா இந்தான்னு இழுத்துக்கிட்டே இருக்காங்க… இதுவரை கொடுக்கலை… கொஞ்சம் கொஞ்சமாவாச்சும் கொடுத்திருக்கலாம்… நீங்களும் வாய் தொறந்து கேட்க மாட்டேங்கிறீங்க… இங்கேருங்க… நான் புவனா வீட்டுக்குத்தான் போச்சொன்னேன்… அங்க போயிக் கேளுங்க… கல்யாணத்துக்கு வர்றவங்கக்கிட்ட கேட்டுக்கீட்டு வச்சித் தொலைச்சிறாதீங்க… நீங்க பாட்டுக்கு கேட்டு வச்சிருவீங்க அங்கயும் எந்தலைதான் உருளும்…”

“சரி… சரி…. அவ வீட்டுக்குப் போயிக் கேட்டுட்டு வாரேன்… போதுமா… தேஞ்சுபோன ரெக்காடுமாரி காலையில இருந்து இதெல்லாம் நூறு தடவை சொல்லிட்டே… இப்பப் போனுலயுமா… என்னால முடியலம்மா…”

“ஆமா… எத்தனை தடவை சொன்னாலும் சரி சரியின்னு சொல்லிட்டு எதுவுமே செய்யாம மறந்துட்டேன்னு வந்து நிப்பீங்க… அதான் திரும்பத் திரும்பத் சொல்றேன்… ஓகே… குட் நைட்… தூறல் போட ஆரம்பிக்குது… சன்னல்லாம் திறக்காதீங்க… எதிர் சீட்டுல யாராவது இருந்தா மொக்க போட்டு அவங்க தூக்கத்தைக் கெடுக்காம படுத்துத் தூங்குங்க… திருச்சிக்கு அங்கிட்டு ரோடு போடுறேன்னு அங்கங்க வெட்டிப் போட்டு வச்சிருக்கானுங்கன்னு பேப்பர்ல படிச்சேன்… என்னதான் ஏர் பஸ்ஸா இருந்தாலும் தூக்கித்தான் போடும்… இங்குட்டே தூங்கிக்கங்க… அங்கிட்டுப் பொயிட்டா தூங்க முடியாது….”

“சரிங்க மகாராணி… உத்தரவு… தூங்கிட்டேன்…” எனச் சிரித்தபடி போனைக் கட் பண்ணினான்.

எதிர் பெட்டில் இருப்பவள் அவனைப் பார்த்துச் சிரித்தபடி மொபைலில் மூழ்கினாள்.

****

திருமணம் முடிந்த மாலை, ‘தர்ஷா அபியோட சித்தி வீட்டு வரைக்கும் பொயிட்டு வரணும்… வர்றியா..?’ என்றான் ராகவன்.

“நாளைக்கு விருந்துக்கு பார்க்க வேண்டிய வேலை நிறைய இருக்குண்ணா… நீ பொயிட்டு வாயேன்… வரும்போது நேரே வீட்டுக்கு வந்துரு… அங்க சாப்பிட்டுக் கீப்பிட்டு பேசிக்கிட்டு இருந்துட்டு நைட் அங்கயே படுக்கலாம் இல்லேன்னா நாம ரூமுக்கு வந்துக்கலாம்…”

“அப்ப நீ வரமாட்டேயில்ல… அபியோட சொந்தங்கள் இப்பவும் நமக்குத் தூரம்தான் இல்லையா… அதேமாரி நம்ம சொந்தங்கள் அவங்களுக்குத் தூரம்… ம்… இருபது வருசத்தைக் கடந்த பின்னாலயும் இன்னமும் அந்தக் கசப்பு நம்ம ரத்தத்துல ஓடிக்கிட்டுத்தான் இருக்குல்ல…”

“இல்லண்ணே… அப்படியெல்லாமில்லை… வேலை இருக்குன்னுதான் உன்னைப் போகச் சொன்னேன்….”

“விடு… நீயின்னு இல்ல… எல்லாருமே அப்படித்தான் இருக்கோம்… ம்… என்னமோ தெரியலை என்னோட திருமணமும் அதன் பின்னான நிகழ்வுகளும் எல்லாத்தையும் மாத்திருச்சு… இந்தா இன்னைக்கு எங்கிட்டயே பல பேர் முகம் கொடுத்துப் பேசலை… நான் பழகிட்டேன்… கடந்து போயிடுறேன்… ஆனா இதே அபி வந்திருந்தா… அவ இன்னும் இதெல்லாம் பழகிக்கலை… எங்கூடத்தான் சண்டைக்கு நின்னிருப்பா… காலம் எல்லாத்தையும் மாத்திரும்… காலம் எல்லாத்தையும் மாத்திரும்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கலாமே தவிர, எதுவும் இன்னக்கி வரைக்கும் மாறலை… எல்லாம் அப்படியேதான் இருக்கு… எல்லாருக்குமே நாங்க தப்புச் செஞ்சவங்கதான்… இருந்துட்டுப் போறோம், என்ன நம்மள்ல பாதிப் பேருக்கு நான் நல்லவன்… அங்கிட்டுப் பாதிப் பேருக்கு அபி நல்லவ… ஆனா எல்லாருக்குள்ளும் எங்களால அன்பால கூட நுழைய முடியலைதானே… இனி நுழையவும் விருப்பமில்லை… இப்படியே போகட்டும்டா… இதுவும் நல்லாத்தானே இருக்கு… இப்ப யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையில்ல…”

“அண்ணே… நா அப்படி நினைக்கலண்ணே…”

“சரி விடு… நீ அவங்களோட நாளைக்கு விருந்துக்கு ஆக வேண்டிய வேலையைப் பாரு… இந்தாத்தானே இருக்கு நானே பொயிட்டு வந்துடுறேன்… இம்புட்டுத் தூரம் வந்துட்டு போகாமப் போனா உங்க சொந்த பந்தம் தெரிஞ்ச கண்ணுக்கு எங்க சொந்தபந்தம் தெரியலையாக்கும்ன்னு அபி வருத்தப்படுவா…” என்றபடி தர்ஷனிடம் இருந்து கார்ச்சாவியை வாங்கிக் கொண்டு லஷ்மிச் சித்தி வீட்டுக்குக் கிளம்பினான்.

அன்று இரவு தர்ஷனுடன் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான்… இப்படியான பேச்சு அவனுக்கு இது போன்ற தருணங்களில்தான் கிடைக்கும்… சில நேரங்களில் அது ஆத்மார்த்தமான பேச்சாக இருக்கும்… அப்படித்தான் அன்றைய இரவு கழிந்தது.

****

“வாங்கத்தான்…” சேலைத் தலைப்பால் முகம் துடைத்தபடி வரவேற்றாள் புவனா.

“ம்… உனக்கு ஏன் இப்படி வேர்த்திருக்கு…?” என்றபடி அந்த ஓட்டு வீட்டுக்குள் நுழைத்தான் ராகவன்.

ஒட்டடை கூட அடிக்காமல்… தரையெல்லாம் சிமிண்ட் பெயர்ந்து… சுவரெல்லாம் ஒவடு ஏறிப்போய்… இருந்தது அந்த வீடு. மூலையில் ஒரு நாற்காலியில் பாயும் தலையணையும் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பச்சைக்கலர் தகர சேர் ஒன்று மடக்கி வைக்கப்பட்டிருந்தது. வேகவேகமாக அதை எடுத்து விரித்துப் போட்டாள்.

“உக்காருங்கத்தான்… பின்னால கசால கூட்டிக்கிட்டு இருந்தேன். கார்ச்சத்தம் கேக்கவும்தான் ஓடியாந்தேன்… கல்யாண மண்டபத்துல பாக்கும் போது கூட நீங்க இங்க வாரேன்னு சொல்லலயே…” முகமெல்லாம் பூரிப்பாய்க் கேட்டாள்.

“ஆமா… மண்டபத்துல எங்க பேச நேரமிருந்துச்சு… கசகசன்னு ஒரே கூட்டம்… இதுல என்னைய மொய் எழுதுற இடத்துல வேற உக்கார வச்சிட்டாங்க…. அப்புறம் எங்கிட்டுப் பேசுறது… நேத்தைக்கு விருந்துக்கு நீ வருவேன்னு எதிர் பார்த்தேன்… அவரு மட்டுந்தான் வந்திருந்தார்… வந்திருக்கலாமுல்ல…” 

“இதுகளப் போட்டுட்டு எங்கத்தான் வரமுடியாது… அதான் அவுகள மட்டும் போகச் சொன்னேன்… அதுவும் வரலன்னு எல்லாரும் திட்டுவாகன்னுதான் அவுகள அனுப்புனேன்… கடயப் போட்டுட்டு அவுக போனா நமக்குத்தானே நட்டம்…”

“இன்னைக்கு ராத்திரி பஸ்லதான் டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்… வந்தது வந்துட்டோம்… அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு தோணுச்சு… அங்க பழக்கமான ஒருத்தர் அவுக மாமா வீட்டுக்குப் பொயிட்டு வரச்சொன்னாரு… அவருக்குப் போன் பண்ணுனா மத்தியானம் சாப்புடுறமாரி வாங்கன்னு நிக்கிறாரு… அதான் காலையிலயே இங்க வந்தேன்… அடுத்து எப்ப வருவேன்னு தெரியாது… அடிக்கடி வர்ற மாதிரியா இருக்கு…”

“ம்… ” என்றவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

தண்ணீரைக் குடித்துவிட்டு “ஆமா… அவரு… பசங்கள்லாம் எங்க..?” என்றான்.

“அவருக்கு இன்னைக்கு கட லீவுதான்… எங்கயோ வெளிய போறேன்னுட்டுப் போனார்… பெரியவளுக்கு கிளாஸ்… சின்னவ பிரண்ட் வீட்டுக்குப் படிக்கப் போறேன்னு பொயிட்டா… ரெண்டுமே நல்லாப் படிக்குதுகத்தான்… அதுக விரும்புனதப் படிக்க வக்க வசதி வாய்ப்பு இல்லேன்னாலும் முடிஞ்சதப் படிக்க வக்கணுமின்னு ஆசயிருக்குத்தான்…”

“ம்… இப்படியேவா வாழ்க்க போயிரும்… அதுக விரும்புனதையே படிக்குங்க… விடு… ஆமா நீ எப்படியிருக்கே..?”

“இருக்கேன்… நல்லாயிருக்கேன்னு சொல்ல முடியாட்டியும் நடமாடிக்கிட்டு இருக்கேன்ல…” சோகமாய்ச் சிரித்தவள், “காபி போடவா…?” என்றாள்.

“ம்… போடு… உன்னோட காபி வேண்டான்னு சொல்ல முடியுமா..? எம்புட்டு நாளாச்சு அந்த ஸ்ட்ராங் காபி குடிச்சு… அதுவும் கிருஷ்ணா காபியில போட்டுத் தருவியே… அட்டா… அந்த வாசம்…” சிரித்தான்.

“ம்… இப்பவும் இருக்கு… ஆனா இவுகளுக்கு ப்ரூதான் பிடிக்கும்… நானும் மாறிட்டேன்…”

காபியைக் கொடுத்து விட்டு “அபி எதுவும் சொல்லி விட்டாளா…?” மெல்லக் கேட்டாள்.

“ஒண்ணும் சொல்லலையே… ஏங்கேக்குறே…?”

“இல்ல… கஷ்டம்ன்னப்போ கொடுத்தீங்க… இத்தன வருசமா திருப்பிக் கொடுக்காம வச்சிருக்கோம்… அதான் இங்க வரும் போது போயிக் கேட்டுட்டு வாங்கன்னு உங்ககிட்ட சொல்லி விட்டாளாக்கும்ன்னு கேட்டேன்…”

“அப்ப நான் உன்னையப் பாக்க வராம பணத்தைக் கேக்க வந்திருக்கேன்னுதானே நினைச்சிருக்கே…” என்றான்.

“அய்யய்யோ அப்படிச் சொல்லல… நாங்க இல்லாதவுகளாப் போனதாலதான் நம்ம சொந்த பந்தம் யாரும் எங்க பக்கமே வர்றதில்ல… பால் வியாபாரத்துல கெடக்கிறதயும் அவரு கடயில வர்ற வருமானத்தயும் வச்சித்தான் எங்க வாழ்க்க ஓடுது… அதுனாலதான் திருப்பிக் கொடுக்க முடியல… தப்பா நினைப்பீங்கன்னுதான் உங்ககிட்ட பேசக்கூட யோசனயா இருக்கு…”

“லூசு… நீ யாரு… அன்னைக்கு நானும் அபியும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு சொன்னப்போ குடும்பப் பகையைக் காரணம் காட்டி எல்லாரும் எதிர்த்தாங்க… அப்ப நீ ஒண்ணும் பெரிய மனுசியில்லை… என்னை விட வயசு கம்மிதான்… ஆனா கல்யாணம் ஆனவங்கிற தைரியத்துல எனக்குத் துணையா நின்னே… ஆக்சுவலாப் பாத்தா நீ எங்க வீட்டுக்குத்தான் மருமகளா வந்திருக்கணும்… ஒண்ணு ராசண்ணனோ இல்ல நானோதான் கட்டியிருக்கணும்… அப்பாவோ அண்ணனுக்கு கட்டிக்க மாட்டேன்… பின்னால பார்க்கலாம்ன்னு சொன்னார்… அந்தக் கோபத்துல அத்தை அத்தோட அத்துக்கிட்டுப் போயி உனக்கு வேகவேகமா கல்யாணம் பண்ணி வச்சிருச்சு… ம்… காலம் கடந்து இதெல்லாம் பேசி என்ன பண்ண… ஆனாலும் எல்லாப் பகையும் ஒரு பக்கமிருந்தாலும் நீ எம்பக்கம் நின்னேதானே…”

“ம்… உங்களைக் கட்டிக்கணும்ன்னு எனக்கும் ஆசதான்… மாமா ஏதோ சொல்லப்போக அம்மா வீம்புக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருச்சு… ம்… விதி… இனி அதெல்லாம் பேசி என்ன பண்ண… அபிக்கிட்டச் சொல்லுங்க… இன்னும் கொஞ்ச நாள்ல தந்துடுறேன்னு… ஏமாத்திடமாட்டேன்னு…” தரையைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள்.குரல் கம்மியிருந்தது.

“ஏய் அதை விடு… அதெல்லாம் நீ தர வேண்டாம்… நான் அபிக்கிட்ட சொல்லிக்கிறேன்… விடு… எல்லாரும் உன்னையத் தேடி வர்ற காலம் ஒருநாள் வரும்… கவலைப்படாதே….”

“எப்பத்தான் அந்தக் காலம் வரப்போகுது… நமக்கெல்லாம் வயசாயிருச்சு… இனியும் காலம் வரும் காலம் வரும்ன்னு… காத்திருந்தா அம்புட்டுத்தான்… என்ன எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்… என்ன பொட்டப்புள்ளய ரெண்டயும் கட்டிக் கொடுத்துட்டாப் போதும்…”

“எல்லாம் நல்லா நடக்கும்… எதையும் போட்டு மனசைக் குழப்பிக்காதே…  போறது போறீங்க அப்படியே பாத்துட்டு வாங்கன்னுதான் அபி சொன்னா… நம்ம உறவுகள்ல நாங்க நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கிற சொற்ப பேர்ல நீயும் ஒருத்தி… அபி சொல்லலைன்னாலும் இங்க வந்துட்டு உன்னையப் பாக்காமப் போவேனா…” என்றபடி எழுந்தான்.

“அத்தான் கண்டிப்பா திருப்பிக் கொடுத்துடுறேன்னு அபிகிட்டச் சொல்லுங்க… கடனாளியாச் சாகமாட்டேன்… அப்புடிச் சாகவும் பெரியநாயகி விடமாட்டா…” என்றபடி முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“ம்… விடுன்னா விடமாட்டே… எங்கப்பத்தாவோட குணம் உனக்கு…” சிரித்தான்.

“பாத்து… குனிஞ்சி போங்க… நிலைப்படி உங்க உயரமில்லை…” என்றாள்.

“ம்…” என்றவன் என்ன நினைத்தனோ பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்து இரண்டு இரண்டாயிரம் ரூபாயை அவள் கையில் வைத்தான்.

“வேண்டாந்தான்… இன்னும் நாங்கடங்காரியா ஆகணுமா…?” என்றபடி கையை உதறியவளின் உதடு சொல்லும் போதே கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“ஏய்… என்னது… யார் கொடுக்கிறா… நாந்தானே… எங்கிட்ட இருக்கு கொடுக்கிறேன்… அவ்வளவுதான்… கண்ணக் கசக்கிக்கிட்டு… யாருக்குள்ள யாரு நாம… நீ என்னோட அத்தை பொண்ணு… நான் உன்னோட மாமா பையன்… சின்ன வயசுல ஒண்ணாத் திரிஞ்சவங்கடி… இது ரத்த உறவுடி… இதுக்குள்ள என்ன பார்மாலிட்டீஸ் பாத்துக்கிட்டு…” என்றவன் அவளை ‘டீ’ போட்டு உரிமையுடன் கூப்பிட்டதுக்கு மன்னிப்புக் கேட்டான்.

“டீன்னு சொன்னா என்ன இப்போ… உங்களுக்கு உரிமையில்லயா என்ன…. நாம எல்லாரும் ஒண்ணாயிக்கும் போது எப்பவும் என்னய டீத்தானே போட்டுக் கூப்பிடுவீங்க… இப்ப என்ன புதுசா மன்னிப்புக் கேட்டுக்கிட்டு… வாழ்க்க  மாறினா எல்லாமுமா மாறும்… நாம அனுபவிச்ச சந்தோசங்கள் எங்கயாச்சும் ஒரு மூலயில இருக்கத்தானே செய்யும்… அது அப்பப்ப இப்படித்தான் வெளிய வரும்… நானெல்லாம் அடிக்கடி நாம மாங்காய் புடிங்கி மிளகாயும் உப்பும் போட்டுச் சாப்பிட்டதயும்… நாம் போட்ட ஆட்டத்தயும் நெனச்சிச் சிரிச்சிப்பேன்… அந்தக் காலம் இனிமே வராதுல்லத்தான்… எல்லாமே முடிஞ்சிதான் போச்சுல்ல… இனி அதெல்லாம் கனவுல கூட நடக்காதுல்ல…” என்றபடி பணத்தை ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். கழுத்துக்கு கீழிருக்கும் அந்த வட்டக் கனமான மச்சம் ராகவன் கண்ணில் பட்டது.

சின்ன வயதில் இது என்னடி கருப்பி உடம்புல கரும்புள்ளி எனக் கிள்ளி விளையாண்டது ஞாபகத்தில் தோன்றி மறைய, கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.

அவளிடம் விடை பெற்று வந்த பின்னும் அந்த மச்ச நினைவு மட்டும் விடையெறாமல் மனசுக்குள் நின்றது.

பேருந்தில் ஏறியவன் புவனா விசயத்தில் அபியிடம் என்ன சொல்லலாம் என யோசித்தவனை புவனாவின் வட்ட மச்சம் நினைவில் ளழுந்து பல விஷயங்களை மனசுக்குள் படமாய் திரையிட, ஏதாவது சொல்லிச் சமாளிச்சிக்கலாம் என் நினைத்தபடி அபிக்கு பஸ் கிளம்பிவிட்டது எனப் போன் செய்து சொல்லிவிட்டு போனில் கண்களைப் பதித்தான். பழைய நினைவுகள் அவனைச் சுற்றிச் சுழன்றன.

நேரம் நகர்ந்து கொண்டிருக்க, ‘உம்ம்ம்ம்ம்’ என்ற ஒலியுடன் பேருந்து விரைந்து கொண்டிருந்தது.

‘ஏதோ நினைவுகள்… கனவுகள் மனதிலே மலருதே… காவேரி ஊற்றாகவே…. காற்றோடு காற்றாகவே…’ என மேல் பெட்டில் படுத்திருந்தவரின் செல்போனில் ஜேசுதாஸ் மெல்லப் பாடிக் கொண்டிருந்தார்.

ராகவனின் வாழ்வில் பல வருடங்களுக்குப் பிறகு, அன்றைய இரவு கண் மூடாத இரவாக நகர்ந்து கொண்டிருந்தது.

Exit mobile version