மங்களா..-சங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 189 மங்களா..-சங்கர்

மைலாப்பூர் தேவடித் தெரு பூர்ண மங்களா ஹோட்டல் நான்காவது பிராஞ்ச்  திறப்பு விழா..

தேவன் மற்றும் பணி புரிபவர்கள் வி ஐ பி 

வருகைக்குக் காத்திருக்கின்றனர்.

பி.எம்..டபள்யூ  காரிலிருந்து மங்களா 

இறங்கி கம்பீரமாக நடந்து வருகிறாள்.!

வணக்கம்,

குட்மார்னிங், 

நல்லா இருக்கீங்களா அம்மா?

என்று யாவரும் வரவேற்க ஒவ்வொருவரையும் புன்சிரிப்புடன் விசரித்து  விட்டு வருகிறாள் மங்களா…

குட் மார்னிங் முதலாளி அம்மா 

தேவன் நமட்டுச் சிரிப்புடன் விஷ் செய்ய..

ஏங்க என்னை கலாட்டாவா செய்யுறீங்க? 

என்று  சிரிப்புடன்

வரும் மங்களாவைப் பார்க்கிறார் தேவன்.

மயில் கழுத்துக் கலரில் மைசூர் சில்க் புடவை.

சிம்பிளாக கை களில் வளை.

காதில் டாலடிக்கும் வைரத் தோடு..

சற்றே எட்டிப் பார்க்கும் இரண்டொரு நரை முடிகள்.

அன்று பார்த்த மங்களா அப்படியேதான் இருக்கிறாள்.!

திறப்பு விழா முடிந்ததும்

மங்களாவும் தேவனும் எல்லா வொர்கர்களையும் டிபன்  காப்பி சாப்பிட வைத்து 

வேலை தொடங்கி ஹோட்டல் களை கட்டி விட்டது.!

மங்களா அடுப்படி வரை போய்விட்டு…

சாப்பிடும் வாடிக்கையாளர்களை  விசாரித்து விட்டு ஒரு டேபிளில் அமருகிறாள்.!

தேவன் வெள்ளை வேட்டி ,ஷர்ட் நெற்றியில் கீற்றாக விபூதி குங்குமத்துடன் கல்லாவில் அமருகிறார்.

ஆண் பெண் இரு குழந்தைகளுடன் ஒரு ஜோடி வந்து உட்காருகிறார்கள்.!

அவர்களைப் பார்த்ததும் தேவனும் மங்களாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள் கின்றனர்.!

சுரேஷ் அவர்கள் பையன் …

மேனகா மருமகள்.

குழந்தைகள்..

பையன் யூ.எஸ்  சென்று செட்டிலாகி விட்டாதாய்க் கேள்விப் பட்டோமே மங்களா?

ஆமாங்க அவங்க சாப்பிட்ட பின் பேரரிடம் சொல்லி ரூமிற்கு வரச் சொல்லுங்க…

ரூமில் அப்பா அம்மாவை  இந்த உயர்ந்த நிலையில் பார்த்த சுரேஷிற்கும் மேனாகாவிற்கும்

வாயடைத்துப் போய்விட்டது.. சங்கடத்தில் நெளிந்தார்கள்!

மங்களா தன் கழுத்திலிருந்த இரு செயின்களை இரு குழந்தைகளுக்கும் போட்டு விட்டு…

“என்ன சுரேஷ் சௌக்கியமா?

எப்ப வெளி நாட்டிலிருந்து வந்த?” என்றதும்…

ஏதோ   இருக்கோம் அம்மா  என்ற

சுரேஷ்….

அமெரிக்காவில் ஆட்சி  மாற்றத்தால் வேலை போயிடுத்து அம்மா.

மாமாவிற்கும் உடம்பு முடியாம வீட்டை விற்று செலவு செய்யும்படி ஆயிற்று.

இப்ப  துவாரகா காலனியில் ஒரு 

ரோ ஹவுசில் இருக்கிறோம்.

இனிதான் வேலை தேடணும்!

நீங்க இங்க எப்படி?

கோபு மாமாவை உனக்கு ஞாபகம் இருக்கா சுரேஷ்?

அவங்க ஹோட்டல் இது

நானும் அப்பாவும் அவரிடம் வேலை செய்கிறோம். 

மங்களாவை 

தேவன் ஒன்றும் புரியாமல் 

பார்கிறார்.!

டிரைவரைக் கூப்பிட்டு

கோபால் இவங்களை டிராப் பண்ணிடுங்க !

என்று தன் காரியத்தைப் பார்க்கிறாள் மங்களா.

இரவு ஆழ்ந்து தூங்கும் மங்களாவின் காலைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் தேவன்.

ஐய்ய  என்னங்க நீங்க? என்று காலை இழுத்துக் கொண்டு எழுந்த மங்களாவிடம்….

ஏன் மங்களா பையனைப் பார்த்தது முதல் ஒன்றும் பேசாம இருக்க.?

எனக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்துட்டுதுங்க.

நாம விரும்பி காதல் கல்யாணம் செய்து கொண்டோம் ஆனா

உங்க அப்பாவின் கோபத்தால  நம்ப ஊரை விட்டே இங்க வந்தோம்.

நீங்க சர்வரா இருந்து வந்த வருமானத்தில் வாயைக் கட்டி 

வயத்தைக் கட்டி

பையனைப் படிக்க வச்சம் …

அவன் என்ஜினியர் ஆகிப் பெரிய  வேலை கெடச்சவுடன்  காதலித்த பணக்காரப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு அவங்க வீட்டு மாப்பிள்ளையாகவே மாறிட்டான்.!

நம் பேரனுக்கு தொட்டில் போட நாம் போனது உங்களுக்கு ஞாபகம் இருக்கா.?

நாம்ப வசதி இல்லாதவங்க என்பதைத் தவிர என்ன தப்பு பண்ணினங்க ?

குழந்தைக்கு வாங்கின செயினைப் போட குழந்தையைத் தூக்கினபோது..

மேனகாவோட அம்மாக்காரி …

என்னங்க உங்க கை பாத்திரம் தேய்த்து வெள்ளையா இருக்கு?

பொகை படிஞ்ச கையோட

குழந்தையைத் தூக்காதீங்க .

ஏதேனும் வியாதி வந்துடப் போகிறது..?.

என்று சொன்னவுடன் அதிர்ந்து போய்ட்டேன்!

மேலும் அந்த அம்மா, ஆமா வாயால பூ என்று ஊதினால் காத்துல பறக்கும்..

இது ஒரு செயின் எனப் பெருமையா   

என் பேரனுக்குப் போட வந்துட்டாங்க?

என தொட்டில் ஓரத்தில போட்டாங்க.

நம்ப பையன் பக்கத்தில இருந்தவன் ஒண்ணும் அவங்களைக் கேக்கல.

ஏம்மா ஏதோ மரியாதைக்குக் கூப்பிட்டா …

இப்படிப் பஞ்ச கோலத்தோடு இங்க வரணுமா.?

மானத்தை வாங்குறீங்களே? என்றதும்.மனது வேதனையில துடிச்சுப் போயிடிச்சு…

சாப்பிடப் போன போது கூட முதல் பந்தியிலேயே வந்து உட்காரணுமா ?

விருந்தாளி எல்லாம் இருக்காங்களே

என  உட்கார்ந்த நம்மை எழுப்பியதும்  என் மனதில் ஆறாத ரணமா 

பதிஞ்சுடுத்து.!

நாமும் பணம் சம்பாதித்து சொசைட்டியில் நிமிர்ந்து நிக்கணும் என்ற வைராக்கியம் எழுந்தது..

நமக்கு அடைக்கலம் கொடுத்த 

கோபி மாமா 

கோகிலமா மாமிக்கு நாம் கோயிலெடுத்து கும்பிடணும்!

நமக்கு வேலை கொடுத்து காப்பாத்தினது மட்டுமா?

அவங்களுக்குக் குழந்தை குட்டி இல்லை என்று கடைசி காலத்தில் ஹோட்டலையும் வீட்டையும் நம்ப பேருக்கே எழுதி வைத்துட்டாங்களே?

நம்ம பையன் சுரேஷ் ரொம்ப செட் பாக் ஆக இருக்கிறானே அதை கவனிச்சயா மங்களா?

எனக்கு யார் மேலேயும் 

வருத்தமோ கோபமோ இல்லை.

கன்று மிதித்து தாய் முடமாகிடுமா.?

சுரேஷ் அவன் இருக்கிற படி இருக்கட்டும்.

நீர் அடித்து நீர் விலகிடுமா மங்களா?

நான் அப்படிச் சொல்லலை….

நாம் வெளியிலிருந்தே அவர்களை சப்போர்ட் செய்து தூக்கி விடுவோம்.!

அவர்களுக்கு இஷ்டம்  இருந்தால் வந்து போகட்டுமே..?

ஏன் மங்களா சந்தோஷமா இருக்கும் நேரத்தில் பழசை ரீவைண்ட் செய்து மனதில் துக்கத்தை  ஏத்திக்கணும்?

நீ ஜெயிச்சுட்ட !

இல்ல இல்ல… 

நாம ஜெயிச்சுட்டோம்!

என்று சொல்லிய தேவன் மங்களாவின் கால்களைப் பிடித்துவிடத் துவங்கினார்.

அவர்கள் கடந்த வந்த வாழ்க்கையின் சாட்சியாக அங்கிருந்த  பழய ராலி டேபிள் ஃபான் சந்தோஷ ஹம்மிங்குடன்

இப்படியும் அப்படியும் தலையை அசைத்துக் கொண்டே சுழன்று கொண்டிருந்தது.

Exit mobile version