உயிரில் கலந்த உறவே-அனுராதா ஜெய்ஷங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 180 உயிரில் கலந்த உறவே-அனுராதா ஜெய்ஷங்கர்

**************************

 பன்னீரும் சந்தனமும் ரோஜாவும் மல்லிகையும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தத் திருமண மண்டபத்தின் காற்றை மணக்க வைத்துக் கொண்டிருந்தன. பட்டுப்பாவாடை களும் குட்டி பட்டு வேட்டி சட்டைகளும் அணிந்த குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். வைரக் கம்மல்களும் மூக்குத்திகளும் டாலடிக்க நரைத்த தலைமுடியை கொண்டையாக போட்டு மல்லிகைப் பூச்சூடி ஸ்டிக்கர் பொட்டு இல்லாமல் குங்குமம் வைத்துக் கொள்கிற கடைசி தலைமுறையின்  மூத்த பெண்மணிகள் பட்டுப்புடவைகள் சரசரக்க பரபரப்புடன் வளைய வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரது உற்சாகம் தொற்றிக் கொண்டது போல் நாதஸ்வர காரர்கள் இசையை மிதக்கவிட்டு கொண்டிருந்தார்கள். ராகவனும் ரம்யாவும் தங்களின் ஒரே மகள் அனன்யாவின் திருமண நிகழ்வை எதிர்நோக்கி மகிழ்ச்சி, எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்கிற கவலை, மகளை பிரிய வேண்டும் என்கிற தவிப்பு எல்லாமுமாக சேர்ந்து ஒரு கலவையான மனநிலையில் பரபரப்புடன் இருந்தார்கள்.

மணி ஏழரை. ராகவனுக்கு விடியற்காலையில் எழுந்து கொள்ளும் போது இருந்த படபடப்பு மீண்டும் சற்று தலை தூக்குவது போல் இருந்தது. வயிற்றில் ஏதோ சங்கடம் பண்ணியது. லேசாக மார்பில் வலி வருவது போன்று இருந்தது. தலையை உதறிக்கொண்டு என்னாயிற்று, ஒன்றுமில்லை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். எட்டு மணிக்கு தானே காசியாத்திரை நிகழ்ச்சி, மணி எழரைதான்,   ஒரு பத்து நிமிடம் அறையில்  சென்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம் என்று நினைத்தவாறே தங்களுக்கு என்று வைத்துக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு ரம்யா ஏதோ சாமான் எடுப்பதற்காக வந்தவள் இவரைப் பார்த்துவிட்டு

 “இப்போ இங்க என்ன பண்றீங்க? வர்ற எல்லோரையும்  வரவேற்க வேண்டாமா?” என்றவள் அவர் முகத்தை கவனித்து கொஞ்சம் பதட்டம் ஆனாள்.  

“என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு ஏதாவது பண்றதா என்ன? முகமே சரி இல்லையே?” என்று பதறினாள்.

“ஒன்னும் இல்லை ரம்யா. தொடர்ந்தார் போல வேலை, ரெண்டு மூணு நாளா சரியா தூக்கமில்லை, எல்லாம் சேர்ந்து கொஞ்சம் அசதியா இருக்கிற மாதிரி இருந்தது. சரி, எட்டு மணிக்கு காசி யாத்திரை ஆரம்பிக்கறப்போ புரோகிதர் கூப்பிடற வரைக்கும் ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன். நீ ஒன்னும் பயப்படாம போய் உன் வேலையை கவனி”.

அவர் வாய் தைரியமாக பேசினாலும் உள்ளே உடம்பு சொல் பேச்சு கேட்காதது அவருக்கே தெரிந்தது. அவளிடம் காட்டாமல் இருக்க பிரயத்தனப் பட்டார்.

” நிச்சயமா வேற ஒண்ணும் இல்லையே?” அவள் குரலில் நம்பிக்கை இல்லை.

” ஒண்ணும் இல்லம்மா. இருந்தா நானே சொல்ல மாட்டேனா? எனக்கு அக்கறை இல்லையா?”

” சரி, நீங்க பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுங்க. நான் எதுக்கும் யாரையாவது இங்கே துணைக்கு வைக்கிறேன் ” என்றவள் அந்த பக்கம் போன தன் மைத்துனர் மகன் கௌதமை கூப்பிட்டாள்.

” கௌதம் இங்கேயே உட்கார்ந்து மொபைல் கேம் விளையாடு. பெரிப்பா எழுந்து வரும்போது நீயும் வா” என்று சொல்லிவிட்டு கண்களாலே ராகவனிடம் கவனம் என்று காண்பித்து விட்டு விரைந்தாள். தோளிலிருந்து அங்கவஸ்திரத்தை உதறி மார்பில் போர்த்திக் கொண்டு நாற்காலியில் சற்று தளர்வாக சாய்ந்தபடி உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார் ராகவன். கண்களுக்குள் அனன்யா விரிந்தாள். திடீரென சம்பந்தமில்லாமல்  முதல் நாள் மதியம் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் வந்தது .

                 *******

முதல்நாள் மதியம் மண்டபத்தில்  எல்லோருக்கும் அறைகள் ஒதுக்கி கொடுத்து விட்டு, தன் பெட்டிகளை அனன்யாவின் அறையில் இருந்து எடுத்துக் கொண்டு போவதற்காக உள்ளே வந்தார். அப்போது அனன்யாவும் அவரது தம்பி மகள் ஆர்த்தியும் மட்டும் அறையில் அமர்ந்து மொபைலில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தனர். அவர் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து பணக்கட்டுகளை எண்ணி சரி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஆர்த்தி அனன்யாவிடம் சொன்னாள்.

” அக்கா, நீ சொன்ன மாதிரி பொக்கே ஆர்டர் பண்ணிட்டேன்.பேர் என்ன கொடுக்கட்டும்?” என்றாள்.

“ம்ம்.. அனன்யா ஆகாஷ் னு போடு” என்றாள் அனன்யா.

 ஆர்த்தி மெலிதாக கூவினாள்.  “இங்கே பார்றா,  நாளைக்கு தான் கழுத்துல உனக்கு தாலி ஏற போறது. அதுக்குள்ள அனன்யா ஆகாஷ் .. பெரிப்பா,  எப்படி ஈஸியா அனன்யா ராகவன்னு  இருந்த பேரை,  உங்களை கழட்டி விட்டுட்டு அனன்யா ஆகாஷ்னு இப்பவே ஆக்கிட்டா பாருங்கோ” என்று சிரித்தாள். ராகவனும் மனதார சிரித்துவிட்டு தான் இருப்பதை கவனிக்காமல் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டு வெட்கப்படுகிற மகளை பார்த்து கன்னத்தில் தட்டிவிட்டு தன் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டார்.

                     *********

 அனன்யா ராகவன், அனன்யா ஆகாஷ் என்று சொல்லிப் பார்த்துக் கொண்டார். அப்போது அவர் தம்பி ரமேஷ் வந்து “அண்ணா உன்னை எங்கெல்லாம் தேடறது ? நேரமாச்சு வா “என்று கூப்பிடவும் எழுந்து கிளம்பி வெளியே சென்றார். காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் அழகாக, சந்தோஷமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அனன்யாவிற்கு முகூர்த்த புடவை ஓதிக்கொடுத்து அதை அவள் அணிந்து கொண்டு வந்தபோது அவருக்கு கண்களும் மனதும் நிறைந்து போயின. சட்டென  திரும்பவும் அந்த வலிஎட்டிப் பார்த்தது. யாரும் பார்க்காமல் சற்று நெஞ்சை அழுத்தி தடவி விட்டுக் கொண்டார்.

” ராகவன் சார், அந்த நாற்காலியில் உட்காருங்கோ. அம்மாடி , நீ அப்பா மடியிலே பூத்தாற்போல உக்காந்துக்கோ” என்றார் புரோகிதர்.

 மணப்பெண்ணாக வந்த அனன்யாவை மென்மையாகத் தன் மடியில் இருத்திக் கொண்டார். மனது அவர் கட்டுப்பாட்டையும் மீறி பறந்தது. முதன் முதலில் தலை நிற்காத குழந்தையை தூக்க பயந்து மடியில் கிடத்திக் கொண்டு கொஞ்சியது, ஆறு மாத குழந்தையாக இருந்த அனன்யாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டு தான் தான் ஊட்டுவேன் என்று ஆசைப்பட்டு, திமிறிய குழந்தைக்கு  ஊட்டத் தெரியாமல் மூக்கிலும் வாயிலும் ஆக உணவை கொடுத்து மனைவியிடம் திட்டு வாங்கிக் கொண்டது, அவளின் ஒன்றரை வயதில் வண்டியில் தன் மடியில் முன்னால் உட்கார வைத்துக்கொண்டு ஒட்டியது, ஐந்து வயதில் காரில் தன் மடிமீது உட்கார வைத்துக்கொண்டு டிரைவிங் செய்தது, எப்போது அனன்யா பரிசு வாங்கினாலும் ஓடி வந்து அவரிடம் காண்பித்து விட்டு தொப்பென்று மடியில் ஏறி உட்கார்ந்து கொள்வது எல்லாம் வரிசையாக மனக் கண்ணில் வந்து போயின. இப்போது போல் இன்னொரு முறை உட்கார்வாளா என்று  ஏனோ தோன்றியது. அவளது இரு கைகளையும் சற்று மென்மையாக இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று முழங்க,  அனன்யாவின் கழுத்தில் ஆகாஷ் தாலியைக் கட்ட , அழகாக மாங்கல்ய தாரணம்  நடந்தேறியது. ராகவனுக்கு எல்லாமே கனவு போன்று இருந்தது.

” ராகவன் சார்,  பொண்ணு கழுத்தில் தாலி ஏறியாச்சு. எழுந்து மாப்பிள்ளை கூட மணைக்கு வரணும்.  இப்படி இறுக்க கையை பிடிச்சு இருந்தால் எப்படி எழுந்துப்பா? பொண்ணை விடுங்கோ” என்று புரோகிதர் சொல்ல, எல்லோரும் சிரித்தனர். ராகவன் சட்டென்று நனவுலகுக்கு வந்தவராக கைகளை தளர்த்த அனன்யா மெல்ல எழுந்து கொண்டாள். கைகள் சட்டென்று வெறுமையாகி போனது போலிருந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் வாழ்த்தியதும், மாப்பிள்ளை வந்தாச்சா என்று கேட்டதும் யாருக்கோ  நடப்பது போலிருந்தது .ரொம்பவும் உடம்பில் சங்கடம் அதிகமாவது போலிருக்கவே ரம்யாவிடம் கண்ணை காட்டி விட்டு மெல்ல எழுந்து தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

ரம்யா  சுற்றி இருந்தவர்களிடம் இருந்து தன்னை மெல்ல  விடுவித்துக் கொண்டு அவரைத் தொடர்ந்து அறைக்குள் வந்தாள். 

” உடம்பை என்னப்பா பண்றது , கடவுளே, எனக்கு பயமாயிருக்கு, கொஞ்சம் இப்படியே உட்காருங்கோ. நான்  நம்ம டாக்டர் ஆனந்த் வந்திருக்கார். அவரை கூப்பிடுறேன் “என்றபடி உடனே டாக்டரை வரவழைத்து விட்டாள். ராகவனுக்கு அதற்குள் வியர்த்துக் கொட்டி தெப்பமாக உடல் நனைந்து விட்டிருந்தது. டாக்டர் உள்ளே வந்தவுடன் அறை கதவை தாளிட்டாள்.

” டாக்டர் என்ன ஆச்சு பாருங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றவள் மெலிதாக அழத் தொடங்கினாள். 

“பயம் வேண்டாம். நான்தான் வந்துட்டேன் இல்லையா, பாத்துக்கறேன் விடுங்கோ” என்ற டாக்டர்  ராகவன் நாடியை பிடித்து பரிசோதித்தார். சில நிமிடங்கள் கரைய “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ராகவனுக்கு இப்போ வந்திருக்கிறது FPS, தானா அது சரியாயிடும்” என்றார்.

“என்ன டாக்டர் சொல்றீங்க? FPS ஆ?”

” ஆமாம்மா, ஃபாதர் பொசசிவ்னஸ் சிண்ட்ரோம் . இத்தனை நாள் தன் பொண்ணு தனக்கே சொந்தம் அப்படின்னு ஹாய்யா இருந்தார்.  இப்போ அனன்யாவை என் பொண்டாட்டின்னு சொல்லி உரிமை கொண்டாட மாப்பிள்ளை வந்தாச்சு. அது சாருக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு . இன்னும் ஜீரணிச்சுக்க முடியலை. அதுதான். என்ன ராகவன் நான் சொல்றது சரிதானே ?”என்றபடி சிரிக்க ராகவன் அவர் சொல்வதை ஒத்துக் கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் சங்கடமாக சிரித்தார் . அதற்குள் அறைக்கதவு தட்டப்படவே, ரம்யா திறக்க,” குரூப் போட்டோ எடுக்க கூப்பிடுறா. எல்லாரும் வாங்கோ “என்று அழைத்தான் கவுதம்.

 ராகவன் முகத்தை துடைத்துக்கொண்டு ஒரு வழியாக வெளியே வர வரிசையாக போட்டோக்கள் எடுக்கும் படலம் நடந்து முடிந்தது. போட்டோகிராஃபர் பெண் மாப்பிள்ளையிடம் “நீங்க  எல்லாரோடவும் எடுத்து ஆச்சுன்னா ரெண்டு பேரும் தனியா வாங்க. கொஞ்சம் ஷூட் இருக்கு” என்று கூப்பிட, அனன்யா ஒரு நிமிஷம் சார் என்றவள் சுற்றுமுற்றும் பார்த்து அப்பா என்று கூப்பிட்டாள்.

 அருகே வந்த ராகவனை” இந்த ஸோபாவில் உக்காருங்கப்பா” என்று சொல்லிவிட்டு ஆகாஷிடம் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்றாள்.

ஃபோட்டோகிரபரிடம்” அண்ணா,  நான் என் அப்பா மடியிலே உட்காந்துக்கறேன். அழகா ஒரு போட்டோ எடுங்க. எனக்கு அதை ஃப்ரேம்  பண்ணனும்” என்று சொல்லிவிட்டு எப்போதும் போல் தொப்பென்று அவர் மடியில் உட்கார்ந்து இரு கைகளாலும் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவர் கன்னத்தில் தன்  கன்னத்தை வைத்து “அப்பா, ஸ்மைல்” என்றபடி போட்டோகிராபரை பார்த்து சிரிக்க அவன் வரிசையாக கிளிக்கினான். போய் கேமராவில் போட்டோவை பார்த்து திருப்தியாக தலை அசைத்துக் கொண்டவள் ராகவனை கூப்பிட்டு காட்டினாள். சரிப்பா, நான் ஃபோட்டோ ஷூட் முடிச்சிட்டு வரேன் என்றவள் கணவனிடம் திரும்பி தலை அசைக்க, இருவருமாக சென்றார்கள்.

ராகவனுக்கு வலி எல்லாம் போன இடம் தெரியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியவர், யாரிடமோ பேசிக் கொண்டு நின்ற ரம்யாவை கூப்பிட்டார்.

” ரம்யா, கீழே சம்பந்தி பேர் பந்தி நடக்கறது. நீ இங்க நின்னு பேசிண்டு இருக்க, கவனிக்க வேண்டாமா? வா என் கூட” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைய, என்ன ஆயிற்று இவருக்கு என்று புரியாமல் பின் தொடர்ந்தாள் ரம்யா.

                    ********

 

Exit mobile version