கண்ணோட்டம்-முகிலன் உதயா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 182 கண்ணோட்டம்-முகிலன் உதயா

மோனிக்கண்ணு நீ தான் நம்ம தலைமுறையிலேயே முதல்ல காலேஜ் படிக்க போற! பார்த்து நடந்துக்கோ.யார்கிட்டயும் தேவை இல்லாம பேசக்கூடாது. யார் என்ன கொடுத்தாலும் வாங்கக்கூடாது. யார் எங்க கூப்பிட்டாலும் போகக்கூடாது.

நாம உண்டு நம்ம வேலை உண்டுண்ணு படிக்கிற வேலையை மட்டும் பார்க்கணும். யாரையும் சீக்கிரம் நம்பக்கூடாது. தேவையில்லாமல் சத்தமா பேசவோ சிரிக்கவோ கூடாது.

 நம்ம குடும்ப கஷ்டம் தெரியும்ல! அத மனசுல வெச்சு நடந்துக்கோ. மத்தவங்களோட ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. உன்னோட படிக்கறவங்க யார்க்கிட்டயும் எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது.டவுனுக்கு போற, அங்க உன்னோட பொழப்பை மட்டும் பார்க்கனும்.

 உனக்கு படிப்புல பாடம் புரியலன்னா வாத்தியார் கிட்ட கேட்டு படிக்கணும். ஏதோ என்னோட சத்துக்கு ஒரு அஞ்சு செட்டு புதுத்துணியும், ஒரு பட்டன் போனும் வாங்கி தரேன். காலேஜ் ஹாஸ்டல்ல உனக்கு இடம் கிடைக்கல. வெளியே ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சாகனும்.

 ஹாஸ்டல் சாப்பாடு நம்ம வீட்டுல செய்யுற மாதிரி வராது. ஆனா சாப்பாட்டுக்கு காசு கொடுக்கறத ஞாபகம் வச்சு ஒழுங்கா சாப்பிடனும். தேவையில்லாமல் செலவு பண்ணக்கூடாது. நேரம் கிடைக்கும்போது வீட்டுக்கு போன் பண்ணு.

” உன்னோட போனுக்காக இந்த அம்மாவும் பாப்பாங்களும் காத்திட்டு இருப்போம் சரியா?” சரி மா என்ற மோனியின் மனதில் காலேஜ் பற்றி நினைக்கும் போதே கிளி பிறந்தது.

விவசாய தம்பதிகளான அன்பு மற்றும் அகிலாவின் மூத்த வாரிசு தான் மோனிகா. அவளுக்கு அடுத்து அனன்யா தாரா என்ற இரு பெண்களும் அருண் என்ற ஒற்றை ஆண் பிள்ளையும் உள்ளனர்.

மோனி அவ்வளவு எளிதில் யாருடனும் பேசவோ பழகவோ மாட்டாள். பள்ளிப் படிப்பை முடித்ததும் கவுன்சிலிங் மூலம் தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பில் சேர சீட் கிடைத்தது. ஒருநாள் கல்லூரியை சுற்றி பார்ப்பதற்காக அன்பு மோனியை கல்லூரிக்கு கூட்டி சென்றார். பரந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே மரங்களுடன் ஒரே வடிவிலான கட்டிடங்கள் அணிவகுத்து நின்றதைப் பார்த்த மோனியின் மனதில் ஏனென்றே தெரியாமல் பயம் உண்டாயிற்று.

 அவள் மனதை மறைக்காமல் அன்புவிடம் கூறிய போது அது தேவையற்ற பயம் என்றார் அவர். வீட்டிற்கு வந்த பிறகும்கூட கல்லூரி திறக்கும் நாளை நினைத்தாலே  பயம் தான் அவளுக்கு.  ஆனாலும் வேறு வழி இல்லாததால் இதோ தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் கல்லூரியில் சேர தயாராகும் போது தான் அவளுடைய அம்மா அவ்வளவு அறிவுரைகளையும் சொல்லி முடித்தார்.

 அங்கு நடப்பது எதுவும் புரியாமல் அக்காவுக்கு மட்டும் நிறைய புதுத்துணி, தின்பண்டம்  கொடுத்தனுப்பறாங்க! நமக்கு மட்டும் எதுவும் இல்லையா என்று அருண் தாராவிடம் புலம்புவதை கண்டு மோனிக்கு சிரிப்பு வந்தது. வீட்டினரிடம் விடைபெற்று கிளம்பியவர்கள் மாலை வேளையில் விடுதியை சென்றடைந்தனர்..

விடுதியில் ஏற்கனவே ஐந்து பெண்கள் தங்கியிருந்தனர். விடுதி உரிமையாளரிடம் கூறிவிட்டு தன் மகளை விடுதியில் விட்டுவிட்டு அன்பு கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கல்லூரியில் முதல் நாள் என்பதால் மோனி இரவு முழுதும் சரிவர உறங்காமல் விழித்திருந்தாள்.

 அந்த விடுதியில் தங்கியிருந்த அனைவரும் ஒரே கல்லூரியில் படிப்பதால் அவர்கள் சென்று ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்யும் அளவு மட்டுமே பழகி இருந்ததால் கல்லூரி வாயிலை அடைந்ததும் அனைவரிடமும்  சிறு புன்னகையுடன்  விடைபெற்றுக்கொண்டு அவசரமாய் தன்னுடைய வகுப்பை நோக்கி ஓடினாள் மோனி.

 முதல் நாளே தாமதமாய் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவளை கல்லூரி பேராசிரியை ஒருவர் அருகே அழைத்து முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் எதிரே இருக்கும் வகுப்பறையில் இருப்பதாக கூறி அனுப்பினார். மோனியும் அந்த வகுப்பிற்கு சென்று முதல் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள்

பேராசிரியர் வந்து அனைவரையும் வரவேற்ற போது தான் அவள் தவறுதலாக வேறு வகுப்பிற்கு வந்திருப்பதை உணர்ந்தாள். வேறு வழி இன்றி மதியம் வரை அந்த வகுப்பில்  இருந்துவிட்டு மதிய உணவு இடைவேளையின் போது தன்னுடைய வகுப்பை கண்டுபிடித்து சென்றடைந்தாள்.

 ஏற்கனவே காலையில் சாப்பிடாதது தலைவலியைக் கொடுக்கவும் அமைதியாய் பென்ச்சில் தலைசாய்த்து படுத்துவிட்டாள்.

” எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவளிடம் உங்க பென்ச்சில் வேற யாராச்சும் வராங்களா என்று கேட்டாள் வேதா. அவளிடம் இல்லை என  தலையசைத்து விட்டு மீண்டும் படுத்தவளிடம் சாப்பிடலையா? என்று வினவினாள் வேதா. சாப்பிடனும் என்றவாறு எழுந்து வெளியே வந்து விட்டாள் மோனி.

வேதா  நன்றாக படிக்கும்  மாணவி என்பதால் வகுப்பில் ஏற்படும் சந்தேகங்களை மட்டும் அவளிடம் கேட்டு படித்தாள் மோனி. மற்றவர்கள் யாரிடமும் தேவையின்றி பேச மாட்டாள். கல்லூரி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்த நிலையில் மதிய உணவை விரைவாக உண்டு விட்டு சற்று காலாற நடப்பதற்காக வெளியே வந்த வேதாவின் கண்களில் மரத்தின் மீது சோர்வாக சாய்ந்து நின்றிருந்த மோனி தென்பட்டாள்.

இவ்வளவு சீக்கிரமாவா கேன்டீனுக்குப் போய் சாப்பிட்டு வந்துட்டா என்ற கேள்வி பூதாகரமாக எழவும் அடுத்த நாளும் அதே நேரம் அந்த மரத்தடிக்குச் சென்று பார்த்தாள். அன்றும்  அங்குதான் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மோனி. அன்று மாலை கல்லூரி முடிந்து கிளம்பும்போது மோனியிடம் நீ ஏன் மதியம் கேன்டீன் போறதில்லை என்று  கேட்டாள் வேதா. அதற்கு கேன்டீன்ல ரொம்ப கூட்டம் டோக்கன் வாங்குறதுக்கே நேரமாகுது அப்புறம் வகுப்புக்கு லேட்டா வந்தாலும் திட்டுறாங்க!

அதனால தான் மதியம் நான் சாப்பிடப்போறதில்லை என்றவளிடம் நாளையிலிருந்து உனக்கும் சேர்த்து நானே லஞ்ச் கொண்டு வரேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள் வேதா.

 பாவம் பயபுள்ள! வீட்ல போய் நல்லாத்திட்டு வாங்க போகுது என்றெண்ணிய மோனி தானும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். அடுத்த நாள் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே செல்ல எழுந்தவளை தடுத்து அவளிடம் தன்னுடைய லன்ச் கூடையை  கொடுத்தாள் வேதா.

வா மோனி! ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம். இதுல ரெண்டு செட் சாப்பாடு இருக்கு.உனக்கு எது வேணுமோ அதை எடுத்து சாப்பிடு என்று கூறியவளை அதிர்ச்சியாக பார்த்தாள் மோனி. என்ன சொன்ன மாதிரி செஞ்சு புட்டா! இப்ப நாம சாப்பிடறதா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தவளிடம் ஸ்பூனை கொடுத்துவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தாள் வேதா.

 நீண்ட நேரத்துக்கு பிறகே மோனியும் சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால் அடுத்த பத்து நிமிடங்களில் டப்பாவை காலி செய்துவிட்டே வேதாவை நிமிர்ந்து பார்த்தாள். இவ்வளவு பசியை வச்சுக்கிட்டு எப்படித்தான் ஒரு வாரமா பட்டினியாய் இருந்தாளோ என்றெண்ணிய வேதா சாப்பாடு ஓகே வா மோனி? என்று கேட்டாள். சாப்பாடு சூப்பர் வேதா.தயிர்சாதம் கூட இவ்வளவு நல்லா இருக்கும்னு இப்பதான் தெரியுது. தேங்க்ஸ்.பிரண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் என புன்னகைத்தாள் வேதா. நான்கு ஆண்டும் கல்லூரிப் படிப்பு முதற்கொண்டு நகர வாழ்க்கையும் சொல்லிக் கொடுத்து மதிய உணவையும் பரிமாறிய வேதாவினால் மனிதர்கள் மீது இருந்த தவறான தன்  கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டாள் மோனி.

.

Exit mobile version